பாப்பா!
அந்த நிலா வானை விட்டு இறங்கி வந்தது - இந்த அழகுப் பாப்பா உருவினிலே ஆடி வந்தது!
அந்த நிலா வானை விட்டு இறங்கி வந்தது - இந்த
அழகுப் பாப்பா உருவினிலே ஆடி வந்தது!
செங்கழுநீர்ப் பூவைத் தானே முகத்தில் கொண்டது - மின்னும்
சின்னப் பூவாம் நீலோற்பவம் கண்ணில் உள்ளது!
செந்தாமரைக் கொடியை விட்டு உடம்பில் பூத்தது - அந்தச்
செம்பருத்திப் பாதம் அடி எடுத்து வைத்தது!
செந்தாழம்பூவும் கையில் மணத்தை வீசுது! - வண்ணச்
செவ்வந்திப் பூ காதினிலே பூத்திருக்குது!
சிவந்த ரோசாப் பூவும் மெல்ல இதழை விரிக்குது - பூஞ்
சிரிப்பில் அந்த வானுலகச் சொர்க்கம் தெரியுது!
தவழ்ந்து வரும் அழகில் உள்ளம் கொள்ளை போகுது - பாப்பா
தாவும் போது தூக்கி முத்தமிட்டால் இனிக்குது!