பொங்கல் விழா!
வெள்ளைநிறச் சுண்ணாம்போ விரும்பும் பிற வண்ணங்களோ இல்லங்களில் தீட்டி மிக
சிறுவர்மணிபொங்கல் விழா!
வெள்ளைநிறச் சுண்ணாம்போ விரும்பும் பிற வண்ணங்களோ இல்லங்களில் தீட்டி மிக
வெள்ளைநிறச் சுண்ணாம்போ
விரும்பும் பிற வண்ணங்களோ
இல்லங்களில் தீட்டி மிக
எழில் துலங்கப் படுத்தும் விழா!
பள்ளியுடன் கல்லூரி
பல்கலைக் கழகங்களும்
உள்ளபடி விடுப்பளித்துத்
உயர்மதிப்புக் கொடுக்கும் விழா!
அரிசி, வெல்லம், பருப்புடனே
ஆயிரம் ரூபாய்களையும்
அரசினரும் அரும்பரிசாய்
ஆர்வமுடன் அளிக்கும் விழா!
தொடர்வண்டிப் பேருந்தில்
தொத்தக் கூட இடம்கிடையா
இடர்களையும் சிறப்புந்து
ஏற்பாட்டால் துடைக்கும் விழா!
வார, மாத நாளிதழ்கள்
வைத்தழகாய் நடத்திடுவோர்
ஓரிதழைச் சிறப்பிதழாய்
உலவவிட்டுக் களிக்கும் விழா!
ஏடுகளில் எழுதிவரும்
எழுத்தாளர் கவிஞர் பலர்
பாடல் கதை கட்டுரைகள்
படைத்துயர்த்திப் பிடிக்கும் விழா!
அலையலையாய்க் கலைநிகழ்ச்சி
அடுக்கடுக்காய் அடுத்தடுத்து
தொலைக்காட்சி வானொலியில்
தொடர்ச்சியாக நடத்தும் விழா!
காட்டிலுள்ள இஞ்சி, மஞ்சள்
கரும்பு வாழை இவற்றையெல்லாம்
கூட்டியொன்றாய்ச் சந்தைகளில்
கொண்டு வந்து குவிக்கும் விழா!
வீட்டிலுள்ள புழக்கத்திற்கு
வேண்டாத பொருளையெல்லாம்
போட்டுத் தெரு ஓரங்களில்
போகியிலே கொளுத்தும் விழா!
மாவிலையின் தோரணங்கள்
மாதரிடும் கோலங்களால்
"வா' எனவே தைத் தாயை
வரவேற்று அழைக்கும் விழா!
வாசலிலே அடுப்புமிட்டு
வாசமுள்ள பொங்கலிட்டு
ஆசையுடன் உதித்துவரும்
ஆதவன் முன் படைக்கும் விழா!
துள்ளிவரும் காளைகளைத்
தோள்வலியால் வாலிபர்கள்
வெள்ளம் அணை தடுப்பதுபோல்
வீரத்துடன் அடக்கும் விழா!
பழந்தமிழர் மரபினையும்
பறை சாற்றும் "கபடி' யெனும்
விளையாட்டில் மின்னொளியில்
விடியும்வரை திளைக்கும் விழா!
தெள்ளுதமிழ்ப் பொதுமறையாம்
திருக்குறளைப் புனைந்து தந்த
வள்ளுவரின் புகழையிந்த
வையெமெங்கும் பரப்பும் விழா!