சிறுவர்மணி

நீ அன்னப் பறவையாய் இரு!

DIN

தம்பீ!
உனக்கு ஒன்று சொல்வேன்
மனதில் பதித்துக் கொள்வாய்!
உனது நண்பர் எல்லோருக்கும்
நாளும் இதனைச் சொல்வாய்!

நாயைப் போல "நன்றி' குணம் 
நமக்கு வாழ்வில் வேண்டும்...
நாயைப் போல உணவு உண்ணும் 
பழக்கம் நமக்குக் கூடாது!

காக்கையிடம் "ஒற்றுமை'யை
நன்கு கற்க வேண்டும்!
காக்கை போல கண்டதிலும்
வாயை வைக்கக் கூடாது!

மாடு போலக் கடுமையாக
உழைக்கக் கற்க வேண்டும்!
மற்றவரை மாட்டைப் போல 
முட்டிவிடக் கூடாது!

எறும்பு போல வரிசை ஒழுங்கை
எடுத்துக் கொள்ள வேண்டும்!
திறந்து கிடக்கும் எதிலும் போய்
நுழைந்து விடக் கூடாது!

கோழியினத்தில் சேவலைப்போல்
கூவி எழுப்ப வேண்டும்!
குப்பை கிளறி ஊரையெல்லாம்
சுற்றி வரக் கூடாது!

தேனீயை சுறுசுறுப்புக்கு 
எடுத்துக் கொள்ள வேண்டும்!
தேனீ போல் வார்த்தைகளால் 
எவரையும் கொட்டக் கூடாது!

எவர் எதனைச் சொன்னபோதும்
நம்பி விடக் கூடாது!
எவரிடத்தும் இருக்கும் நல்ல
குணத்தைக் கொள்ள வேண்டும்!

கரும்பு தின்றால் சாறு உறிஞ்சி
சக்கை துப்ப வேண்டும்!
நீ அன்னம் போல நீர் ஒதுக்கி 
பாலைக் குடிக்க வேண்டும்!

-பொன்னியின் செல்வன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT