நினைவுச் சுடர்!: பண்பு
அந்தக் கல்லூரி வளாகம் அன்று மாலை மிகவும் பரபரப்பாயிருந்தது. அதற்குக் காரணம் அன்று ஒரு அரசியல் தலைவர் உரையாற்ற ஏற்பாடாகி இருந்தது. அவரது சுவையான பேச்சால் தமிழகமே மயங்கி இருந்தது!
அந்தக் கல்லூரி வளாகம் அன்று மாலை மிகவும் பரபரப்பாயிருந்தது. அதற்குக் காரணம் அன்று ஒரு அரசியல் தலைவர் உரையாற்ற ஏற்பாடாகி இருந்தது. அவரது சுவையான பேச்சால் தமிழகமே மயங்கி இருந்தது! கருத்துச் சுவையுடன் சொற்சுவையும் கூடிய அவரது பேச்சை மக்கள் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்த காலம் அது.
ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தலைவர் வரவில்லை. தலைவரின் பேச்சைக் கேட்க எல்லோரும் மிகமிக ஆவலோடு இருந்தனர். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. இருட்டிக் கொண்டே இருந்தது. கடைசியில் வெகு நேரம் கழித்துத் தாமதமாக வந்து சேர்ந்தார் தலைவர். அவருடை ய பணிச்சுமை அப்படி இருந்தது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் தலைவரிடம், ""எங்களை வெகுநேரம் காக்க வைத்து விட்டீர்கள்... அதனால் தாங்கள் இன்று நீண்ட நேரம் பேச வேண்டும்...'' என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு மறுமொழியாக, ""எனது காலதாமதத்திற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.... ஆனால் அதிக நேரம் காத்திருந்தவர்களை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புவதுதான் பண்பு!.... நீண்ட நேரம் காத்திருப்பவர்களை, நீண்ட நேரம் கழித்து அனுப்புவது பண்பல்ல.... எனவே என் உரையை இன்று சுருக்கமாகவே முடித்துக் கொள்கிறேன்... என்று கூறிவிட்டு பேச்சைத் துவங்கினார் அந்தத் தலைவர்! அவர்தான் நம் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா!