சிறுவர்மணி

முத்துக் கதை!: பயனற்ற செயலால் வந்த பயன்!

அ. ராஜா ரகுமான்

பரத்வாஜ முனிவரும், ரைப்ய முனிவரும் நண்பர்கள். பரத்வாஜரின் பிள்ளையின் பெயர் யவக்ரீதன். ரைப்யருக்கு, பராவசு, அர்வாவசு, என இரண்டு பிள்ளைகள். கங்கைக் கரையில் இருந்த பாடசாலையில் யவக்ரீதன், பராவசு, அர்வாவசு எல்லோரும் படித்தனர்.

அர்வாவசுவும், பராவசும் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக விளங்கினர். நல்ல வேத விற்பன்னர்களாக இருந்தனர். யவக்ரீதனோ படிப்பதில் ஆர்வம் குன்றியவனாக இருந்தான். மேலும் பராவசு, அர்வாவசு மீது பொறாமையும் அவனுக்கு இருந்தது. மேலும், படிக்காமல், எழுத்துகளை அறிந்துகொள்ளாமல், ஆசிரியரிடம் எதையும் கேட்காமல் தான் ஒரு பெரிய அறிவாளியாக ஆகிவிட ஏதேனும் வழி இருக்கிறதா என்று சிந்திக்கலானான்.

பராவசு, அர்வாவசுவைவிட கல்வி, கேள்விகளில் சிறந்தவனாக ஆக ஏதேனும், குறுக்கு வழி இருக்கிறதா என சிந்தித்துக் கொண்டிருந்தான்.

கல்வியை சுலபமாக அடைவதற்காக யவக்ரீதன் இந்திரனைக் குறித்துத் தினமும் பல மணிநேரம் தவம் செய்யலானான். யவக்ரீதனுக்கு நல்லறிவை உணர்த்த நினைத்தான் இந்திரன். ஒரு முதிய அந்தணன் வடிவம் கொண்டான்.

பிறகு, அந்த அந்தணர் யவக்ரீதன் வசித்த பகுதிக்குச் சென்றார். அங்கு அருகிலுள்ள ஆற்றின் கரையில் அமர்ந்து கொண்டு சிறிது, சிறிதாக ஆற்று மணலை ஒரு கையால் அள்ளி ஆற்றில் ஓடும் தண்ணீரில் வீசிக் கொண்டிருந்தார்.

அப்போது யவக்ரீதன் அந்த வழியே வந்தான். வயதான அந்தப் பெரியவரை விசித்திரமாக நோக்கிய யவக்ரீதன், ""பெரியவரே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று வினவினான்.

அதற்கு அந்தப் பெரியவர், ""இந்த வழியே மனிதர்களும், விலங்கினங்களும் ஆற்றைக் கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, ஆற்றைக் கடப்பதற்கு ஒரு மணற்பாலத்தைக் கட்டி விட்டால் நல்லது அல்லவா?.... அதற்காகத்தான் இப்படி மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறேன்.... ‘‘ என்றார்.

""வெறும் மணலால் கங்கைக் கரையில் பாலம் கட்டுதல் இயலுமா?.... நீங்கள் போடும் மண்ணை ஆற்று நீர் அடித்துச் சென்றுவிடாதா?....இப்படி அறிவுக்குப் பொருந்தாத செயலை முதியவரான நீங்கள் செய்யலாமா?...'' என்று கேட்டான் யவக்ரீவன்.

""நீயும் என்னைப் போலத்தான்!.... படிக்காமல், எழுத்துகளை அறிந்துகொள்ளாமல், ஆசிரியரிடம் எதையும் கேட்காமல் வெறும் தவத்தின் மூலம் அறிவு கிடைத்துவிடும் என நினைக்கிறாய்!....''

யவக்ரீதனுக்கு சுரீர் என்று உரைத்தது. ""ஐயா, நீங்கள் யார்? என்னை மன்னிக்க வேண்டும். குறுக்கு வழி சரியல்ல.... என்பதை நான் உணர்ந்துகொண்டேன். உங்களுக்கு நமஸ்காரம்!'' என்றான்.

இந்திரன் தன் உண்மை உருவை அவனுக்குக் காட்டி, ""உண்மையை உணர்ந்து கொண்டாயே, அது போதும்! முனைப்புடன் முறையாகக் கல்வி கற்பாய்! சிறந்த கல்விமானாக ஆவாய்!... எனது ஆசிகள்!'' என்று கூறி மறைந்தான் இந்திரன்.

யவக்ரீதன் முனைப்புடன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிப் பிரகாசித்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT