சென்னைநகரினில் எழுத்தாளர் - ஜெய
காந்தன், வீட்டினிலே - சில
தென்னை மரங்கள் வளர்த்து வந்தார்; - அதில்
காய்த்தன தேங்காய்கள்;
நன்கு பருத்த காய்களைக் கவர்ந்திட
நள்ளிர வாகுகையில் - ஒரு
நபர்,மரம் ஏறிப் பறிப்பதை - ஜெய
காந்தன் தெரிந்து கொண்டார்;
மாடியில் ஏறி விளக்கினைப் போட்டார்;
திருடரோ பயந்துவிட்டார்.
""மரத்தில் இருந்து விழுந்துவிடாதே;
மனம்போல் பறித்துக்கொள்...
...தேடிப் பார்த்துத் தேங்காய் பறிக்கப்
பகலில்ஏன் வரவில்லை? - இருள்
திரண்ட ராத்திரி வேளையில் வந்தா,
தென்னையில் ஏறுவது?....
....வேண்டும் காய்களை எடுத்துக்கொண்டு
மீதியைப் போட்டிடுக! - கீழே
வீழ்ந்துவிடாமல் பத்திரமாக
வீடுபோய்ச் சேர்ந்திடுக! ''
எனக் கூறிவிட்டு ஜெயகாந்தன்
வீட்டுக்குள் போய்விட்டார் - பிறகு
விடிந்த காலையில் மரத்தடிதனில் - தேங்
காய்களைப் பார்த்திட்டார்;
இரவினில் வந்தவர் திருடர்தான் ஆயினும்
கூச்சலும் இடவில்லை - ஜே.கே.
"எவர்தான் ஆயினும் அவர்மானுடர்" எனும்
கொள்கையை விடவில்லை;
"வறுமையின் காரணமாகவே மானுடர்
திருடர்கள் ஆகின்றார்; - ஒரு
வாய்ப்பினை நல்கினால் அவரும் திருந்துவர்"
என்பதை நிறுவிவிட்டார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.