வலித்த நன்றி!
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று படுத்துக் கொண்டிருந்தது. அப்போது தேனைக் குடித்துவிட்டு சர்ரென்று பறந்து வந்த தேனி ஒன்று சிங்கத்தைக் கொட்டி விட்டது.
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று படுத்துக் கொண்டிருந்தது. அப்போது தேனைக் குடித்துவிட்டு சர்ரென்று பறந்து வந்த தேனி ஒன்று சிங்கத்தைக் கொட்டி விட்டது. அலறித் துடித்து விழித்துக் கொண்டது சிங்கம். வலி! ரொம்ப ஜாலியாக தேனீ சுற்றிச் சுற்றி வந்தது! சிங்கத்திற்கு மகாக் கோபம்! ஆனால் தேனீயை என்ன செய்ய முடியும்? தேனீயும் கொட்டியது மட்டுமல்லாமல் சிங்கத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது! சிங்கம் தன் முன்னங்கால்களை பலமுறை வீசித் தேனீயைப் பிடிக்க முயற்சித்தது. சட்டென்று ஒரு வீச்சில் தேனீயின் இறக்கை சிக்கிக் கொண்டது!
தேனீ மிகவும் பயந்து விட்டது! அது சிங்கத்திடம், ""சிங்க ராஜா...,சிங்க ராஜா! என்னை மன்னிச்சுடுங்க...,இன்னிக்கு நான் தேனைக் கொஞ்சம் அதிகமா குடிச்சுட்டேன். அதான் இப்பிடி ஆயிடுச்சு! இனிமே இப்பிடிப் பண்ண மாட்டேன். மேலும் இத்துனூண்டு இருக்கும் என்னை சாகடிச்சு என்ன பிரயோஜனம்! யாராவது உங்களைப் பாராட்டப் போறாங்களா? கேலிதான் செய்வாங்க...,என்னைச் சாப்பிட்டுப் பசியாவது தீருமா? சிங்கப் பசிக்குத் தேனீயா? இது ரொம்பக் கேலிக்குரிய விஷயமாயிடும்! இப்போ என்னை விட்டுடுங்க...! நான என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியா இருப்பேன்.'' என்றது.
""உனக்குப் பேச்சு அதிகமா ஆயிடுச்சு. இதெல்லாம் உபத்திரவம் பண்ணறதுக்கு முன்னால யோசிச்சு இருக்கணும்""
""அப்படிச் சொல்லாதீங்க ராஜா! பாவம் பார்த்து என்னை விட்டுடுங்க...தெரியாம செஞ்சுட்டேன். இனிமே உங்க பக்கம் கூட வரமாட்டேன்...,எப்பவும் நான் சொன்னபடி நன்றியோட இருப்பேன். நிச்சயம் இதுக்குப் கடவுள் உங்களுக்குப் பலன் தருவார்.தயவு காட்டுங்க மகாராஜா!''
""ஒழிஞ்சு போ!'' என்று விட்டுவிட்டது சிங்கம்.
சில நாட்கள் கழிந்தன.
காட்டுக்கு அருகில் இருந்த கிராமத்திலிருந்து மேய்ச்சலுக்கு வந்த மாடு ஒன்றை அடித்துத் தின்று விட்டது சிங்கம். கிராமத்தார் விழித்துக் கொண்டனர். சிங்கத்தை வேட்டையாட சிலர் திரண்டு சென்றனர். காட்டிற்குச் சென்ற அவர்கள் தூரத்தில் சிங்கம் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். ஆயுதங்களுடன் மெதுவாக சிங்கத்தை நெருங்க ஆரம்பித்தனர்.
அப்போது சிங்கத்திடம் உயிர்ப்பிச்சை கேட்ட தேனீ இதை கவனித்து விட்டது! "ஜைங்' கென்று வேகமாகப் பறந்து வந்து மறுபடியும் சிங்கத்தைக் கொட்டிவிட்டது.
அலறி அடித்துக் கொண்டு எழுந்த சிங்கம், மிகக் கோபமாக தேனீயைப் பார்த்தது.
""சிங்க ராஜாவே! ஊர் மக்கள் உங்களைக் கொல்ல வருகிறார்கள்...,சீக்கிரம் தப்பிச் செல்லுங்கள்'' என்றது.
""சிங்கமும் தப்பி ஓடியது!''
சிங்கத்திடன் தேனீ, ""ரொம்ப வலிக்குதா?'' என்று கேட்டது.
""பின்னே வலிக்காதா...,ஆனா பரவாயில்லை...ரொம்ப நன்றி!'' என்றது சிங்கம்!