சிறுவர்மணி

அரங்கம்: ஆனந்தின் ஆனந்தம்!

ஏன்டா ஆனந்த் டிபன் பாக்சை திறக்காம ஓரமா போய் உட்கார்ந்திருக்கே?

இடைமருதூர் கி.மஞ்சுளா

அரங்கம் - 1
இடம்: பள்ளிக்கூடம்
பாத்திரங்கள்: ஆனந்த், ஸ்ரீராம், டேனியல், கோகுல்.
நேரம்: மதியம்

(ஆனந்த், ஸ்ரீராம், டேனியல், கோகுல் நால்வரும் ஒரே வகுப்பு, ஒரே பெஞ்சில் அமர்ந்திருக்கும் நண்பர்கள். கோகுலும் ஆனந்தும் உயிர் நண்பர்கள். மதிய உணவு வேளையில் சாப்பிடாமல் "பசியில்லை' என்று கூறி வருத்தமாக தன் நண்பர்களை விட்டு, சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தான் ஆனந்த்)

டேனியல்: ஏன்டா ஆனந்த் டிபன் பாக்சை திறக்காம ஓரமா போய் உட்கார்ந்திருக்கே?
கோகுல்: அவங்க அம்மா வழக்கம் போலத்தான் கொடுத்தனுப்பி இருப்பாங்க போலிருக்கு...
ஸ்ரீராம்: என்னடா ஆனந்த்... இன்னிக்கும் பிரட்தானா? உங்கம்மா சமையலே செய்து கொடுக்க மாட்டாங்களா?... தினமும் பிரட்டையே கொண்டுவறியே.... (ஆனந்த் மெளனமாக இருந்தான்)
டேனியல்: நாம எல்லோரும் ஷேர் பண்ணிக்கலாம்டா... எங்க அம்மா நிறையவே கொடுத்தனுப்பி இருக்காங்க... (டேனியல் தினமும் வகை வகையான உணவுகளைக் கொண்டு வருபவன்)
ஆனந்த்: வேணாம்டா... நீங்க சாப்பிடுங்க...
கோகுல்: சாப்பிடாம இருந்தா மயக்கம் வரும்... வீட்டுக்குப் போகவாவது தெம்பு வேண்டாமா...? வா...வா...
(நண்பர்கள் வற்புறுத்த ஆனந்த் அவர்கள் உணவைப் பகிர்ந்து உண்டான்.
டேனியல்: (சாப்பிட்டுக் கொண்டே) பிரண்ட்ஸ் நியூஇயர்க்கு இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு. இந்த முறை எங்க டாடி ரொம்ப கிராண்டா கொண்டாடனும்னு சொல்லியிருக்கார். நீங்கள் எல்லோரும் அவசியம் வரணும்டா...
(மூவரும் வருவதாகக் கூறினர். பள்ளி முடிந்து மற்ற நண்பர்கள் இருவரும் கிளம்பிவிட, கோகுலும் ஆனந்தும் தங்களது ஆட்டோவுக்காகக் காத்திருந்தனர். அப்போது...)

கோகுல்: தப்பா நினைக்காதடாஆனந்த்... உன் டியர் ஃபிரண்டுங்கறதுனால கேட்கறேன்.... உங்கம்மா
காலையில சமைக்க மாட்டாங்களா? தினமும் பிரட்டையே கொண்டு வறியே... வகுப்புல இருக்கிறவங்க எல்லாம் கேலி செய்யறாங்கடா... உங்க அம்மா வேலைக்குப் போறாங்களா?
ஆனந்த்: ஆமாண்டா...
கோகுல்: எங்க அம்மாவும்தான் வேலைக்குப் போறாங்க... ஆனா எங்கம்மா எனக்கு காலையிலையே சமையல் செய்து கொடுக்கறாங்களே... டேனியலோட அம்மாவும் வேலைக்குப் போறவங்கதான். அவன் பாரு தினமும் விதவிதமா எடுத்துகிட்டு வறான்... ஆனா உங்க அம்மாவால ஏன்டா செய்ய முடியலை?
ஆனந்த்: அதாண்டா எனக்கும் தெரியல... நான் ஸ்கூலுக்குக் கிளம்பறத்துக்குள்ள அவங்களால செய்ய முடியறதில்ல...பிரட் டோஸ்ட் செய்து தர்றதுதான்டா அவங்களுக்கு ஈஸியா இருக்கு...
கோகுல்: பிரட் சாப்பிட்டா நிறைய தண்ணி குடிக்கணும் தெரியுமா? இல்லைன்னா மோஷன் போறது கஷ்டமாயிடும்னு எங்க அம்மா சொல்வாங்க... அடிக்கடி பிரட் சாப்பிடக்கூடாது.
ஆனந்த்: நிஜமாவா...? சரிடா... இனிமே நிறைய தண்ணி குடிக்கிறேன்...
கோகுல்: சரி, நாளைக்கு சன்டேதான... எங்க வீட்டுக்கு வரியா? நாம ரெண்டுபேரும் ஸ்ரீராம் வீட்டுக்குப் போய் அவனையும் கூட்டிகிட்டு டேனியல் வீட்டுக்குப் போகலாம்...
ஆனந்த்: வரேண்டா... (ஆட்டோ வர இருவரும் ஏறி அவரவர் வீட்டுக்குச் சென்றனர்)

அரங்கம் - 2
இடம்: கோகுல் வீடு
நேரம்: மதியம்
பாத்திரங்கள்: கோகுல், ஆனந்த், கோகுலின் அம்மா.

(ஆனந்த் கோகுலின் வீட்டுக்குள் போனபோது கோகுல் டி.வி. பார்த்துக்கொண்டே புதினாவை ஆய்து கொண்டிருந்தான்.கோகுலின் அம்மா அருகில் உட்கார்ந்து காய் நறுக்கிக் கொண்டிருந்தார்)

கோகுல்: வாடா ஆனந்த்... உட்காரு. அம்மாவுக்கு இந்தப் புதினாவை ஆய்ந்து கொடுத்துவிட்டு வந்துடறேன்... பிறகு கிளம்பலாம்.
(ஆனந்த் சரி என்று கூறிவிட்டு சோபாவில் உட்கார்ந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு இருவரும் ஸ்ரீராமின் வீட்டுக்குக் கிளம்பினர்)

அரங்கம்-3
இடம்: ஸ்ரீராம் வீடு
பாத்திரங்கள்: ஸ்ரீராம், கோகுல், ஆனந்த்.
(ஆனந்தும் கோகுலும் ஸ்ரீராம் வீட்டுக்குப் போனபோது... ஸ்ரீராம் சமையல் அறையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தான்)


ஆனந்த்: நீ போய் ஏன்டா இந்த வேலையெல்லாம் செய்யறே...? சட்டையெல்லாம் ஈரமா ஆயிடுச்சு பாரு....
ஸ்ரீராம்: அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணேன் அவ்வளவுதான். நான் ஹெல்ப் பண்ணாம வேறு யார் செய்வா? எனக்கு என்ன அக்கா, தங்கச்சியா இருக்காங்க வீட்டு வேலை செய்யறத்துக்கு... நான்தானே செய்யணும்... சரி, சரி... இருங்கடா சட்டையை மாத்திகிட்டு வந்துடறேன்...
(ஸ்ரீராம் சட்டையை மாற்றிக்கொண்டு வர, மூவரும் டேனியல் வீட்டுக்குச் சென்றனர். )

அரங்கம் -4
இடம்: டேனியல் வீடு
பாத்திரங்கள்: ஆனந்த், கோகுல், ஸ்ரீராம், டேனியல், டேனியலின் தாய் ரோஸி, டேனியலின் அப்பா பீட்டர், அவன் தம்பி ஜான்.

(நண்பர் மூவரும் டேனியல் வீட்டுக்குள் நுழைந்தபோது, டேனியல் தன் அப்பா, தம்பியுடன் சேர்ந்து கிறிஸ்மஸூக்கான பிரம்மாண்டமான பூவேலைப்பாடுகளையும், கிறிஸ்மஸ் ட்ரீயில் பல வண்ண விளக்குகளையும் அலங்கரித்துக் கொண்டிருந்தான்)

ஆனந்த்: என்னடா இதையெல்லாம் போய் நீ செய்யறே?
டேனியல்: எங்க வீட்டு வேலையை நான்தானே செய்யணும்... அம்மா அப்பா மட்டும் செய்தால் நேரமாகுமே... நாங்களும் உதவி செய்தால்தானே வேலை சீக்கிரம் முடியும்? சரி, நீ கோகுல், ஸ்ரீராம் வீட்டுக்குப் போனியே.... அவங்க என்ன செய்துகிட்டிருந்தாங்க... கவனிச்சியா...?
ஆனந்த்: ம்ம்ம்ம்.. கோகுல் புதினா ஆய்ந்து தந்து கொண்டிருந்தான்... ஸ்ரீராம் சமையல் அறையில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தான்.
டேனியல்: நீ உங்க அம்மாவுக்கு என்ன ஹெல்ப் பண்ணுவே?
ஆனந்த்: நான் ஏன் பண்ணனும்? அவங்களே செய்துக்குவாங்க... பெண்கள்தானே வீட்டு வேலை செய்வாங்க...
டேனியல்: அப்படின்னு உங்கிட்ட யார் சொன்னா? டேய்.. ஆனந்த்... எந்தப் பிள்ளையாக இருந்தாலும் அம்மா- அப்பாவுக்கு வீட்டு வேலையில உதவி செய்யணும்... அதுவும் வேலைக்குப் போற அம்மாவுக்குக் கட்டாயம் உதவணும்... அப்போதான் அவர்களால வீட்டு வேலையை சீக்கிரம் செய்து முடிச்சுட்டு வேலைக்கும் போக முடியும்...

(அப்போது டேனியலின்அம்மா ரோஸி, ஆனந்தைப் பார்த்து...)

ரோஸி: ஆமாப்பா ஆனந்த்... டேனியல் எனக்குக் காலையில சமையலுக்கு சின்னச் சின்ன உதவிகளை செய்து கொடுக்கிறதாலதான் என்னால விதவிதமா, சீக்கிரமா சமைச்சு கொடுக்க முடியுது... எந்த வேலையா இருந்தாலும் வீட்டில இருக்கிறவங்களும் சேர்ந்து வேலையை பகிர்ந்து செய்து உதவினா வேலை சீக்கிரம் முடியும்.... சீக்கிரமா விதவிதமா சமையலும் செய்ய முடியும்... நேரத்துக்கு வேலைக்கும் போக முடியும்... குறிப்பா பண்டிகை காலத்துலதான் வீட்டுல இருக்க எல்லோரும் வீட்டு வேலையைப் பகிர்ந்து செய்யணும்... அம்மாவே செய்யணும்னு நினைக்கக்கூடாது. கிறிஸ்மஸ்சுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கு... ஆனால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்ததுனால, இன்னிக்கே முக்கால் வாசி வேலை முடிஞ்சிடுச்சு பார்த்தியா....?
ஆனந்த்: ஆமா ஆன்டி....நீங்க சொல்றது சரிதான்! இதையெல்லாம் நான் யோசிக்கவே இல்லை... இனிமே நானும் என் ஃபிரண்ட்ஸ் மாதிரி எங்க அம்மாவுக்கு உதவி செய்வேன்...
(நண்பர்கள் மூவரும் டேனியல் குடும்பத்தாரிடம் விடைபெற்றுக்கொண்டு அவரவர் வீடு திரும்பினர்)

அரங்கம் -5
இடம்: பள்ளிக்கூடம்
பாத்திரங்கள்: கோகுல், ஸ்ரீராம், டேனியல், ஆனந்த்.

(மதியம் உணவு சாப்பிட நண்பர்கள் நால்வரும் அமர்ந்திருக்க, ஆனந்தின் முகத்தில் ஆனந்தம் பொங்க....
முதலில் டிஃபன் பாக்சை அவன்தான் திறந்தான்.

ஸ்ரீராம்: என்னடா ஆனந்த் இன்னிக்கு விதவிதமா லஞ்ச் கொண்டு வந்திருக்க போலிருக்கே.... இப்போதான் உன் முகத்துல ஆனந்தம் பிறந்திருக்கு...(சிரித்தான்)
ஆனந்த்: ஆமான்டா... உங்களைப் போலவே நானும் எங்க அம்மாவுக்கு இன்னிக்கு ஹெல்ப் பண்ணேன்... பாரேன்... சீக்கிரமாகவே சமையல் செய்து கொடுத்துட்டாங்க...
டேனியல்: அப்ப இனிமே... நீ... விதவிதமா சாப்பாடு கொண்டு வருவேன்னு சொல்லு....
ஆனந்த்: ஆமான்டா... உங்களுக்குத்தான் முதல்ல தேங்கஸ் சொல்லணும்...
கோகுல்: தேங்க்செல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம்.... முதலில் டிஃபன் பாக்சை திற.... (எல்லோரும் சிரித்தார்கள்)
( நண்பர்கள் மூவரும் அன்று மகிழ்ச்சியாக ஆனந்த் கொண்டுவந்த உணவைப் பகிர்ந்து, சுவைத்து உண்டதைப் பார்த்த ஆனந்த், வேலையைப் பகிர்ந்து கொள்வதின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் முழுவதுமாக உணர்ந்தான்.)


-திரை-
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT