மரங்களின் வரங்கள்!
குழந்தைகளே, இப்போதெல்லாம் மழை கால காலத்திற்கு பெய்வதில்லை. எங்கும் வறட்சி. தண்ணீருக்காக விவசாய மக்கள் போராடுகிறார்கள்.
குழந்தைகளே, இப்போதெல்லாம் மழை கால காலத்திற்கு பெய்வதில்லை. எங்கும் வறட்சி. தண்ணீருக்காக விவசாய மக்கள் போராடுகிறார்கள். அதற்குக் காரணம் நாம காடுகளையும், மரங்களையும் அழிப்பதால் தான் என்று. மக்கள் தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சி, சாலை வசதிகள், நாகரிக வளர்ச்சி முதலிய காரணங்களால் இன்று மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஐ.நா. சபை ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை மனிதர்கள் உள்ளார்கள், தலைக்கு எத்தனை மரங்கள் உள்ளன என கணக்குக் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கனடா நாட்டில் ஒரு தனி நபருக்கு 8,953 மரங்களும், ரஷ்யாவில் 4,461 மரங்களும், அமெரிக்காவில் 716 மரங்களும் இருக்கின்றன என்று குறிபிட்டுள்ளது. ஆனால், இந்தப் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு தனி நபருக்கு 28 மரங்கள் தான் உள்ளன.
விஞ்ஞானிகள் மரங்களே பூமியின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். மரங்களுக்கு பூமி தான் தாய். சூரியன் தான் தந்தை. இலைகளின் செல்களில் உள்ள பச்சையம் (க்ளோரோஃபில்) சூரிய ஒளியிலிருந்து பெறும் ஆற்றலை, காற்றிலுள்ள கரியமில வாயு மற்றும் வேரிலிருந்து உறிஞ்சப்பட்டு இலையை அடையும் நீரின் நுண் துளிகளையும் (மாலிக்யூல்கள்) பயன்படுத்தி சர்க்கரைச் சத்தாக மாற்றுகிறது. இதைத் தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம்.
Advertisement
மரங்கள் மனிதன் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களையும் வாழச் செய்கின்றன. மரங்களே மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருத்துவர்களாகவும் விளங்குகின்றன. இயற்கை சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்பினான். அதுவே மர வழிபாடாய் மலர்ந்தது. திருக்கோயில்களில் உள்ள மரங்கள் "தல விருட்சம்' என அழைக்கப்படுகின்றன.
மரங்கள் நமக்குத் தேவையான மலர்கள், காய், கனிகள், நிழல், குளிச்சி தருவதோடு, காற்றையும் சுத்தப்படுத்துகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மழையைத் தருகிறது.
மரங்கள் நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றன. அதனாலே, புவி வெப்பமடைவது தடுக்கப்படுகிறது. மண் அரிப்பையும், நிலச்சரிவுகளையும் தடுக்கிறது. புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. மரத்தைச் சுற்றி நீர் சேர்வதால் நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்குள் விழுந்து தன் தாய் மண்ணுக்கு உணவையும், உரத்தையும் கொடுக்கிறது.
வெட்டினாலும் விறகாகவும், கதவு, ஜன்னல், வீடு கட்ட, எண்ணற்ற மரத்தாலான பொருட்களைச்செய்யவும் பயன்படுகின்றன. இவ்வளவு ஏன், நம் வீட்டில் வாசலாய் இருந்து நம்மை வரவேற்பதும் மரம் தானே.
குழந்தைகளே, மரங்கள் வளர்த்தால் சுற்றுச் சூழல் வளமாகும்.
"உண்மையில் மண்ணின் மைந்தர்கள் மரங்களே. மரங்கள் சாய்ந்தால் காட்டிலிருந்து வீட்டிற்கு வரும், மனிதன் சாய்ந்தால் வீட்டிலிருந்து காட்டுக்குப் போகிறான் என மரத்தின் பெருமையை என்ன அருமையாய் கவிஞர் அப்துல் ரகுமான் சொல்லியிருக்கிறார்! குழந்தைகளே! பறவைகளின் இசை மேடையும், இருப்பிடமும் மரங்கள்தானே! இனி ஒவ்வொரு வாரமும், ஒரு மரம் உங்களிடம் பேச வராங்க, காது கொடுத்து கேளுங்க, நன்றி குழந்தைகளே !
(வளருவேன்)