அழகான மலர்!
பேரரசர் அக்பர் தன் அமைச்சர்களுடன் பல விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர்களை நோக்கி,
பேரரசர் அக்பர் தன் அமைச்சர்களுடன் பல விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர்களை நோக்கி, ""உலகிலேயே அழகான மலர் எது?'' என்று கேட்டார். அமைச்சர்கள் அனைவரும் தீவிரமாய் யோசித்தனர்.
""அரசே! மல்லிகைப் பூதான் அழகான மலர்''என்றார் ஓர் அமைச்சர். அடுத்தவர், ""சாமந்திப் பூவைப்போல அழகான மலர் வேறொன்றும் இல்லை'' என்றார். இன்னொரு அமைச்சர்,""ரோஜாவுக்கு இணையான மலர் உலகில் இல்லவே இல்லை'' என்றார் அழுத்தமாக!
எல்லாவற்றையும அமைதியாகக் கேட்ட அக்பர், சிந்தனை செய்து கொண்டிருந்த பீர்பாலைப் பார்த்தார். சரியான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு! அரசரின் குறிப்பறிந்த பீர்பால், ""அரசே! உலகத்திலேயே அழகான மலர் பருத்திதான்''என்றார் அமைதியாக!
எல்லா அமைச்சர்களும் குபீரென்று சிரித்துவிட்டனர்!
அரசரும் சிரித்துக்கொண்டே, ""பீர்பால்! பருத்தியா அழகான மலர்? அது எப்படி?'' என்று கேட்டார்.
அதற்கு பீர்பால், ""அரசே! பருத்தியிலிருந்து எடுக்கும் பஞ்சைக் கொண்டு அழகான ஆடைகளை உருவாக்குகிறோம்! புடவை, படுக்கை, போர்வை, திரைச்சீலை, விரிப்பு, ஆகிய எல்லாவற்றையும் கண்ணைக் கவரும் வண்ணங்களில் பருத்தியின் நூலால் உருவாக்குகிறோம்! நீண்டகாலம் வண்ணங்களுடன் மிக அழகாய் இவை இருக்க பருத்திதான் காரணமாகிறது! எனவே பருத்திதான் மிக அழகான மலர்!''என்று கூறினார். அமைச்சர்கள் வெட்கத்தால் அமைதியாகி விட்டனர். அக்பர் பீர்பாலின் அழகான பதிலைக் கேட்டு மகிழ்ந்தார்!