ஒப்பரிய உலக நகரங்கள் லண்டன்
பல மலைகளால் சூழப்பட்டுள்ளதால் பிற நகரங்களைப்போல் அல்லாமல் வட்ட வடிவமாக வளர்ச்சி பெற்று வருகிறது. சுமார் 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள லண்டன் நகரத்தைத் தழுவியவாறு தேம்ஸ் நதி ஓடுகிறது.
பல மலைகளால் சூழப்பட்டுள்ளதால் பிற நகரங்களைப்போல் அல்லாமல் வட்ட வடிவமாக வளர்ச்சி பெற்று வருகிறது. சுமார் 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள லண்டன் நகரத்தைத் தழுவியவாறு தேம்ஸ் நதி ஓடுகிறது.
லண்டன் நகரம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமை வாய்ந்த நகரம். கி.பி. 43-ஆம் ஆண்டில் ரோமானியர்களால் கண்டறியப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இதனைத் தலைநகராகக் கொண்டுவிளங்குகிறது. லண்டனின் எல்லைகள் இப்போது விரிவடைந்துவிட்டன. ஆயினும் பண்டையத் தலைநகரைத் தன்னுள் ஒரு பகுதியாக உள்ளடக்கி, பழமையைப் பாதுகாத்து வருகிறது.
பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பாக் கண்டத்தின் கலை, இலக்கியம், பொருளாதாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு அடையாளமாக லண்டன் நகரம் விளங்குகிறது. பற்பல இனம், மதம், கலாசாரம் மற்றும் மொழி பேசுகிற மக்கள் சுமார் ஒன்றரைக் கோடிப்பேர் வாழ்கின்றனர். முன்னூறு மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.
உலகில் லண்டன் சிறந்த போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் பாலமாக லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் விளங்குகிறது. உலகிலேயே அதிக அளவு பன்னாட்டு விமானங்களையும், பயணிகளையும் சந்திக்கும் இடமாக லண்டன் திகழ்கிறது. லண்டன் பாதாள ரயில்கள் ஐரோப்பாவில் நீளமானதாகவும் பழமையானதாகவும் உள்ளன. லண்டனில் இயங்கும் பேருந்துகளைத் தினமும் அறுபது லட்சம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
பாராளுமன்ற இல்லம்: லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் உள்ள பாராளுமன்றத்தைச் சுற்றிலும் ஐக்கிய அரசின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன. "உலகப் பாராளுமன்றங்களின் தாய்' என இது அழைக்கப்படுகிறது. பிரதமர் இல்லமான எண் 10, டவுனிங் தெரு இங்குதான் உள்ளது. வெஸ்ட் மினிஸ்டர் மாளிகை என்றழைக்கப்படும் லண்டன் பாராளுமன்றத்தில் பிரபுக்கள் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை என்ற இரண்டும் உள்ளன. இத்துடன் மணிக்கூண்டு கோபுரம், விக்டோரியா கோபுரம் ஆகியவையும் இங்குள்ளன.
1834-ஆம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் அழிந்துபோன இந்தக் கட்டடம் 30 ஆண்டுகள் உழைப்பில் மீண்டும் பழைய வடிவத்திலேயே புதிய பொலிவுடன் கட்டப்பட்டது.
புனித பால் தேவாலயம்: பழமை வாய்ந்த இந்த தேவாலயத்தின் மாடக் கூண்டு ரோம் தேவாலயத்திற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தேவாலயமாகத் திகழ்கிறது. கி.பி. 600-ஆம் ஆண்டில் மரத்தினால் உருவாக்கப்பட்ட இந்த தேவாலயம் பலமுறை புதுப்பிக்கப்பட்டு கி.பி. 1600-இல் புதிய வடிவம் பெற்றது.
பிக்பென் கடிகாரம்: லண்டன் நகரின் அடையாளங்களில் ஒன்றாகப் புகழ்பெற்ற பிக் பென் கடிகாரம் விளங்குகிறது. முதலில் இது ஸ்டீபன் கோபுரம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் இதில் நிறுவப்பட்ட மிகப்பெரிய மணியின் அடையாளமாக பிக் பென் என்ற பெயர் பெற்றது. இப்போதும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இரவில் நடைபெற்றால், அதனைக் குறிக்கும் விதமாக இந்தக் கோபுரத்தின் உச்சிவிளக்கு எரியவிடப்படுகிறது.
லண்டன் கோபுரம்: பகைவர்களிடமிருந்து நகரைப் பாதுகாப்பதற்காக கி.பி. 1070-இல் லண்டன் கோபுரம் கட்டப்பட்டது. இதில் வெள்ளைக் கற்களால் கட்டப்பட்ட வெள்ளைக் கோபுரம் உட்பட, இருபது கோபுரங்கள் உள்ளன. இங்கு மன்னர்கள் பயன்படுத்திய ஆடை ஆபரணங்கள், அரசர்கள் உபயோகித்த ஆயுதங்கள், அரசு நடத்திய பல போர்களில் கைப்பற்றிய அன்னிய நாட்டு ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பக்கிங்ஹாம் அரண்மனை: இங்கிலாந்து அரச குடும்பத்தினர்களுக்குச் சொந்தமானது. இன்றும் இதன் ஒரு பகுதியில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசியார் அரண்மனையில் இருந்தால் அந்தச் செய்தி இங்கு கொடியைப் பறக்க விடுவதன்மூலம் அறியப்படுகிறது. லண்டனில் உள்ள சுற்றுலாத்தலங்களில் அதிகமான மக்கள் வரும் இடம் இதுதான்.
சுழலும் சக்கரம்: பழமைகள் நிறைந்த லண்டன் நகரில் புதுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது மாபெரும் சக்கரமாகும். இது "லண்டன் ஐ' என்று அழைக்கப்படுகிறது. புதிய நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் ஜூப்ளி தோட்டத்தில் இங்கிலாந்து விமான நிறுவனத்தினரால் இது கட்டப்பட்டது. 1,700 டன் இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சக்கரம் ஓராண்டில் பணி முடிக்கப்பட்டது. சக்கரத்தின் ஒவ்வொரு கூண்டிலும் 25 பயணிகள் அமர்ந்து சுற்றி வரலாம். ஒருமுறை சுற்றிவர 30 நிமிடங்கள் பிடிக்கும். இச்சக்கரத்தில் வலம் வரும்போது லண்டன் நகரை முழுமையாகப் பார்க்கலாம்.
காவென்ட் தோட்டம்: சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம் இதுவாகும். இது வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள் நிறைந்த பகுதி. இதன் மையத்தில் உள்ள கண்ணாடி மாளிகையைச் சுற்றிலும் அமைந்துள்ள தோட்டம் முன்னாளில் காய்கறி மற்றும் பழக்கடைகள் இருந்தன. இதன் அருகில் உள்ள தேவாலயத்திற்கு காய்கறிகள் சென்றதால் இதற்கு காவென்ட் தோட்டம் என்று பெயர் வந்தது.
பச்சை நகரம்: விண்ணைத் தொடுமளவுக்கு மிக உயரமான கட்டடங்களுக்கு மத்தியில் "பச்சை நகரம்' என்று அழைக்கப்படும் பெருமையைக் காக்க லண்டன் நகருக்குள் பல பூங்காக்கள் அமைந்துள்ளன. அவற்றுள் மிகச் சிறப்பானவை ஹைட் பூங்கா, கென்சிங்டன் பூங்கா, பச்சைப் பூங்கா, ஜேம்ஸ் பூங்கா ஆகியவையாகும்.
ஹைட் பூங்கா ஓடுபவர்கள், நடப்பவர்கள் நீந்துபவர்கள் மற்றும் குதிரைச் சவாரி செய்பவர்கள் ஆகியோருக்கு மிகவும் விருப்பமானது. இந்த அரசினர் பூங்கா 360 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றிலும் மேலும் பல பூங்காக்களும் உள்ளன. ஹைட் பூங்காவின் ராட்டன்ரோ என்ற மன்னர் பாதை அமைந்துள்ளது. 4 மைல் நீளமுள்ள இந்தப் பாதை முன்னாளில் மன்னர்கள் நடைப்பயிற்சி செய்த இடம்.
இந்தப் பூங்காவில் ஒரு பகுதியில் "புகழ்பெற்ற பேச்சாளர்களின் மூலை' உள்ளது. இந்த இடத்தில் பொதுமக்கள் இலக்கியம், அரசியல், பொருளாதாரம் என எதைப் பற்றியும் பேசலாம்.
கோபுரப் பாலம்: லண்டன் நகரத்தின் இந்தக் கோபுரப் பாலம் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. 43 மீட்டர் உயரமுள்ள பிரமாண்டமான இரண்டு கோபுரங்களுக்கு இடையில் அமைந்துள்ளதால் கோபுரப் பாலம் என்று பெயர் பெற்றது. 200 அடி நீளமுள்ள இந்தப் பாலம் பெரிய கப்பல்கள் கடக்க வேண்டிய தருணத்தில் உயர்த்தும்வகையில் கட்டப்பட்டுள்ளது.
டிராஃபல்கர் சதுக்கம்: லண்டனின் மையப்
பகுதியில் உள்ள மிகப்பெரிய சதுக்கம் இது. இதன் மையத்தில் "நெல்சன் தூண்' அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டிராஃபல்கர் போரில் பிரெஞ்சுப் படையை வீழ்த்திய தளபதி நெல்சன் நினைவாக அமைக்கப்பட்டது. 178 அடி உயரமுள்ள தூணின் உச்சியில் 18 அடி உயரமுள்ள நெல்சன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. தூணின் பீடத்தை நான்கு சிங்கங்கள் தாங்கி நிற்கின்றன. இந்தச் சதுக்கத்தில் பல நீர்ச் சுனைகளையும் காணலாம்.
இதே சதுக்கத்தின் வடக்குப் பகுதியில் "தேசிய ஓவிய அரங்கு' உள்ளது. இதில் லியோனார்டோ டாவின்சி போன்ற புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த 2,000-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
லண்டன் நகரில் அருங்காட்சியகங்கள், நினைவாலயங்கள், பூங்காக்கள், கட்டடங்கள் எனச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அற்புதமான இடங்கள் உள்ளன. பல நாட்கள் தங்கியிருந்து பார்க்க வேண்டிய சிறந்த நகரம் லண்டன்.