கருவூலம்: "பொன் விழா' கண்ட சீன "தமிழ்' வானொலி!
சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கி, 2015 ஆகஸ்டு 1ஆம் தேதியுடன் 53 வருடங்கள் ஆகிவிட்டது! சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் அனைவரும் சீனர்கள்! அழகாகத் தமிழ் பேசுகிறார்கள்!
சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கி, 2015 ஆகஸ்டு 1ஆம் தேதியுடன் 53 வருடங்கள் ஆகிவிட்டது! சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் அனைவரும் சீனர்கள்! அழகாகத் தமிழ் பேசுகிறார்கள்! இவர்கள் தமிழில் புலமை பெற்றிட, தஞ்சைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மற்றும் புதுவைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பட்டப் படிப்புகளை முறையாக பயின்றது குறிப்பிடத்தக்கது!!
சீன ரேடியோ இன்டர்நேஷனல் 1941ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் தொடங்கப்பட்டது. தமிழ் ஒலிபரப்பு 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முறையாகத் தொடங்கப்பட்டது!
சீனப் பல்கலைக் கழத்தின் ஓர் அங்கமாக உள்ள பீகிங் ஒலிபரப்புக் கல்லூரியில் தமிழ்ப் பட்டப்படிப்பு 1960இல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20 மாணவர்களும் அதன்பின் 1963இல் 20 மாணவர்களும் சேர்ந்து படிக்கத் தொடங்கினர்!
தொடக்கத்தில் அரை மணி நேரமே ஒலிபரப்பி வந்த தமிழ்ச்சேவை 2004முதல் 1மணி நேரம் ஒலிபரப்பானது. தினமும் இந்திய நேரம் இரவு 7.30 மணி முதல் 8.30 வரையும், மீண்டும் 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்புச் செய்யப்படுகிறது. சிற்றலையில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிற்றலை வானொலிப் பெட்டியில் மட்டுமே கேட்கமுடியும்.
இவர்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம், சீனப் பண்பாடு, சீனக்கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீன சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை மற்றும் கலாசாரத்தினை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.
தமிழ் மூலம் சீனம் என்னும் பெயரில் ஒலிபரப்பி வரும் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ் பெற்றது. நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாடத் திட்டங்களின்படி நூல்களும் அச்சிடப்பட்டு நேயர்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கப்படுகின்றன.
சீன வானொலி இப்போது சிற்றலை ஒலிபரப்பு மட்டுமல்லாமல் இலங்கையில் பண்பலை ஒலிபரப்பு, இணையதளம், கைப்பேசி இணையதளம், தமிழ் ஒலி என்னும் இதழ் ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தியா, இலங்கை, மத்திய கிழக்குப் பிரதேசம், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் நேயர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் கடிதங்களை தமிழ்ப்பிரிவுக்கு அனுப்புகிறார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரிவின் பொன்விழா ஆண்டாகும்.
இந்தச் சீன வானொலி தமிழ்ப்பிரிவு தமிழர்களுக்கு உண்மையான சீனாவை அறிமுகப்படுத்தி சீன இந்திய நட்புறவையும், பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் வளர்க்க முயற்சி செய்து வருகிறது.
நேயர்களின் கோரிக்கையை ஏற்று 1987ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாளன்று ஒரே மாதிரியான இரண்டு அரை மணி நேர ஒலிபரப்புகள், வேறுபட்ட இரண்டு அரை மணி நேர ஒலிபரப்புகளாக மாற்றப்பட்டன. சீன வானொலியில் இவ்வாறு செய்த ஒரே ஒரு மொழிப்பிரிவு என்னும் பெருமை தமிழ்ப் பிரிவையே சாரும்!
சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு 1963ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒரு நாள் கூட எக்காரணத்திற்காகவும் நிகழ்ச்சி தடைப்படாமல் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
சீன வானொலியில் தமிழ்ப் பண்பலை நிகழ்ச்சி 2010ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் இலங்கை தலைநகர் கொழும்பில் ஒலிபரப்பாகி வருகிறது. நாள் தோறும் 4மணி நேர நிகழ்ச்சிகள் பண்பலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை வானொலி ஒலிபரப்பு, ஊடக இணையம், பண்பலை ஒலிபரப்பு, செல்பேசி செய்தி வெளியீடு ஆகியவை இடம் பெறும் பன்முகச் செய்தி ஊடகமாக தமிழ் ஒலிபரப்பு மாறியுள்ளது.
சீனக் கலாசார, பண்பாட்டுச்செல்வங்களைத் தமிழிலும் தமிழ்க் கலாசார, பண்பாட்டுச்செல்வங்களை சீன மொழியிலும் கொண்டு சென்று தமிழர்கள், சீனர்கள் இடையில் பரிமாற்றத்தை வளர்ப்பதன் மூலம் இந்தியர்கள், சீனர்கள் இடையில் நட்பையும் என்றும் நிலைக்கும் தொடர்பையும் வளரச் செய்வதை தமிழ்ப்பிரிவு தன் தலையாய பணியாகக் கருதி செயல்பட்டு வருகிறது.
2000ஆம் ஆண்டு தொடங்கி கட்டுரை மற்றும் பொது அறிவுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன. அதாவது அப்போட்டியில் பங்கு கொண்டு சிறப்பு நேயராகத் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுபவர் சீனாவில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்.
தற்போதைய தமிழ்ப்பிரிவின் தலைவர் பெயர் "கலைமகள்' என்பதாகும். "வாணி' என்பது துணைத்தலைவர் பெயராகும். தமிழ்ப்பிரிவின் முன்னாள் தலைவர் தி.கலையரசி, 2009 ஆம் ஆண்டு சீன வானொலியின் முதன்மை அறிவிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவிப்பாளர் பதவியில் இது மிக உயர்ந்ததும், புகழ் மிக்கதும் ஆகும்!
தற்போது தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் பணியாளர்களின் வயது சாரசரியாக 28 என்பது ஆச்சரியமான ஒன்றாகும். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு இணையதளப் பொறுப்பாளர் "மதியழகன்' என்பவர் ஆவார். இந்தப் பணியாளர்கள் அனைவரும் சீனர்களே!
சீன வானொலி தமிழ்ப்பிரிவில் பணியாற்றும் சீனர்கள் அனைவரும் தங்களது பெயர்களைத் தூய தமிழில் மாற்றிக் கொண்டு ஒலிபரப்பி வருகின்றனர்!
சுந்தரம், கலையரசி, மலர்விழி, கலைமகள், வான்மதி, ஜெயா, தேன்மொழி, ஈஸ்வரி, சரஸ்வதி, ஓவியா, இலக்கியா போன்ற அறிவிப்பாளர்களின் பெயர்கள் சீன வானொலியின் நேயர்கள் மனதில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர்களாகும்.