முகப்பு
சிறுவர்மணி

ஞானக்கிளி! - 18: அமுதாவின் பிள்ளைகள்! 

அன்று மேரிதான் ஞானத்தை வரவேற்றாள்! சொல்வதற்கு அவளிடம் ஒரு செய்தி இருந்தது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

அன்று மேரிதான் ஞானத்தை வரவேற்றாள்! சொல்வதற்கு அவளிடம் ஒரு செய்தி இருந்தது. 
மற்றவர்களும் வந்து விட்டார்கள். 
""மேரி என்ன சொல்லப்போறே?''
""நேற்று நடந்த கதை...''
கதை என்றதும் எல்லோருடைய முகத்திலும் ஆர்வம்....
"'எங்க தெருவிலே அமுதான்னு ஒரு அம்மா....எங்க அம்மாவுக்கு அவங்க பழக்கமானவங்க....அவங்களுக்கு சேகர், பாண்டியன்னு ரெண்டு பையன்க.....அவங்க ரெண்டு பேரையும் காய்கறிக் கடைக்கு அனுப்பினாங்க....''
 ""இது ஒரு கதையா?...'' என்றான் பாபு.
 ""செடி நடும்போதே பழம் எங்கேன்னு கேக்கலாமா?...''
 ஞானம் அந்தக் கேள்வி கேட்டதும் அவன் அமைதியானான். 
 ""அம்மா தந்த தாளில் இருந்த காய்கறியெல்லாம் வாங்கிகிட்டாங்க....
கடைக்காரர் ஒவ்வொன்றுக்கும் தொகையைப் போட்டார்....இறுதியில் மொத்தத் தொகையைக் குறித்தார்....பணத்தைக் கொடுத்தார்கள்....சற்று தூரம் வந்ததும் சேகர் அந்தத் தாளைப் பார்த்தான். கூட்டும்போது கடைக்காரர் இருபது ரூபாய் விட்டிருந்தார்!....''
....சேகர் பாண்டியனிடம், ""பாண்டியா,....இந்த இருபது ரூபாய்க்கு ஏதாவது தின்பண்டம் வாங்கலாம்....இங்கே சூடா பஜ்ஜி கிடைக்கும்''....
....""சேகர்....இது நல்லதா,....காய்கள் வாங்கும்போது காய்ந்து போனது....பூச்சி பிடித்தது....முற்றல்,.... இப்படி வாங்கக்கூடாது....எடை சரியா இருக்கான்னு பார்க்கணும்....கவனமாய்ப் பார்த்து வாங்கணும்....அதற்கு வேறு என்ன அர்த்தம்?....வாங்கிய பொருளுக்கு உரிய பணத்தையும் கவனமாக் கொடுக்கணும்....அதிகமாகவும் கொடுக்கக்கூடாது....குறைச்சும் கொடுக்கக்கூடாது!....என்பதுதானே?''.....
....அமுதா சொன்னதை பாண்டியன் நினைவு படுத்தினான்!....
.....""இந்த விளக்கமெல்லாம் எனக்குத் தெரியாது!''....
....கதை என்னாகுமோ என்ற தவிப்பில் எல்லோரும் இருந்தார்கள். ஞானத்துக்கும் அதே தவிப்பு...
""உனக்கு எதுவும் தெரியவேண்டாம்....இருபது ரூபாயைக் கொடு....நான் போய்ச் சீட்டைக் காட்டி நீங்க பாகற்காய்க்கான பணத்தைச் சேர்க்கலேன்னு சொல்லிக் கொடுத்துட்டு வர்றேன்...''...... என்ற பாண்டினோடு சேகரும் போனான்.....

....பாண்டியன் சீட்டையும், பணத்தையும் அவரிடம் கொடுத்தான்....''.......

......"அமுதா அம்மா வீட்டுப் பிள்ளைங்களாச்சே!.....நேர்மை என்ற நல்ல குணம் அவங்க ரத்தத்திலேயே இருக்கும்!....'.....அவர் மனம் குளிர்ந்து பாராட்டினார். 
கை நிறைய கொத்தமல்லி....கறிவேப்பிலை....புதினா....என்று அள்ளிக் கொடுத்தார்.....""அம்மா சீட்டிலே எழுத மறந்திட்டாங்க நானும் மறந்திட்டேன்....கொண்டு போய்க் கொடுங்க....
இதுக்குக் காசு வேணாம்....
காயெல்லாம் நல்லதாப் பார்த்துக் கொடுத்திருக்கேன்..... நீங்க பார்க்கவே வேணாம்!....''....அந்த சொற்களைக் கேட்ட சேகர் வாய் திறக்கவில்லை....பாண்டியனின் பின்னால் அமைதியாக நடந்தான்.......''

 ""மேரி இந்தக் கதை மிகவும் பொருள் நிறைந்தது!....'' என்ற ஞானம் அவளை அருகில் அழைத்து உச்சி மோந்தது!....பிறகு சிவகாமியைப் பார்த்தது. ""இதைப் பற்றிய உன் கருத்து என்ன?'' என்றது. 

""நேர்மைக்கு என்றும் மதிப்பு உண்டு என்று சேகர் பாடத்தில் படித்திருப்பான்....ஆனால்....அப்போது மனதில் பதியாத உண்மை இப்போது நேரடி அனுபவத்தில் புரிந்து ஆழமாகப் பதிந்து விட்டது. எங்களுக்கும்தான்!....'' என்றாள் அவள். அன்றைய சந்திப்பு ஞானத்திற்கும் பிள்ளைகளுக்கும் மனநிறைவாக அமைந்தது. 
கிளி வரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.