சிறுவர்மணி

கருவூலம்: குஜராத் மாநிலம்....

தினமணி

சென்ற இதழ் தொடர்ச்சி....
நதிகள்!

நர்மதை, சபர்மதி, தப்தி, மஹி, தாமன்-கங்கா, பாதல், அவுரங்கா, சத்ருசஞ்ஜெய், ரூபன், மிந்தோலா, அம்பிகா, சரஸ்வதி, ஹிரன், ருக்மாவதி, கேலா, ரங்க்மதி, மச்சுந்திரி, சங்கவதி, கங்காவதி, கல்காலியோ போன்ற 50 - க்கும் மேற்பட்ட ஏராளமான நதிகள் பாயும் மாநிலம் குஜராத்! எனவே செழிப்புக்குக் கேட்கவே வேண்டாம்! 

தரங்கா சமணர் கோயில்கள்
மெக்சனா மாவட்டத்தில் உள்ளது இந்தக் கோயில்கள். சோலங்கி மன்னர் குமாரபாவனால் கி.பி. 1121 - இல் கட்டப்பட்டவை. சமணத் தீர்த்தங்கரர் அஜிதநாதரின் 2.75 மீட்டர் உயரம் கொண்ட பளிங்கு சிலையை மையமாகக் கொண்டு 24 தீர்த்தங்கரர்களின் சந்நிதியுடன் கூடிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. 
லக்ஷ்மி விலாஸ் அரண்மனை!

இவ்வரண்மனைகள் வதோரா நகரத்தில் உள்ளது. பரோடா சமஸ்தானத்தின் மன்னர் மகாராஜாசாயாஜிராவ் மூன்றாம் கெயிக்வாட் என்பவரால் இந்தோ - சாராசனிக் கட்டடக் கலையில் 1890 - இல் கட்டப்பட்டது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இவ்வளாகம் லண்டன் பக்கிம்ஹாம் அரண்மனையைவிட நான்கு மடங்கு பெரியது.
இங்கு அரச குடும்பத்தினர், அரசு அலுவலர்கள், அரசு விருந்தினர்கள், மற்றும் ஊழியர்கள் தங்கும் வகையில் ஏராளமான அறைகள் உள்ளன. மேலும் மோதி தோட்ட அரண்மனை, மகாராஜா பகத்சிங் அருங்காட்சியகம், கோல்ஃப் விளையாட்டுத் திடல், உள்ளிட்டவை இங்குள்ளன. 
சபர்மதி ஆசிரமம்!

அகமதாபாத் நகருக்கு 4 மைல்கள் தொலைவில் சபர்மதி ஆற்றின் கரையில் சபர்மதி ஆசிரமம் அமைந்துள்ளது. மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது. இங்கு அவர் 1918 - ஆம் ஆண்டு முதல் 1933 - ஆம் ஆண்டு வரை வசித்திருந்தார். 1930 - இல் நடைபெற்ற "தண்டி யாத்திரை' எனப்படும் "உப்பு சத்தியாகிரகம்' எனும் அறப்போராட்டம் இங்கிருந்தே தொடங்கப்பட்டது. இங்கிருந்து 23 நாட்களில் 240 மைல் தூரம் நடந்து குஜராத் மாநிலத்தின் கடற்கரை கிராமமான தண்டியில் உப்பெடுத்தார்! 
சபர்மதி ஆசிரமம் இந்திய அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஆசிரம வளாகத்திற்குள் பள்ளிகள், மாணவர் விடுதிகள், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட சில பகுதிகள் என பல கட்டிடங்கள் உள்ளன.
இங்கு காந்தியடிகள் வசித்த ஹ்ருதய கன்ச், நந்தன் குடில், ஆசார்ய வினோபா பாவே தங்கியிருந்த வினோபா குடில், வழிபாட்டு மைதானம், அருங்காட்சியகம், நூலகம், போன்றவை உள்ளன. 
சுத்தமான, அமைதியான சூழல், மரங்கள், அணில்கள், பறவைகள், காந்தியின் சிலை, போன்றவை நம் மனதிற்கு சாந்தி அளிக்கின்றன.
ஒற்றுமைக்கான சிலை! (STATUE OF UNITY)

நர்மதா மாவட்டத்தில் உள்ளது இச்சிலை! சுதந்திரப் போராட்ட வீரர்,... "இரும்பு மனிதர்' சர்தார் வல்லபாய் படேலின் மிக பிரம்மாண்டமான சிலை எனப் போற்றப்படுகிறது! 562 சுதேசி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து , ஒன்று பட்ட இந்தியாவை உருவாக்கிய சர்தார் வல்லபாய் படேலை கெüரவிக்கும் வகையில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 20,000 ச.மீ அளவுள்ள இடத்தில் 128 ச.கி.மீ பரப்பளவுள்ள செயற்கை ஏரியில் அமைந்துள்ளது. 58 மீ. உயர பீடமும், 182 மீ உயரமும் கொண்ட இதன் மொத்த உயரம் 240 மீ. ஆகும்! உலகின் மிகப் பெரிய சிலை இதுவே!
நராரா கடல் தேசியப் பூங்கா!

தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ளது. இந்தியாவின் முதல் கடல் தேசிய பூங்கா இது! கட்ச் வளைகுடாவில் ஜாம் நகர் கடற்கரையை ஒட்டி 42 சிறு தீவுகள் உள்ளன. அவற்றில் 33 தீவுகளில் பவளப்பாறைகள் உள்ளன. கடலில் நீர் உள்வாங்கும்போது இவற்றை தண்ணீரில் மூழ்காமலேயே பார்க்கலாம்! கடல்பறவைகள், பஃபர் மீன்கள், கடல் ஆமைகள், நண்டுகள், டால்பின்கள், ஜெல்லி மீன்கள், பல கடல் தாவரங்கள் போன்றவை காணக் கிடைக்காதவை! கடல் சார் உயிரினங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இவ்விடம் ஒரு பொக்கிஷம்! 
கோரி கிரீக் எல்லைக் கோடு!
குஜராத், கட்ச் வளைகுடாவில் அமைந்த இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பன்னாட்டு கடல் எல்லைக் கோடாகும். இந்திய விடுதலைக்கு முன் கட்ச் பகுதி, மற்றும் சிந்து பகுதியினை ஆண்ட சுதேசி சமஸ்தான அரசர்களின் கோரிக்கையின்படி "சர் கிரீக்' என்ற ஆங்கிலேயர் இவ்வெல்லைக் கோட்டை வகுத்தார்.
அகமதாபாத் என்னும் பாரம்பரிய நகரம்!
இந்நகரம் யுனெஸ்கோவால் 2017 - ஆம் ஆண்டு பாரம்பரிய நகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நகரம் கி.பி. 15 - ஆம் நூற்றாண்டில் மன்னர் "அகமத் ஷா' வால் உருவாக்கப்பட்டது. அவர் இதனைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். இங்கு சுவாமி நாராயண் கோயில், ஜாமி மசூதி, காந்தி ஆசிரமம், அடலாஜ் தெப்பக்குளம் சர்கேஜ் ரோலா சந்தை நுழைவாயில் உள்ளிட்ட 2600 பழமையான கட்டிடங்கள் உள்ளதாக அகமதாபாத் மாநகராட்சி கணக்கிட்டுள்ளது. 
தூத் சாகர் கூட்டுறவு பால்பண்ணை!

மெகசானா நகரத்தில் இந்தப் பால் பண்ணை உள்ளது. நாள் ஒன்றுக்கு 1.41 மில்லியன் கிலோ பால் இங்கு பதப்படுத்தப்படுகிறது. 1150 கிராமங்களில் உள்ள 45 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கூட்டுறவுப் பால் பண்ணை இதுவே! நெய், வெண்ணெய், தயிர், பால் பவுடர், பனீர், கோவா போன்ற பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன. 
ஆரவல்லி மலைத் தொடர்!
இந்தியாவின் மேற்குப் பகுதியில் சுமார் 700 கி.மீ. நீளத்தில் அமைந்த மலைத்தொடர். இது குஜராத் மாநிலத்தின் ஊடே செல்கிறது. 
அருவிகள்!

குனியா மஹாதேவ் அருவி, தூத் அருவி, ஜர்வாரி அருவி, ஜர்வானி அருவி, கிரா அருவி, ஜன்ஜாரி அருவி, ஜம்ஜிர் அருவி, நினை அருவி, கிர்மல் அருவி, அஹ்னா அருவி, சங்கர் அருவி, வாகை அருவி,. பில்புடிஅருவி, மஹால் அருவி, வில்சன் அருவி, சபுதாரா அருவி, ஹத்னி மாதா அருவி, போன்ற எண்ணற்ற அருவிகளும் நிறைந்துள்ள இடம் குஜராத் மாநிலம்! 

"தொலவிரா' ....."லோத்தல்'....தொல்லியல் களங்கள், மொகலாயக் கட்டிடக் கலைகள் நிறைந்த கட்டிடங்கள், பல்வேறு மதக் கலாச்சாரங்கள், பாரம்பரிய இடங்கள், கண்களைக் கவரும், மனதிற்கு இனிமையான இயற்கைச் சூழல்கள் நிறைந்த இடங்கள், வளம் கொழிக்கும் விவசாய நிலங்கள், கடற்கரைகள், மெய் சிலிர்க்க வைக்கும் எண்ணற்ற ஆன்மிகத் தலங்கள், மலைத்தொடர்கள், காடுகள், அருவிகள், கிர் தேசிய வனவிலங்கு சரணாலயம், வனங்கள், துறைமுகம் போன்ற எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டது குஜராத் மாநிலம்! இம்மாநிலத்தின் சிறப்புகள் மிகச் சுருக்கமாகவே இத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது! 


நிறைந்தது
தொகுப்பு : கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT