முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: ஆனையும் பூனையும்

ஆனை மலையின் காட்டினிலே அன்பு என்னும் ஆனையாம்!

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

ஆனை மலையின் காட்டினிலே

அன்பு என்னும் ஆனையாம்!

ஆனையின் நண்பன் ஒரு பூனை

அறிவு என்பது அதன் பெயராம்!

ஒருநாள் எலியைப் பிடித்திடவே

ஓடிய பூனை குழிக்குள்ளே

சறுக்கி விழுந்ததாம் மேலேவர

தாவித் தாவிக் களைத்ததுவாம்!

அன்பு வந்தே பார்த்ததுவாம்

""அடடா அறிவு என்னவாச்சு?

இந்தக் குழிக்குள் ஏன் போனாய்?

எப்படி மேலே வந்திடுவாய்?''

என்றதாம் அதற்குப் பூனையுமே

""எலியை விரட்டி வரும்போது

இங்கே சறுக்கி விழுந்துவிட்டேன்

என்னை மேலே தூக்கிவிடு''

என்று சொன்னதாம் துதிக்கையினால்

இழுத்து மேலே விட்டுவிட்டு

""சின்னக் கால்கள் குச்சியைப்போல்

சறுக்கி விட்டது உன்னையுமே!

இரும்புத் தூண்கள் போன்றேதான்

எனக்குக் கால்கள் இருப்பதனால்

சறுக்கி உன்போல் விழமாட்டேன்''

செருக்குடன் சொன்னதாம் ஆனையுமே!

""சரி,சரி என்னைப் போல் உனக்கு

சறுக்கிடும் காலம் வரும்போது

புரிந்து கொள்வாய் அதுவரையில்

பொறுத்திரு என்றதாம் பூனையுமே!

நாள்கள் கடந்தன அன்றொருநாள்

நடந்து சென்ற ஆனையுமே

காட்டுத் தழையின் மேல்வைத்த

காலும் சறுக்கியே விழுந்ததுவாம்!

குழிக்குள் என்னை விழவைக்கும்

குண்டர் சதிஎன அறியாமல்

குழியின் விளிம்பில் கால்வைத்து

குப்புறச் சறுக்கி விழுந்தேனே

எண்ணிய அன்பு பிளிறியதாம்

""எனக்கு உதவிட வாருங்கள்!''

அந்தக் குரைக் கேட்டதுமே

அறிவும் ஓடி வந்ததுவாம்!

""சொல்வதை நன்றாய் கேட்டுக்கொள்

சுருக்காய் மேலே வந்திடலாம்''

சொல்லிய பூனை மண்ணையுமே

சுரண்டி குழிக்குள் தள்ளியதாம்!

அங்கே கிடந்த தழைகளையும்

அள்ளிப் போட்டதாம் குழிக்குள்ளே!

அன்பும் அவற்றை காலின்கீழ்

அழுத்தி மேலே ஏறியதாம்!

""ஆனை யாயினும் அடிசறுக்கும்

அன்றே சொன்னாய் நண்பா, நீ

நான் அதை உணர்ந்தேன் அனுபவித்தே

நன்றி!'' என்றதாம் ஆனையுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.