குழந்தைகளே நலமா....
நான் தான் ஒதியன் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் லன்னியா கோரமண்டெலிக்கா என்பதாகும். ஆங்கிலத்தில் என்னை இண்டியன் ஆஷ் ட்ரி அதாவது இந்திய சாம்பல் மரம் என்று அன்பா அழைப்பாங்க. நான் அனாகர்டியாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு ஒடியன், ஒதிய, உதி, ஒடை, உலவை என்ற வேறு பெயர்களும் உண்டு. நான் மிகவும் மென்மையானவன். "ஒதி பெருத்து உத்தரத்திற்கு ஆகுமா?', "ஒன்றுக்கும் ஆகாத ஒதியன்' என்ற பழமொழிகளைச் சொல்லி என்னை மட்டமா பேசறாங்க. அதனால், இவன் இதுக்கு ஒத்து வர மாட்டான், நான் எதற்கும் பயன்பட மாட்டேன் என்று சொல்லியே என்னை ஒதுக்கி வச்சிட்டாங்க. என்னை மோசமா இழிவு செய்றாங்க. எப்படியோ பேசிட்டு போகட்டும். நான் கடமையை செய்கிறேன், பலனை எதிர்பார்ப்பதில்லை.
குழந்தைகளே, "சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பது உங்களுக்குத் தெரியும் தானே ? பயனற்றவர்கள் என்று யாருமில்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விஷயத்தில் பயன் தருவார்கள். நான் நிழல் தரும் மரங்களில் சிறந்தவன். உயிர்கள் பெருக்கத்திற்கென்றே உங்கள் மரங்களில் நானும் ஒருவன்.
நான் வேகமாக வளருவேன். என் மரத்தின் இலைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும். இலைகளின் எண்ணிக்கையை உற்றுப் பார்த்தால் வியந்து போவீர்கள். அந்தளவுக்கு இலைகளை நான் வளர்த்தெடுப்பேன்.
என் மரத்தின் கிளையை வெட்டி வேறு இடத்தில் நட்டாலும் துளிர்த்து வளர்ந்து நன்மைகள் பல தருவேன். திருமண சடங்குகளின் போது மூங்கில் குச்சியுடன் என் மரத்தின் குச்சியையும் சேர்த்து சடங்கு செய்வர். அதன் பொருள் என்ன தெரியுமா குழந்தைகளே, ஒதியன் மரத்தின் கிளையை வெட்டி வேறு இடத்தில் நட்டாலும் துளிர் விட்டு மரமாவது போல் மணமக்கள் பெற்றோர்களை விட்டுப் பிரிந்தாலும் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று நலமோடு, வளமோடு செழித்து வாழ வேண்டும் என்பது தான்.
அப்போ, என் இலைகள், காய்களால் எந்தப் பயனும் இல்லைன்னு சொன்னாங்க, வேலி ஒரத்தில் மட்டும் என்னை வளர்க்கலாமுன்னு சொன்னாங்க. ஆனா, இப்போ உள்ள நீங்கள் மிகவும் திறமைசாலிகள் இல்லையா. என் பயன்பாடுகளை நீங்க உணர்ந்தீட்டிங்க. என் விதையை வறுத்து மூலிகை பொருளா பயன்படுத்தறாங்க. தீக்குச்சிகள், மரப்பெட்டிகள், வண்டிச்சக்கரங்கள், ஏர்கள், உலக்கைகள், தூரிகை கட்டைகள், சிலேட் சட்டங்கள், பல்குத்திகள், காகிதக்கூழ் போன்றவற்றில் என்னை பயன்படுத்தறாங்க. நான் ஏழை, எளிய மக்கள் அடுப்பெரிக்கவும் பயன்படறேன். என் மரப்பட்டைகள் சாயமேற்றவும் உதவுது.
என் மரத்திலிருந்து வடியும் பிசின் மிகவும் பயனுள்ளது. இது "ஜிங்கான் கோந்து' எனப்படும். காலிகோ அச்சு, தாள் மற்றும் துணி, வார்னீஷ்கள், மை, சுவர் பூச்சுகள் ஆகிவற்றில் பெருமளவில் பயன்படுகின்றது. கால்நடைகள் நமக்கு பேசா குழந்தைகள். அவங்களை காப்பது நமது கடமை குழந்தைகளே. அவங்க என் இலைகளை விரும்பி சாப்பிடுவாங்க, ஏன்னா என் இலையில் நல்ல ஊட்டச் சத்துள்ளது. கோடைக் காலத்தில், என் காய்கள் பறவைகள், அணில்களுக்கு நல்ல உணவு. பழங்கள் திராட்சைப் பழங்கள் போல கொத்துக் கொத்தாக இருக்கும். குருவிகள் பாடிக்கிட்டே வந்து என் மீது அமர்ந்து உணவருந்தி செல்வாங்க. அப்போ, எனக்கு மகிழ்ச்சியா இருக்கும். எனது இப்பண்புகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுது. என் இலைகள் நிலத்தில் கோடையில் உதிர்வதால், நிலம் உயிர்க் கரிமத்தை உருவாக்கிக் கொள்கிறது.
என்னையும், நண்பர் பலா மரத்தையும் வீட்டுத் தோட்டங்களிலும், தோப்புகளிலும், பொது இடங்களிலும் வளர்ந்தால் வறண்ட நிலம் நீர் நிறைந்த நிலமாக மாறும் என தாவரவியலாளர்கள் சொல்றாங்க. ஏன்னா, நாங்க இரண்டு பேரும் குளிர்ச்சி, வெப்பம் இரண்டின் கலவை. "உயிர்களால் மழை வருவதில்லை, உயிர்களுக்காக மழை பொழிகிறது' என்பதை உணருங்கள். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்..
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.