முகப்பு
சிறுவர்மணி

பெரியதும் சிறியதும்!

இரண்டு பேர் ஒரு துறவியிடம் வந்தனர். தாங்கள் இருவரும் பாவங்கள் செய்தவர்கள் என்றும், அதற்குப் பிராயச்சித்தம் சொல்ல வேண்டும் என்றும் கேட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:

இரண்டு பேர் ஒரு துறவியிடம் வந்தனர். தாங்கள் இருவரும் பாவங்கள் செய்தவர்கள் என்றும், அதற்குப் பிராயச்சித்தம் சொல்ல வேண்டும் என்றும் கேட்டனர்.
துறவி இருவரையும் செய்த குற்றங்களை விவரமாகச் சொல்லும்படி கேட்டார்.
முதலாமாவன், ""சுவாமி!..... என்னுடைய ஆத்திர புத்தியினால் என் நண்பன் இறக்கக் காரணமாகி விட்டேன்..... என் மனசாட்சி என்னைத் துன்புறுத்துகிறது. அந்தச் செயலை நினைத்து வேதனைப்படுகிறேன்'' என்று சொல்லி அழுதான்.
இரண்டாமாவன், ""நான் பெரிய குற்றம் ஏதும் செய்யவில்லை.... சிறிய, சிறிய குற்றங்களாகப் பல செய்திருக்கிறேன்.... அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ள இயலவில்லை'' என்றான்.
துறவி சிறிது யோசனை செய்தார்.
முதலாமவனைப் பார்த்து, ""உன்னால் சுமக்கக்கூடிய அளவுக்கு ஒரு பெரிய கல்லாகப் பார்த்துத் தூக்கிக்கொண்டு வா'' என்றார்.
இரண்டாமவனைப் பார்த்து, ""ஒரு கோணிப்பையை எடுத்துக்கொள்!..... சிறிய, சிறிய கற்களாகப் பொறுக்கி எடுத்துக் கோணிப்பைக்குள் போட்டு எடுத்துக் கொண்டு வா'' என்று கூறினார்.
இருவரும் முனிவர் கூறியபடியே செய்தனர்.
துறவி முதலாமனைப் பார்த்து, ""நீ எடுத்து வந்த கல்லை எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டு வா!'' என்றார்.
முதலாமவன் அப்படியே செய்தான்.
பிறகு, ""இரண்டாமவனைப் பார்த்து, ""நீ கொண்டுவந்த கற்களை எங்கெங்கு எடுத்தாயோ, அங்கங்கே போட்டுவிட்டு வா!...'' என்றார்.
இரணடாமவன் விழித்தான்!... தான் பொறுக்கி வந்த கற்கள் எந்தெந்த இடத்திற்கு உரியவை என்று தன்னால் கண்டுபிடிக்க இயலாது என்றும் கூறினான்.
""அன்பர்களே,.... பாவங்கள் இந்தக் கற்களைப் போன்றவையே!.... பெரும் பாவம் செய்தவன் மனம் பெரிய கல்லைப் போலவே அழுத்திக்கொண்டே இருக்கும். அவன் அதை உணர்ந்து, நினைத்து வருந்தும்போது அந்தப் பாவத்தை மன்னித்துவிட முடியும். எண்ணற்ற சிறிய, சிறிய பாவங்களைச் செய்தவன், தான் என்ன பாவம் செய்தோம் என்பதையே எண்ணிப் பார்க்க முடியாமல், அவற்றை நினைத்து வருந்தவும் முடியாதவனாக இருப்பதால் அவன் எப்போதும் பாவியாக இருக்கிறான்..... பாவங்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும் பாவம், பாவமே! அதை நினைத்து மனப்பூர்வமாக வருந்தி ஆண்டவனிடம் முறையிட்டால் ஆண்டவன் நிச்சயம் மன்னிப்பார்!'' என்றார் துறவி.

(தெய்வீகக் கதைகள் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.