முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: அழகு மரம்- ஓமை மரம்

நான் தான் ஓமை மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல்  பெயர்  டில்லனியா இண்டிகா என்பதாகும்.  நான் டில்லனியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:

குழந்தைகளே நலமா,

நான் தான் ஓமை மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல்  பெயர்  டில்லனியா இண்டிகா என்பதாகும்.  நான் டில்லனியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு பாங்கர், உகா என்ற வேறு பெயர்களும் உண்டு. “தாவர உலகில் மிகப் பிரமாதமாக காட்சியளிக்கும் பூக்களையும், காய்களையும் கொண்டது "டில்லனியா' என்று தாவரவியலார் என்னை பெருமையா சொல்வாங்க. வால்மீகி முனிவர் என்னை “பாவ்யா” எனவும், “சரித்திரா” எனவும் குறிப்பிட்டுள்ளதாக தாவரவியல் அறிஞர்கள் சொல்றாங்க.    நான் இந்தியாவில் அதிகமாகக் காணப்படுவதால்.  "இண்டிகா' என்ற இணைப்புப் பெயர் ஏற்பட்டுள்ளது.  செங்குத்தாக வளர்ந்து, நிறைய தழைகளுடன் நானிருப்பேன். 

நான் அதிகமாக வெப்பப் பகுதிகளிலும், ஈரச் சூழல் மிக்க காடுகளிலும், ஓடைகள், ஆறுகளின் கரைகளிலும் வளர்கிறேன்.   நான் வறண்ட பாலை நிலத்தில் வறட்சியைத் தாங்கி வளரும் இயல்பினன்.  வேனில் காலத்தில் வெப்பத்தைத் தாங்குவதற்கேற்ற உலர்ந்த கிளைகளை நான் கொண்டிருக்கிறேன். நான் ஓர் அழகு நிறைந்த மரமாவேன். என்னை தோட்டங்களில் காற்றுத் தடுப்பு மரமாகவும், பெரிய அலுவலக வளாகங்களில், வீடுகளில் அழகுக்காகவும்  வளர்க்கலாம்.  என் அடிமரத்தை "புன்தாள்', "பொரிதாள்', "முடத்தாள்' என குறிப்பிடுவார்கள்.  

ஓமை மரம் பெரிய கழியில் வாழும் முதலையின் முதுகுத் தோல் போன்ற பெருக்கமைந்த அடிப்பகுதியை உடையது என அகப்பாடல்கள் தெரிவிக்கின்றன. என் இலை, பட்டை, பழம், விதை சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டது. என் பழம் இனிப்பு சுவை கொண்டது.  என் பழச்சாறுடன் தண்ணீரையும், சர்க்கரையையும் கலந்து குடித்தால் காய்ச்சல், இருமல் ஓடியே போயிடும். என் இலைகள் கால்நடைகளுக்கு சிறந்த தீவனம்.  யானைகள் என் பழத்தையும், பட்டையையும்  விரும்பி உண்ணுவார்கள். அஸ்ஸாமிலுள்ள ஆதிவாசிகள் மெலிந்தவர்களுக்கு என் பழத்தை பானமாக்கித் தருகிறார்கள்.   என் கனியில் புளிப்புத் தன்மை இருப்பதால் சிலர் சமைத்தும், ஊறுகாய் செய்தும் சாப்பிடுகிறார்கள்.  ஜெல்லியும் தயாரிக்கலாம்.  இது மலமிளக்கிக்கு சிறந்த மருந்து.      

என் அடிபகுதி பருத்தும், கிளைகள் தாழ்ந்தும், இலைகள் புல்லியதாகவும் காணப்படும். என் இலைகளை கூரை அமைக்கவும் பயன்படுத்தலாம். என் இலையும், பட்டையும், துவர்ப்பு சுவையுடன் வெப்பத் தன்மையும் கொண்டவை.  மூட்டுவலி உள்ளவர்கள் என் பட்டையை நசுக்கி கட்டினால் மூட்டு வலி பறந்து போய் விடும்.  என் பட்டையை உலர்த்தி, நீரிலிட்டு கஷாயமாகக் குடித்தால் காய்ச்சல் இருக்காது. என் பச்சை வேர்ப்பட்டையை இடித்து கட்டினால், கட்டிகளில் கொப்புளம் உடைந்து வடு தெரியாது.  என் விதையை பொடியாக்கி மருந்தாக சாப்பிட்டால் முற்றிய நோய்கள் குணமாகும்.  இது உடல் வெப்பத்தைத் தணித்து நரம்பு மண்டலத்தையும் சீராக்கி, களைப்பை நீக்கி விடும்.  

என் கிளைகளின் நுனியில் நல்ல வாசனையுடைய  பெரிய வெள்ளைப் பூக்கள் மலரும்.  குழந்தைகளே, வடகிழக்கில் வாழும் ஆதிவாசிகள் என் பூக்களை சமைத்து உண்கின்றனர். டஸ்ஸார் இன பட்டுப்புழுவும், அட்லாஸ் இன பட்டுப் புழுவும் என் இலையை விரும்பி சாப்பிடுவாங்க.  இந்தப் புழுக்கள் மூலம் நீங்க பட்டு நூல் பெறலாம். 

நான் உறுதியானவன் என்பதால் நீரிலும் நீடித்து உழைப்பேன்.  துப்பாக்கிக் கட்டைகள், கட்டட வேலைகள், கடைசல் பணிகள் செய்ய என்னைப் பயன்படுத்தறாங்க.  நான் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், அருள்மிகு வேடப்பர் திருக்கோவிலில் தலவிருட்சமாக இருக்கேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.