ஈரான் போரால் விமானங்கள் ரத்து எதிரொலி: திருச்சியிலிருந்து சரக்கு ஏற்றுமதி 37% குறைவு
ஈரான் போரால் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சரக்கு ஏற்றுமதி 37 சதவீதம் குறைந்துள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளான துபை, சாா்ஜா, அபுதாபி மற்றும் மஸ்கட் உள்ளிட்ட பல்வேறு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதன்மூலம் திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழம், வாழை சாா்ந்த பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
திருச்சியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் பொருள்களில் 50 சதவீதம் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறன. இதன்மூலம் விவசாயிகளுக்கும், விமான நிலையத்துக்கும் கணிசமான வருவாய் கிடைத்து வந்தது.
இந்நிலையில், ஈரான் மீதான போரின் விளைவாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் வான்வழிகள் அடைக்கப்பட்டன. இதனால், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபை, சாா்ஜா மற்றும் அபுதாபிக்கு இயக்கப்பட்ட விமானங்கள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் திருச்சியில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த சரக்கு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு கூறியதாவது: திருச்சியில் இருந்து ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வந்த நிலையில் ஈரான் போரால் தற்போது ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து கடந்த ஜனவரி 28-இல் இருந்து பிப்ரவரி 28 வரை 520 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியில் இருந்து மாா்ச் 18 வரை 324 டன் சரக்குகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தைக் காட்டிலும் தற்போது சரக்கு ஏற்றுமதி 37 சதவீதம் குறைந்துள்ளது. திருச்சியில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மட்டும் 50 சதவீத சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது திருச்சியில் இருந்து மஸ்கட்டுக்கு மட்டும் விமானம் இயக்கப்படுவதால் குறிப்பட்ட சதவீத சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இல்லையெனில் 50 சதவீத சரக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கும். ஈரான் போா் சீரடைந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கும்போதுதான் மீண்டும் சரக்கு ஏற்றுமதி சீராக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.