கருவூலம்: முல்லைப் பெரியாறு அணை!
மேற்குத் தொடர்ச்சி மலையில் 3500 அடி உயரத்தில் அடர்ந்த காடு. அங்கே ஓடி வரும் இரண்டு ஆறுகள். ஒன்று பெரியாறு. இன்னொன்று முல்லை ஆறு
மேற்குத் தொடர்ச்சி மலையில் 3500 அடி உயரத்தில் அடர்ந்த காடு. அங்கே ஓடி வரும் இரண்டு ஆறுகள். ஒன்று பெரியாறு. இன்னொன்று முல்லை ஆறு. இவ்விரண்டு ஆறுகளுக்கு இடையே கட்டப்பட்டதுதான் முல்லைப் பெரியாறு அணை.
தேனி மாவட்டம் குமுளியை அடுத்துத் தேக்கடிக்கு அருகே இருக்கிறது இந்த அணை! இந்த அணை கட்டப்பட்ட செய்திகளை அறிவோமா!
திட்டமும் அனுமதியும்
1815ஆம் ஆண்டு ஆங்கிலப் பொறியாளர் "கேப்டன் வார்ஸ்' என்பவர் இங்கு ஒரு அணை கட்ட ஆய்வினை மேற்கொண்டார். பிறகு 1827ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ரெவின்யூ போர்டு உறுப்பினர் "காட்சன்' என்பவர் அணைக்கான திட்ட அறிக்கையை அரசுக்குக் கொடுத்தார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு இதை பரிசீலித்தது.
அணையைக் கட்ட திட்டமிட்ட காட்டுப் பகுதி தமிழகத்தின் (அப்போதைய சென்னை மாகாணம்) பகுதியில்தான் இருந்தது. இப்போது முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடத்திலிருந்து 62கி.மீ. தள்ளியிருக்கும் கொட்டாரக்கரை, அடூர், என்னும் ஊர்களில் இருந்துதான் கேரள எல்லை (அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம்) தொடங்கியது.
1862ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசு அந்த இடம் திருவிதாங்கூர் சமஸ்தானப்பகுதி என்று தவறாக நினைத்து அங்கு அணை கட்ட திருவிதாங்கூர் அரசுக்குக் கடிதம் எழுதியது. அரசும் அனுமதி வழங்கியது.
பென்னி குக்!
முல்லைப் பெரியாறின் தந்தை என்றும் புரவலர் என்றும் கருதப்படுபவர் "பென்னி குக்' என்ற பொறியாளர் ஆவார். அவரிடம் முல்லைப் பெரியாறு அணை கட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
முல்லை ஆறு மற்றும் பெரியாறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிச் சென்று கடலில் கலக்கின்றன. இந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அணை கட்டும் பணியை 1874ஆம் ஆண்டு "பென்னி குக்' தொடங்கினார்.
வெள்ளம்!
1890ஆம் ஆண்டு பெய்த பெருமழையில் இப்பகுதியில் பெரும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது! கட்டிய அணைப்பகுதியின் பெரும் பகுதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது!
இனிமேல் அணை கட்ட கூடுதல் நிதியைச் செலவிட முடியாது என்றும், திட்டத்தைக் கை விடுமாறும் ஆங்கிலேய அரசு அறிவித்து விட்டது.
"பென்னி குக்'கின் தியாகமும் முயற்சியும்!
திட்டத்தைக் கைவிடுமாறு அரசு அறிவித்ததை அறிந்த "பென்னி குக்' அதிர்ச்சி அடைந்தார். திட்டத்தைக் கைவிட அவருக்கு மனமில்லை! உடனே அவர் இங்கிலாந்து சென்றார். அங்கிருந்த தன் சொத்துக்களையெல்லாம் விற்றார்! அந்தப் பணத்தைக் கொண்டு அணை கட்டும் பணியை மறுபடியும் தொடங்கினார்.
வெற்றிகரமாக அணை 1895-ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி திறக்கப்பட்டது.
ஒப்பந்தம்
அன்று முதல் 999ஆண்டுகளுக்கு முல்லைப் பெரியாறு அணையைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ள உரிமை தரும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்திற்கு உட்பட்ட நிலத்தில் தமிழக அரசு நீர்ப்பாசனம் மற்றும் மின்சார உற்பத்திக்கான செயல்பாடுகள் செய்து கொள்ளலாம். அணையின் பராமரிப்புப் பணிகள் செய்வதற்கான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு. இதற்கு வரி ஏதும் கிடையாது. அணையின் உள்ளடங்கும் மரம் மற்றும் மரக்கட்டைகளை அணையின் நலம் கருதி எவ்விதக் கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம். அணைக்குச் சென்றுவர தமிழகத்திற்கு முழு உரிமை உண்டு. போக்குவரத்திற்குப் படகு உள்ளிட்ட வாகனங்களை தமிழக அரசு சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
நீர் மின் நிலையம்
1956ஆம் ஆண்டு தமிழக அரசு முல்லைப் பெரியாறு நீர் மின் நிலையத்தைக் கட்டியது. அதன் உற்பத்தித் திறன் 140 மெகாவாட் ஆகும். 1976ஆம் ஆண்டு கேரள அரசு மிகப் பெரிய அளவில் இடுக்கி அணையினைக் கட்டியது. இவ்வணையின் உயரம் 555 அடி. (முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 152 அடி) இடுக்கியின் நீர்த்தேக்கப்பரப்பு 649.3 சதுர கி.மீ. ஆகும். இடுக்கி நீர் மின் நிலையம் 800 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. (முல்லைப் பெரியாறு மின் நிலையத்தின் திறன் 140 மெகாவாட்) முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் தென்மேற்குப் பருவக் காற்று வீசும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், வடகிழக்குப் பருவக்காற்று வீசும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பலத்த மழை பெய்யும். இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆண்டு முழுவதும் நீர் வரத்து உண்டு. ஆனால் இடுக்கி அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளுக்குத் தென்மேற்குப் பருவக் காற்று வீசும் மாதங்களில் மட்டுமே மழை பெய்கிறது. இதனால் பெரிய அணையான இடுக்கி அணைக்கு எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரத்து இல்லை.
எனவே இடுக்கி நீர் மின் நிலையத்தில் உற்பத்திக் குறைவு ஏற்பட்டது.
அணையின் அமைப்பு
அணையின் அடித்தள அகலம் 144அடி 6அங்குலம். உயரம் 177அடி. உயரத்தில் அணைச்சுவரின் மேல் தள அகலம் 12அடி. அணையின் நீளம் 1241அடி. நீர்த் தேக்க உயரம் 155அடி. அலைகள் எழும்போது பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக நீர்மட்டம் 152அடியாகக் குறைக்கப்பட்டது.
152அடி நீர் நின்றால் அணையின் உட்பகுதியில் 26.44 சதுர கி.மீ. பரப்பில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதன் மொத்த தண்ணீர் 15.7 டி.எம்.சி. அதாவது 15,700மில்லியன் கன அடி (15,700,000000 கன அடி). அதிகப் படியான நீரை வெளியேற்ற அணையின் வலப்புறத்தில் 136அடி உயரத்தில் 10 நீர் கால்வாய்கள் கட்டப்பட்டன. இவற்றின் வழியாக நொடிக்கு 82,000 கன அடி தண்ணீரை வெளியேற்றலாம்.
அணையில் 15,700 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கினாலும் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாது. 104 அடி உயரம் வரை கிடைக்கும் தண்ணீரைப் பயன் படுத்த முடியாது. அது தேங்கிக் கிடக்கும். அதன் அளவு 7620 மில்லியன் கனஅடி. இதற்கு மேல் தேங்கக் கூடிய 8880 மில்லியன் கன அடி தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடியும். 152அடி உயரத்திற்குத் தண்ணீரைத் தேக்கினால்தான் தமிழகம் 8,800 மில்லியன் கனஅடி தண்ணீரை அதாவது 8.8 டி.எம்.சி. தண்ணீரைப் பயன்படுத்த முடியும்.
பேபி அணை
அணையின் கட்டுமானப் பணி முடியும்வரை நீர் வழிந்து செல்வதற்காக இடதுபுறம் வெட்டப்பட்ட கால்வாயினை மறித்து, "பேபி அணை' 240 அடி நீளத்தில் கட்டப்பட்டது. தேங்கிய நீரை எதிர்த்திசையில் கொண்டு சென்று தமிழகத்திற்குக் கொண்டு செல்வதற்காக அணை உள்ள இடத்திலிருந்து 14கி.மீ. நீர்த்தேக்கப் பரப்பினை அடுத்து கிழக்குப் பக்கமாக 2கி.மீ. தூரம் திறவை வாய்க்கால் வெட்டப்பட்டது. அணையில் 104அடிக்கு மேல் உள்ள தண்ணீர் முழுவதும் இந்தத் திறவை வாய்க்கால் வழியாகச் செல்லும் வகையில் வெட்டப்பட்டது. இந்நீர் வைகை நதியில் இணைகிறது! இது பேரணை மூலமாக மேலூர், சோழவந்தான், நிலக்கோட்டை, செக்காலூரணி, திருமங்கலம், திருப்பத்தூர், திருபுவனம், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்கிறது.
இந்தப் பகுதிகளில் 3,60,000 ஏக்கர் நிலங்கள் முல்லைப் பெரியாறு வைகை நீரினால் பாசன வசதி பெற்றன. சுமார் 1,00,0000(பத்து லட்சம்) மக்களுக்கு வாழ்வாதாரமாக இந்நீர் உள்ளது.
நீர் வள ஆணை பரிந்துரை
முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும்வரை 136அடி உயரத்திற்குத்தான் தண்ணீர் தேக்க வேண்டும் என்றும், அணையை வலுப்படுத்தியதும் 152அடி உயரத்திற்குத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் நீர்வள ஆணையம்ó பரிந்துரைத்தது.
நீர் வரத்துக் குறைவால் தமிழகத்தின் 38000 ஏக்கர் நிலங்கள் தரிசு நிலங்களாயின. மற்றும் 86,000 ஏக்கர் நிலங்கள் ஒரு போக சாகுபடிக்கு மாறின. மின் உற்பத்தியும் பாதியாகக் குறைந்தது.
எனவே தமிழக அரசு அணையை பலப்படுத்த முடிவு செய்து செயல்படுத்தியது.
அணையை வலுப்படுத்திய விதம்
பிரதான அணையின் நீளம் 1200அடி. அதன் மேலே முழு நீளத்திற்கும் 3அடி அகலம் முற்பகுதியிலும் 6அடி அகலம் பிற்பகுதியிலும், ஒரு மீட்டர் உயரத்திலும் கான்கிரீட் தொட்டி போன்று அமைத்து 12அடி அகலமுள்ள அணையின் கனபரிமாணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் மேல் மட்டத்தில் இருந்து அடித்தள பாறையினுள் 4அங்குல விட்டமுள்ள துளைகள் இடப்பட்டன. அதனுள் 34அதிக விழு விசைத்திறன் உள்ள 7மி.மீ. அளவுள்ள இரும்புக் கம்பிகள் பாறையினுள் செருகிப் பிணைக்கப்பட்டன. பின் 120 டன் இழுவிசைக் கம்பிகள் பொருத்தப்பட்ட பின் சிமென்ட் கிரவுட் செய்யப்பட்டது. ஒவ்வொரு துளை மூலமும் 120 டன் இழு விசையுடன் அணைக்கட்டுப் பாறையுடன் இணைக்கப்படுவதால் அணை மேலும் வலிமை பெற்றது.
பிரதான அணையின் கைப்பிடிச் சுவரின் மேல் மட்ட உயரம் 158 அடியாகும். இந்தச் சுவரில் மோதும் நீரின் அலைகளை தடுக்க மேலும் 2அடி உயர்த்தப்பட்டு மேல் மட்டம் 160அடியாக உயர்த்தப்பட்டது. கருங்கல்லினால் கட்டப்பட்ட இந்தச் சுவர் பிரதான அணையை அடுத்த சிற்றணை வரை நீட்டிக் கட்டப்பட்டுள்ளது. இடைப்பட்ட 160அடி மட்டம் வரை கல்பதிப்புச் செய்யப்பட்டது.
கூடுதல் நீர்ப்போக்கிகள்
பழைய 10 நீர்ப்போக்கிகளின் வெளிப் போக்குத் திறன் விநாடிக்கு 82,000 கன அடியாகும். ஆனால் எதிர்பார்க்கப்படும் உச்சநிலை வெள்ள வரத்து 1,22,000 கன அடியாக இருப்பதால் கூடுதல் நீரை வெளியேற்ற 3 கூடுதல் நீர்ப்போக்கிகள் அமைப்பது அவசியம் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி பழைய நீர்ப் போக்கிகளின் இடதுபுறம் இருந்த மண், பாறை, அகற்றப்பட்டு 40அடிக்கு 16அடி என்னும் அளவு வீதத்தில் 3 நீர்ப்போக்கிகள் கருங்கல்லால் கட்டப்பட்டன. கான்கிரீட்டினால் ஆன மற்றொரு வழிந்தோடியும் கட்டப்பட்டது. புதிய மற்றும் பழைய நீர்ப் போக்கிகளின் முன் பகுதியில் இருந்த தடயங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. அவை புதியதாக வடிவமைக்கப்பட்டன. 3 நீர்ப் போக்கிகளிலும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய ரேடியல் அடைப்பு ஷட்டர்கள் பொருத்தப்பட்டன. பழைய வெளிப்போக்கிகளின் அடைப்பு ஷட்டர்களும் பழுது பார்க்கப்பட்டு மின்சாரத்தால் இயங்கக் கூடியதாய் மாற்றப்பட்டன.
கான்கிரீட் முட்டுச்சுவர் எழுப்புதல்
இந்தப்பணிதான் முல்லைப் பெரியாறு அணைக்கு நிரந்தர பலம் கொடுக்கக் கூடியதாகும். அணையை ஒட்டி பின்புறமாக அடித்தளத்தில் இருந்து 34அடி அகலத்திற்கு கான்கிரீட் முட்டுச் சுவர் எழுப்பி, அணையின் 145 அடி மட்டத்தில் இணையுமாறு கட்டப்பட்டு முட்டுச் சுவரின் அடித்தளம் கடினப்பாறையின் மேல் அமைக்கப்பட்டுத் தேவையான இடங்களில் துளையிடப்பட்டு பிணைப்புக் கம்பிகள் பொருத்தி சிமென்ட் கிரவுட் செய்யப்பட்டது. சிற்றணையும் இவ்வாறே பலப்படுத்தப்பட்டது.
நீரை அணைப்பதால் மட்டுமல்ல...,விவசாய நிலங்கள், மனிதர்களின் குடிநீர்த்தேவை, காடுகள், தாவரங்கள் மற்றும் பல உயிரினங்களையும், பாதுகாத்து அணைப்பதால்தான் அணை என்ற பெயர் அணைகளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. பாதுகாப்போம் அணைகளை! பயன்பெறுவோம் அவற்றால்!