சான்றோர் பெருமக்களில் சிலர் அஸ்திவார கற்களைப் போல தம்மை மறைத்துக்கொண்டு பிறரது திறமைகளுக்கு மேடை அமைத்துக் கொடுப்பர்.அவர்கள் புகழ் பெற வழிவகுப்பர். ஆனால் அவர்கள் தம்மை ஒருபொழுதும் முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். திரைமறைவில் இருந்துகொண்டு பிறரது உயர்வுக்கு உறுதுணையாக இருப்பர். பிறர் முன்னேற்றத்தை கண்டு பெரு மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும்
அடைவர்.
அப்படிப்பட்ட ஒரு மாமனிதரை பற்றித்தான் இன்றைய கட்டுரையில் நாம் காண இருக்கிறோம்.இவரது பெயர் "இலக்கியவீதி' இனியவன். இவரது இயற்பெயர் லட்சுமிபதி என்பதாகும். இவர் விரும்பி வைத்துக்கொண்ட புனைப்பெயர் தான் "இனியவன்'. "இலக்கியவீதி' என்பது இவர் ஏற்படுத்திய ஒரு அமைப்பாகும்.இவர் தமிழ் இலக்கியம் நுண்கலைகள் ஆகியவற்றை மிகவும் நேசித்தார்.
அக்கலைகளில் ஈடுபட்டு வந்த கலைஞர்கள் பலரை இலக்கியவீதி அமைப்பின் மூலமாக அடையாளம் காட்டியுள்ளார். அவர் தொடங்கியுள்ள அமைப்பின் சின்னம் அன்னப்பறவை ஆகும்.
வேடந்தாங்கலுக்கு அருகே உள்ள "விநாயக நல்லூர்'என்ற சிற்றூரில்தான் இனியவன் பிறந்தார். இவர் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பொழுது சிறுவர் இதழ் ஒன்று அறிவித்திருந்த போட்டிக்கு கதை எழுதி அனுப்பினார்.அதுவே அவர் எழுதிய முதல் கதை. அதற்கே முதல் பரிசு கிடைத்தது. எனவே தொடர்ந்து நிறைய எழுத ஆரம்பித்தார்.
அந்தக் காலத்தில் "கண்ணன்'என்னும் பெயர் கொண்ட சிறுவர் இதழ் ஒன்று மிகப் பிரபலமாக இருந்தது. அப்பத்திரிக்கை நடத்திய தொடர்கதை போட்டிக்கு இவர் அனுப்பிய "பொன்மனம்'என்னும் கதை முதல் பரிசு பெற்றது. ஆனந்த விகடனுக்கு இவர் அனுப்பிய முதல் கதையே முத்திரை கதையாய் வெளிவந்தது. இப்படி தானே ஒரு சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தவர் இனியவன்.
அதுமட்டுமில்லாமல் வீணாக இருந்து கொண்டிருந்தவர்கள் பலரை பண்புள்ளவர்களாக உயர்ந்த வாழ்க்கை வாழ வழி செய்திருக்கிறார். பழங்காலத்தில் இருந்த கலைகளுள் ஒன்று தான் "கவனக கலை' ஆகும. ஒரே நேரத்தில் ஒருவர் 10 செயல்களையோ அல்லது நூறு செயல்களையோ கவனம் மாறாமல் செய்து முடிக்கும் கலையே கவனகக் கலை என்பதாகும். இக்கலையில் தேர்ச்சி பெற அளவுகடந்த பயிற்சியும் மன ஒருமைப்பாடும் மிகவும் அவசியமாகும்.இதனால் இக்கலையை செய்பவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்து கொண்டே வந்து இறுதியில் இல்லாமலே போனது.
ஆனால் தென் தமிழகத்தில் வாழ்ந்த ராமையா பிள்ளை என்பவர் இக்கலை பற்றி பழந்தமிழ் நூல்களில் வாயிலாக அறிந்து கொண்டு "பதின் கவனகம்'எனப்படும் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட செயல்களை செய்யும் கலைஞராக வாழ்ந்து வந்தார். இவர் இக்கலையை பல சிற்றூர்களில் நடத்திக்காட்டி அதன்மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு மிகவும் எளிய முறையில் வாழ்ந்து வந்தார்.இதிலும் மற்றொரு சிறப்பு யாதெனில் திரு ராமையா பிள்ளை கண் பார்வையற்றவர்.
இவரைப்பற்றி கேள்விப்பட்ட இனியவன் தமது இலக்கிய வீதி அமைப்பின் மூலம் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக இவரை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினார் .மேலும் அவரை தமிழ்நாடு அரசவைக் கவிஞர் ஆக விளங்குவதற்கும் வழிவகுத்தார். அவர் முதுமை காரணமாக மறைந்துவிட்டாலும் அவரது மகன் திரு கனகசுப்புரத்தினம் அவர்கள் அக் கலையை வளர்த்து வருகிறார். இலக்கிய வீதி அல்லது இனியவனின் முயற்சி இல்லை என்றால் "கவனக கலை' என்னும் அரிய கலையே அழிந்து போயிருக்கும்.
பழங் கலைகளைப் பெருமை படுத்துவதில் இனியவன் தீராத தாகம் கொண்டிருந்தார். இவரால் வாய்ப்பளிக்கப்பட்டு புகழ்பெற்ற கலைஞர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர். ஒருவர் திறமை மிக்கவர் என்பதை அறிந்து கொண்டால் அவரை எப்பாடுபட்டாவது உலகத்திற்கு திரு இனியவன் அடையாளம் காட்டி விடுவார்.அவர்களது திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் நோக்கி காத்திருப்பார். அவர்களுக்கு நல்லதொரு அரங்கம் அமைத்து கொடுப்பார்.
திரு இனியவன் அவர்களே ஒரு தலை சிறந்த படைப்பாளி. 1959இல் எழுதத் தொடங்கி 1972ஆம் ஆண்டு வரை இவர் எழுதியுள்ளார்.அதில் 250 சிறுகதைகள், 17 குறுநாவல்கள், 15 புதினங்கள், இரண்டு பயணநூல்கள் ஆகியவையும் அடக்கம். இவர் தொடர்ந்து எழுதியிருந்தால் தமிழகத்தின் மிகச்சிறந்த முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்து இருப்பார்.ஆனால் அவர் எழுத்தை தொடரவில்லை.மாறாக எழுதத் துடிக்கும் உள்ளங்களுக்கு, தமது கலையை வெளிப்படுத்த துடிக்கும் இளைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.ஆகவே இலக்கியவீதி என்னும் ஓர் அமைப்பை தோற்றுவித்தார்.
திரு நாரண. துரைக்கண்ணன் என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்றை மதுராந்தகத்தில் நடத்த விரும்பினார்.எனவே அவர் இனியவன் அவர்களை அணுகினார். மகிழ்ச்சியோடு இதை ஏற்றுக்கொண்ட திரு இனியவன் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து அவர்களின் புகைப்படங்களையும் தொகுத்து புகைப்பட கண்காட்சி ஒன்றை எழுத்தாளர் மாநாட்டில் நடத்தினார்.அருமையான கண்காட்சியாக அது அமைந்தது. அம்மாநாட்டிற்க்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் வருகை புரிந்து பார்வையிட்டனர் .கண்காட்சியை சுற்றிப்பார்த்த திரு அறிஞர் அண்ணா அவர்கள் "செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்தனை எழுத்தாளர்கள் உள்ளனரா?' என்று தன் வியப்பை வெளிப்படுத்தினார் .திரு இனியவன் அவர்களை அழைத்து அவர் தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.
இந்த மாநாட்டின் மாபெரும் வெற்றி திரு இனியவனை வேறு வகையில் சிந்திக்கத் தூண்டியது. அதுவரை ஒரு எழுத்தாளராகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த அவர் ஓர் இலக்கிய அமைப்பை தானே ஆரம்பித்து அதை இலக்கிய ஆர்வலர்கள்,படைப்பாளிகள் இடம் வெற்றிகரமாக எடுத்துச் சென்றால் என்ன? என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே அவர் "இலக்கியவீதி'என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார்.
தமிழக மாவட்டங்கள் ஒவ்வொன்றும் தனக்கென தனி சிறப்பு அடையாளங்களை கொண்டவை.எடுத்துக்காட்டாக அங்குள்ள சுற்றுலா இடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், ஆலயங்கள் ,மேலும் சிறப்பான வட்டார மொழி வழக்குகள,ó பழமொழிகள், கர்ணபரம்பரைக் கதைகள் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டவை. அவற்றையெல்லாம் தொகுத்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட வரலாறு எழுதப்பட வேண்டும் என்று அந்நாளைய அரசு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது.
அந்தப் பொறுப்பு தமிழக பழங்கலை இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது இயக்குனர் மீ. ப.சோமு அவர்கள் இப்பணியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். முதன்முதலில் செங்கற்பட்டு மாவட்டம் பற்றிய நூலை கொண்டுவர முடிவானது. தகவல்களை திரு இலக்கியவீதி இனியவன் தலைமையில் சிறிய குழு ஒன்று செயல்பட்டு திரட்டியது. திரு இனியவன் அவர்கள் இந்நூலை தமது சொந்த செலவிலேயே வெளியிட்டார். அந்த நூலின் பெயர் "உத்திரமேரூர் உலா' என்பதாகும். இந்நூல் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய இடங்களைப் பற்றிய அருமையான தொகுப்பு ஆக அமைந்தது.
திரு இலக்கியவீதி இனியவன் அவர்கள் பறவைகளை மிகவும் நேசித்தார். ஒவ்வொரு பறவையை பற்றியும் அரிய தகவல்களை அறிந்து வைத்திருந்தார். எனவே ஒவ்வொரு பறவையைப் பற்றியும் ஒரு அருமையான வழிகாட்டி நூலொன்றை எழுதினார். அந்நூல் பெரும் வரவேற்பை பெற்றது. இது திரு இனியவன் அவர்களின் சாதனையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது .பின்நாட்களில் அந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.
தமிழ்த் தென்றல் திரு.வி. கஅவர்களின் நூற்றாண்டு விழாவை சென்னை அருகே உள்ள தண்டலம் என்ற கிராமத்தில் இலக்கியவீதி இனியவன் அவர்கள் நடத்தினார்கள. திரு. வி. க அவர்களை பற்றி சான்றோர்கள் மட்டுமே அறிந்து வைத்திருந்தனர்.பாமர மக்கள் ஒருவருக்கும் அவரது சிறப்புகள் தெரியவில்லை. இன் நூற்றாண்டு விழாவின் வாயிலாக பாமர மக்கள் திரு.வி.க அவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்டனர்.இதைப்போலவே பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவையும் 1991 ஆம் ஆண்டு இலக்கியவீதி சிறப்பாக கொண்டாடியது.
2006 ஆம் ஆண்டு சென்னை கம்பன் கழக செயலாளர் ஆக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சிறந்த தமிழ் இசை கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக "பத்மஸ்ரீ சீர்காழி திரு கோவிந்தராஜன்' அவர்கள் பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி தலைசிறந்த இசை கலைஞர்களுக்கு இவர் இலக்கிய வீதியில் வாயிலாக பரிசளித்து வருகிறார்.
ஆன்றோர்களையும் சான்றோர்களையும் அறிஞர் பெருமக்களையும் வாழ்த்தும் நல் இதயம் கொண்ட இந்த மாமனிதருக்கு பாரதி தமிழ் பணிச்செல்வர்,அமெரிக்கத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பு வழங்கிய மாட்சிமை விருது, இலக்கிய செம்மல்,திருக்குறள் நெறி புரவலர,கலை இலக்கிய பாரி,வேலூர் கம்பன் கழக விருது, பெரியார் அண்ணா இலக்கிய பேரவை விருது ,பொற்றாமரை விருது, கண்ணப்பன் அறக்கட்டளை வழங்கிய இலக்கிய நாயனார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இப் பேரறிஞர் தற்பொழுது முதுமை காரணமாக சற்றே உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படுகிறார்.இருந்த பொழுதும் தமிழ் ஆர்வலர்களையும், கலைஞர்களையும் ஊக்குவிப்பதில் சிறிதளவும் சுணக்கமின்றி பணியாற்றி வருகிறார். அவர் மேலும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.