சிறுவர்மணி

தருமபுரியின் சுற்றுலாத் தலங்களைக் கொண்டாடுவோம்!

தினமணி

தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம், கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் காவிரி ஆறும், கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டமும், எல்லைகளாக அமைந்துள்ளன.

 1965இல் அப்போதைய சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் 2004இல் இதிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. 

 ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இம்மாவட்டமானது 4497.77 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. நிர்வாக வசதிக்காக தர்மபுரி, ஹரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னகரம் என 5 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சியே இம்மாவட்டத்தின் தலைநகரமும், பெரிய நகரமும் ஆகும். 
 
வரலாற்றுச் சிறப்பு!
 சங்க காலத்தில் "தகடூர்' என்று இந்நிலப்பகுதி அழைக்கப்பட்டது. இதனை ஆண்டவர்களுள் சிறந்தவர் "அதியமான் நெடுமான் அஞ்சி' ஆவார்! (அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த வள்ளல்) இவரது வீரம், மற்றும் கொடை பற்றிய தகவல்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூள்களில் உள்ளன!

 மேலும் இந்நிலப்பகுதியானது கி.பி. 2 ...., 3..., நூற்றாண்டுகளில் பல்லவர்களாலும், கி.பி.9இல் ராஷ்ட்ரகூடர்களாலும், அதன்பின் சோழர்களாலும், மேலும் பல அரச பரம்பரையினராலும் ஆளப்பட்டுள்ளது! 
 1792இல் பென்னகரத்தில் ஆங்கிலேயர்களுக்கும், திப்பு சுல்தானின் படைகளுக்கும் இடையில் போர் நடந்தது. அதில் திப்புவின் படைகள் தோல்வியுற்றது.
எனவே திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இப்பகுதி பிரிட்டிஷார் வசம் வந்தது. அதன்பின் ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் திப்பு சுல்தான் இறந்ததால் திப்புவின் நாடு முழுமையாக பிரிட்டிஷார் வசம் வந்தது! அப்பொழுது சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு, தர்மபுரி அதற்குள் இருந்தது. 

தொழில் வளம்!
 இப்பகுதியின் முக்கியத் தொழில் விவசாயமே. சுமார் 70% மக்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். பருப்பு வகைகள், கேழ்வரகு, எள், ஆமணக்கு, மாம்பழம், முதலியவை முக்கியமான விளைபொருட்களாகும். இவற்றைத் தவிர கொள்ளு, உளுந்து, இஞ்சி, பட்டாணி, பச்சைப்பயிறு, அவரை, சோளம், கம்பு, நிலக்கடலை, பருத்தி, வெங்காயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை!

 மேலும் ஜவ்வரிசி தயாரித்தல், மின் சாதனங்கள், தீப்பெட்டி தயாரித்தல், கிரானைட்ஸ், மாம்பழக்கூழ் தயாரித்தல் போன்றவையும் நடைபெறுகிறது. 

 மலை வளமும், வன வளமும்!
 புவியியல் ரீதியாக இம்மாவட்டமானது நில அமைப்பில் பல ஏற்ற இறக்கங்களுடன் கடல் மட்டத்திலிருந்து 240 மீ. முதல் 1266 மீ. வரை மேடு பள்ளங்களுடன் கூடிய உயரம் கொண்டுள்ளது. 
 கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகிய "சத்தேரி மலை' தர்மபுரி மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் நெருக்கமான, அடுத்தடுத்து அமைந்த சிக்கலான அமைப்புடன் கூடிய பல மலைச்சிகரங்களைக் கொண்டது. அதனால் தென்மேற்கிலிருந்து, வடகிழக்காகப் பரவி இருக்கும் இந்த மலைத் தொடரில் பல குறுகலான பள்ளத்தாக்குப் பகுதிகள் உள்ளன. இங்கு பெய்யும் மழைநீர் கல்லாறு வரட்டாறு, கம்பாலை மற்றும் அணைமடுவு என்று பல பெயர்களில் சிற்றாறுகளாகவும், ஓடைகளாகவும் கீழ் இறங்குகிறது. 
 இம்மலைப் பகுதியில் பசுமை மாறா தாவரங்கள், இலையுதிர் தாவரங்கள், புதர்க்காடுகள் என பலவகையான மரங்கள், செடிகள், கொடிகள் மற்றும் புல்வகைகளும் காணப்படுகின்றன. 
 இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டி மேற்குத் தொடர்ச்சி மலைகளும், ஒகேனக்கல் அருவியும், காவிரி ஆறும் அமைந்துள்ளதால் இப்பகுதி பல வகையான தாவரங்களுடன் செழிப்பாகக் காணப்படுகிறது! 

நீர்வளம்
 குடகு மலையில் உருவாகி கர்நாடகத்தின் வழியாக வந்து பிலுதண்டலு என்ற இடத்தில் தமிழகத்திற்குள் நுழையும் காவிரி நதி தர்மபுரி மாவட்டத்தில்  ஓகேனக்கல் அருவியாக கீழ் இறங்குகிறது! மேலே உள்ள பாறைகளினால் பல கிளைகளாகப் பிரிந்து பல அருவிகளாகக் கொட்டுகிறது! 
 ஒகேனக்கல் என்ற சொல்லிற்குக் கன்னடத்தில் "புகையும் பாறை' என்று பொருள். மேலே இருந்து விழும் நீர் கீழே பாறைகளின் மீது விழுந்து பல துளிகளாக பல மீட்டர் உயரத்திற்குச் சிதறுவதால் சாரல் புகை மூட்டம் போல் தெரியும்! "உதநீர்க்கல்' என்பதே இதன் தமிழ்ப்பெயராகும்! 
 இந்த அருவியில் எண்ணைக் குளியலும், பரிசல் பயணமும் பிரசித்தி பெற்றவை. நீர்வரத்து காலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் களைகட்டி இருக்கும்!
இங்கிருந்து வரும் நீர் தர்மபுரி மாவட்டத்தின் எல்லையை ஒட்டிப் பயணிக்கிறது. மேலும் தொப்பையாறு, சின்னாறு, ஆகிய நதிகளும் இங்கு ஓடுகிறது. 

இலக்கியம்பட்டி
 11ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது. சமீப காலம் வரை சீமைக் கருவேலமரங்களும் குப்பைகளும் நிறைந்து இருந்த ஏரியானது தற்போது மரங்களும் செடிகளும் பறவைகளும் கொண்ட நீர் நிறைந்த ஏரியாக மாறியுள்ளது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த "தர்மபுரி பீப்பிள்ஸ் ஃபாரம்' என்ற அமைப்பும், மற்றும் பலரின் உதவியுடனும் பெரும் முயற்சி செய்து இம்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். 
 ஏரிக்குள் 5குட்டித் தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மற்றும் 1000மூலிகைச்செடிகளும், 2000 மரக்கன்றுகளும் நடப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. 3லட்சம் கனஅடி கொள்ளளவு கொண்டதாக இருந்த ஏரி தற்போது 33லட்சம் கனஅடி நீர் கொள்ளளவு உள்ளதாக மாறியுள்ளது! இதனால் நல்ல மழைக்காலங்களில் நீர் சேமிக்கப்படுவதால் சுற்றிலுமுள்ள 1 கி.மீ. தூரத்திற்கு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.
 பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் வாணியாறு அணை மற்றும் ஹரூர் வட்டத்தில் உள்ள வள்ளி மதுரை அணையும் நல்ல சுற்றுலாத் தலமாக உள்ளன. 

கனிம வளம்!
 ஹரூர் வட்டம் பகுதியில் உயர்தரமான "கேப்ரோ' (GABBRO) வகைக் கற்கள் அதிகம் கிடைக்கிறது. இது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 
 மேலும் இப்பகுதியில் 2004இல் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவிலேயே முதன்முறையாக "மோலிப்டெனம்' (MOLYBDENUM) என்ற உலோகக் கனிமப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது! இப்பொருள் மிக அதிக வெப்ப நிலையிலும், விரிவடைவதோ, மென்மையடைவதோ இல்லை. எனவே இதைக்கொண்டு ஆகாய விமானங்களின் பாகங்கள், மற்றும் மின்சாரக் கருவிகளின் பாகங்கள், முதலியன செய்யப்படுகின்றன. 

சுற்றுலாத்தலங்கள்!
 தர்மபுரியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் சேலம் செல்லும் சாலையில் கிட்டத்தட்ட முட்டை வடிவிலான கோட்டையின் இடிபாடுகள் உள்ளது!
இக்கோட்டைக்குள் கிருஷ்ணதேவராயர், மற்றும் "ஹொய்சல' மன்னர்களால் கட்டப்பட்ட சென்னிராய பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் கர்ப்பக்கிரகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள மண்பத்தின் மேற்கூரையில் 13ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட அழகான ஓவியங்கள் உள்ளன. இங்கு மஹாபாரதத்தின் விஸ்வரூப தரிசனக் காட்சியும், ராமாயணத்தின் நிகழ்வுகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்கு தர்மபுரியின் புகழ்பெற்ற காலபைரவர் கோயிலும் இருக்கிறது. 

கோட்டைக் கோயில்
 தர்மபுரிக்கு வடக்கே கோட்டைக்கோயில் எனப்படும் சிவன் கோயில் உள்ளது. மிகவும் அபூர்வமான ஓவியங்களும், அழகான சிற்பங்களும் இங்கு உள்ளன.
இக்கோயிலில் உள்ள தொங்கும் தூண் மிகவும் பிரசித்தி பெற்றது. பார்ப்பதற்கு தரையில் பதிந்து இருப்பது போல் தோன்றும்! ஆனால் உண்மையில் தரையைத் தொடாமல் விதானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறது! ஒரு காகிதத்தைத் தரைக்கும், தூணுக்கும் நடுவில் செலுத்தி எடுக்க முடியும்! தொங்கும் இத்தூண் கட்டிடக் கலையில் ஒரு அற்புதம்! 

தீர்த்தமலைக்கோயில்
 மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஹரூர் வட்டத்தில் உள்ள ஒரு குன்றுதான் தீர்த்தமலை! இக்குன்றின் மீது பழமையும் புகழும் பெற்ற சிவன் கோயில் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு சோழ மற்றும் விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் பல திருப்பணிகள் செய்துள்ளனர். ராஜேந்திர சோழன் இந்த ஆலயத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது! 
 இந்தக் கோயிலைச் சார்ந்து மலையிலிருந்து 12கி.மீ. தூரத்தில் ஹனுமன் தீர்த்தம் என்ற புனிதத் தீர்த்தம் உள்ளது. இதற்கு ஒரு புராணச் சிறப்பு உள்ளது.
ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ராமன், நாடு திரும்பும்போது இத்தல இறைவனைப் பூஜை செய்து வணங்க விரும்பினார். அதற்காக அனுமனிடம் கங்கை நீரைக் கொண்டுவரும்படி கூறினார். சென்ற அனுமன் நீண்ட நேரமாகத் திரும்பாததால் ராமன் அம்பினை எய்து பாறையிலிருந்து நீர் வரச் செய்து பூஜையை செய்து முடித்து விட்டார். 
 திரும்பி வந்த அனுமன் பூஜை முடிந்ததால் நீர்க் கிண்ணத்தைத் தூக்கி எறிந்து விட்டார். அந்த நீர் சிதறி விழுந்த இடமே அனுமன் தீர்த்தம் என்ற பெயரில் உள்ளது. ராமன் அம்பினால் வந்த நீர் இன்றுவரை பாறையில் 30அடி உயரத்திலிருந்து அருவி போல் விழுகிறது! கோடையிலும் வற்றாத இந்த அருவி ராமதீர்த்தம் எனப்படுகிறது! இவற்றைத்தவிர இப்பகுதியில் அகஸ்தியர் தீர்த்தம், அக்னி தீர்த்தம், கெளரி தீர்த்தம் என பல தீர்த்தங்கள் உள்ளன. ஹனுமன் தீர்த்தம் இடத்திற்கு சற்றுத் தொலைவிலேயே கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பாம்பாறு அணை, தூவல் காடு, அஞ்சுகம் சுனை அருவி போன்ற சுற்றுலா இடங்கள் உள்ளன. 
 
சுப்பிரமணிய சிவா நினைவு இல்லம்
 இந்திய சுதந்திரத்திற்குத் தீவிரமாகப் போராடியவரும், வ.உ.சி. மற்றும் பாரதியாரின் நண்பரும், தத்துவ ஞானியும், எழுத்தாளருமான "சுப்பிரமணிய சிவா நினைவு இல்லம்' தமிழக அரசால் தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது!           
தொகுப்பு: கே.பார்வதி,
திருநெல்வேலி டவுன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT