முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: வாழ்க வளமுடன்!

கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாருகேட்டதை எல்லாம் தந்தாரு

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:50 AM
பகிர்:

கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாரு

கேட்டதை எல்லாம் தந்தாரு

வருடம் ஒருநாள் வருவாரு

"வாழ்க வளமுடன்' என்பாரு!

அன்னை மேரி சூசைக்கு

அன்பு மகனாய் இறையருளால்

இன்று தானே உலகத்தில்

இயேசு பெருமான் அவதரித்தார்!

மாட்டுத் தொழுவில் பிறந்திட்டார்!

வானவர் இருவர் ஏந்திட்டார்!

பாட்டுத் தலைவனாய்ப் பாவலரும்

தேம்பாவணியில் புகழ்ந்திட்டார்!

""கேட்டுப் பாருங்கள் கிடைத்துவிடும்...

தட்டிடக் கதவுகள் திறந்துவிடும்

வாட்டும் சுமைகளை என்மீது

வைத்துச் சுகம்பெற வாருங்கள்

கன்னம் ஒன்றில் அறைந்தாலும்

காட்டுக மற்றதைப் பொறுமையுடன்

மன்னிப்பு என்பது மானுடத்தின்

மாண்புறு குணமாம்'' என்றுரைத்தார்!

ஊமையைப் பேச வைத்திட்டார்!

ஊனம் உற்றவர் நடந்திட்டார்!

"ஆமையாய் அடங்கிக் கிடக்காமல்

ஆயிரம் கேள்விகள் கேள்' என்றார்!

மலைமேல் நின்று உரைத்திட்ட

மணிகள் "பைபிள்' நூலாகும்!

நிலையில் அவற்றின் வழி நடப்போர்

நிலத்தில் "கிறித்தவர்' எனப்பட்டார்!

அன்பும் கருணையும் மிகக் கொண்டு

அனைவரும் இங்கே ஒற்றுமையாய்

இன்புற வாழ வழி சொன்ன

இயேசு நாதரைப் போற்றிடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.