அண்ணல் காந்தி
குஜராத்(து) மாநிலத்தில் கொலுவிருந்த செல்வக்குடும்பத்தில் பிறந்திட்ட சீமான்!
குஜராத்(து) மாநிலத்தில் கொலுவிருந்த செல்வக்
குடும்பத்தில் பிறந்திட்ட சீமான்!
நிஜமென்ற ஒன்றைமட்டும் நித்தமுமே பேசி
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கோமான்!
உப்பினிலும் நோன்பினிலும் உணர்வுகளைக் காட்டி
ஒத்துழையாமை அறமாகும் என்றார்!
துப்பாக்கி, பீரங்கி தோற்றோடச் செய்து
தோள்வலியை மனவலியால் வென்றார்!
அகிம்சையினை அனைவர்க்கும் ஆயுதமாய்த் தந்து
ஆதிக்கம் எதிர்த்துநின்ற தீரர்!
சகிப்பென்னும் குணம்கொண்டு சத்தியத்தின் பேரால்
சாதித்த விடுதலையின் வீரர்!
தீண்டாமை, பெண்ணடிமை, மதுஅரக்கன் என்ற
தீமைகளை வேரறுத்தார் தேடி!
வேண்டாமே பிரிவினைகள், வெறுத்தொதுக்கி நாமும்
உயர்ந்திடுவோம் ஒற்றுமையால் கூடி!
எளிமையுடன் தூய்மையின் இலக்கணமாம் அண்ணல்
"இந்தியாவின் தந்தை'யெனச் சொல்வோம்!
தெளிவான சிந்தனையும் தொலைநோக்கும் கொண்டு
தினம்உழைத்து அவர்வழியில் வெல்வோம்!