அரங்கம்: ஆல் பாஸ்!
என்ன பிள்ளைங்களா.! எதற்கு இப்படி இரண்டு பேரும் துள்ளிக் குதித்து உங்களது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் ?
காட்சி - 1
இடம்: ராகவனின் வீடு
மாந்தர்கள்: ராகவன், அவரது மனைவி சுமதி,
மகன் கிரி, மகள் ஹரிணி.
(அனைவரும் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று மகன் கிரியும் மகள் ஹரிணியும் துள்ளிக் குதித்து, ஹைய்யா, ஜாலி! யென்று மகிழ்ச்சியுடன் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.)
ராகவன்: என்ன பிள்ளைங்களா.! எதற்கு இப்படி இரண்டு பேரும் துள்ளிக் குதித்து உங்களது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் ?
ஹரிணி : என்னப்பா, தொலைக்காட்சி செய்தியை நீங்கள் சரியாக பார்க்கவில்லை போலிருக்கிறதே ?
ராகவன் : அப்படி என்ன பெரிதாக சொல்லி விட்டார்கள் இன்றைய செய்தியில் ?
கிரி : அப்பா! நாங்க யாரும் பரிட்சை எழுத வேண்டாமாம்! எல்லோரும் பாஸ்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கெல்லாம் இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. !
ராகவன்: நீங்கள் யாவரும் இத்தனை நாட்களாக உங்கள் ஆசிரியர், கணினி மூலம் நடத்தும் பாடங்களையெல்லாம் கூர்மையாக கவனித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன். இந்த வருடத்து பாடங்கள் அனைத்தும் பல தடங்கல்களுக்கு நடுவில் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவர்களாகிய நீங்களும் தேர்வுக்குத் தயாராக இருக்கிறீர்கள் என்றும் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்கள் தேர்வுக்கு பயப்படுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
காட்சி - 2
இடம்: ராகவனின் வீடு
மாந்தர்கள்: ராகவன், அவரது மனைவி சுமதி,
மகன் கிரி, மகள் ஹரிணி.
ராகவன்: பிள்ளைகளா, உங்கள் இரண்டு பேருக்கும் நானும் ஒரு ஆசிரியர் என்ற முறையில் நம் வீட்டிலேயே இந்த ஆண்டுத் தேர்வை நடத்தப் போகிறேன்.
ஹரிணி : என்னப்பா சொல்றீங்க!?
ராகவன்: நான் உங்கள் இரண்டு பேருக்கும் இந்த ஆண்டிற்கான இறுதி தேர்வை நடத்தப் போகிறேன் என்று சொல்கிறேன். தேர்வுக்கான கேள்வித் தாள்களையும் நானே தயாரிக்கப் போகிறேன்.
கிரி : என்னப்பா ஜாலியா இருக்கறதை விட்டுட்டு, தேர்வு, கீர்வு என்று எதற்கு எங்களை பயமுறுத்தறீங்க? எங்களை கொஞ்ச நாட்கள் சுதந்திரமாக இருக்க விடுங்களப்பா! இந்த ஆண்டு தேர்விலிருந்து எங்களுக்கு விடுதலை அளியுங்கள்.
ராகவன்: குழந்தைகளா, இத்தனை வருடங்களாக உங்கள் பள்ளிக்குச் சென்று நாலு நண்பர்களுடன் சேர்ந்து படித்துவிட்டு வந்தீர்கள். கரோனா தொற்று நோய் நம் அனைவருடைய பிழைப்பையும் கெடுத்து விட்டது. பிள்ளைங்களோட படிப்பையும் அது கெடுக்கப் பார்த்தது. நல்ல வேளை, கணினி இருக்கவே நாம் அனைவரும் தப்பித்து விட்டோம்.
பள்ளிக்குப் போகாமலேயே இந்த வருடப் படிப்பை எல்லா மாணவர்களும் ஒரு வழியாக முடித்து விடப்போகிறார்கள்.
ஹரிணி: அப்பா!அதற்காக எங்களுக்கு தேர்வு வைக்கிறேனென்று சொல்கிறீர்களா ?
சுமதி : ஹரிணி! அப்பா உங்கள் இருவருடைய நன்மைக்காகத்தான் இந்த மாதிரித் தேர்வு வைக்கப் போகிறாரென்று புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் படித்தவற்றை யெல்லாம் மறந்து விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் இந்த மாதிரித் தேர்வையே நடத்தப் போகிறார். படித்தவற்றை ஒரு முறை எழுதி பார்த்தால், அவற்றை நம்மால் எக்காலமும் மறக்க முடியாது. பசுமரத்தாணி போல அவை, நம் மனதினில் ஆழமாகப் பதிந்து விடும்.
சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்னு பெரியவங்க சொல்லு வாங்க. நான்கு முறை காதால் கேட்பதை விட, ஒரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் நல்லது.
ராகவன் : "பிள்ளைங்களா, நான் உங்களுக்காக நடத்தப் போற மாதிரித் தேர்வில் நான் எந்த மதிப்பெண்ணும் உங்களுக்குக் கொடுக்கப் போவதில்லை. உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு தேர்வு அவ்வளவு தான்!.! உங்களது ஞாபகசக்திக்கு நீங்களே உங்களுக்கு வைத்துக் கொள்ளும் ஒரு சோதனை ஓட்டம்! நீங்கள் இரண்டு பேரும்தான் ஏற்கெனவே பாசாகி விட்டீர்களே! (சிரித்துக்கொண்டே)
கிரி : அப்படியென்றால் சரி, நாங்கள் இருவரும் தேர்வு எழுதத் தயாராகவே இருக்கிறோம் அப்பா.
காட்சி 3
இடம்: ராகவன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம்.
மாந்தர்கள்: ராகவன், பள்ளித் தலைமையாசிரியர், ராகவனின் பிள்ளைகள் கிரி மற்றும் ஹரிணி.
(மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர் மூலமாக ராகவன் தனது பிள்ளைகளுக்கு மாதிரி ஆண்டுத் தேர்வு நடத்தப் போகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு பள்ளித் தலைமையாசிரியர் ராகவனைத் தன்னுடன் பேச அழைக்கிறார்.)
தலைமையாசிரியர்: ராகவன் ஐயா, உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள். மாணவர்கள் நலனில் உங்களுக்கு இருக்கும் அக்கறை எங்களுக்கு வியப்பாக உள்ளது. எங்கள் பள்ளி மாணவர்கள் சிலர் மூலமாக தாங்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு மாதிரி ஆண்டுத் தேர்வு நடத்தப் போகிறீர்கள் என்று கேள்விப் பட்டோம்.
ராகவன்: ஆம் ஐயா! அது எனது தனிப்பட்ட முடிவு. என் பிள்ளைகளும் அதை வரவேற்றிருக்கிறார்கள்.
தலைமையாசிரியர்: மிக்க மகிழ்ச்சி ஐயா! இதைக் கேள்விப்பட்ட மற்ற பெற்றோர்களும் அது போல அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மாதிரித் தேர்வினை நடத்தச் சொல்லி எங்களை வற்புறுத்துகிறார்கள், இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ராகவன்: ஐயா! அனைத்து பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பும் அதுதானுங்களே!!
தலைமையாசிரியர்: உண்மைதான் ஐயா! மாணவர்கள் பள்ளிக்கூடம் சென்று நான்கு பிள்ளைகளுடன் சேர்ந்து படிப்பது, சக மாணவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் சிறப்புகளையும் குறிப்பறிந்து, பகுத்து, உயர்வு பெற்று, அவர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து தங்களுடைய உடல், அறிவு மற்றும் சிந்தனைத் திறன்களை அதிகப்படுத்துவதற்காக மட்டுமே தவிர வேறெதற்கும் இல்லை. இந்தக் கொடிய கரோனா தீநுண்மி மாணவர்களைப் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்து, அவர்களுடைய எதிர்க்காலத்தை சிதைத்து விட நாம் அனுமதிக்கக்கூடாது.
ராகவன்: உண்மை தான் ஐயா!. நம்முடைய அரசாங்கமும் பல இன்னல்களுக்கு நடுவில் சிறந்த முறையில் கணினி மூலமாக பாடங்களைத் தொடர்ந்து நடத்தி, மாணவர்களை சோர்வடையாமல் இருக்கச் செய்து, அவர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டியது.
பள்ளித் தலைமையாசிரியர்: ஐயா! இந்த மாதிரித் தேர்வு விஷயமாக நீங்கள் ஏதேனும் கருத்து கூற விரும்பினால், அதை தாராளமாக எங்களுக்கு வழங்கலாம்.
ராகவன்: மிக்க மகிழ்ச்சி ஐயா !. இந்த மாதிரித் தேர்வு, மாணவர்களின் ஞாபகத்திறனை சோதிக்கப்படுவதற்கும், படித்தவற்றை மாணவச்செல்வங்கள் மறக்காமலிருக்கிறார்களா என்பதை அறிவதற்காக மட்டுமே தவிர, அவர்களின் படிப்புத்திறமையை எடை போடுவதற்காக அல்ல என்பதை நாம் கண்டிப்பாக அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆகையினால், இந்த "மாதிரி ஆண்டுத் தேர்வின்' விடைத்தாள்களை நாம் திருத்தி மதிப்பெண் வழங்காமலிருப்பது மிகவும் நல்லது. இப்படிச்செய்தால் மாணவர்களும் இந்த மாதிரித் தேர்வை மனமுவந்து ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள்.
தலைமையாசிரியர்: இது மிகவும் நல்ல யோசனையாக இருக்கிறது ஐயா.
ராகவன்: மேலும் பெற்றோர்களே ஒரு தற்காலிக ஆசிரியராக பொறுப்பேற்று, தங்கள் வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் தேர்வினை நல்ல முறையில் எழுத உதவி புரியலாம்.
தலைமையாசிரியர்: மிகவும் நல்ல யோசனை ஐயா!. இதனால் மாணவர்கள் தாங்கள் படித்ததை மறக்காமலிருக்க முடியும். வழக்கமாக எதிர்க்கொள்ளும் ஆண்டுத்தேர்வையும் எழுதினார்ப் போலவும் இருக்கும்.
ராகவன்: ஐயா! இது எனது தனிப்பட்ட கருத்து. மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று தாங்கள் கருதினால், அரசாங்க ஆதரவுடன் இந்த மாதிரித் தேர்வை நடைமுறை படுத்தினால் நன்றாக இருக்கும் பள்ளித் தலைமையாசிரியர்: நீங்கள் நினைப்பது முற்றிலும் சரி.
ராகவன்: ஆண்டுத் தேர்வு என்பது, மாணவர்களின் புரிதலுக்கு ஒரு சிறந்த வடிகால். புரிதல் சரியாக இருந்தாலும், அவை, மாணவர்களின் ஆழ்மனதில் பதிய வேண்டுமென்றால், அவற்றை ஒரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் நல்லது. நான்கு முறை காதால் கேட்டாலும், பலமுறை படித்துப் பார்த்தாலும் மனதில் பதியாத பல முக்கியமான பதிவுகள், ஒரு முறை எழுதிப் பார்த்தால், அவை மாணவர்களின் ஆழ் மனதில் எளிதாக பதிந்துவிடும். அதற்காகத்தான், காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, இறுதியாண்டுத் தேர்வு என்று மாணவர்களுக்கு அடிக்கடி பல தேர்வுகளை நடத்தி, அவர்களது நினைவுத்திறனை நாம் அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறோம்
காட்சி 4
இடம்: தலைமையாசிரியர் அறை.
மாந்தர்கள்: தலைமையாசிரியர், ராகவன் மற்றும் ராகவனின் பிள்ளைகள் கிரி ஹரிணி.
தலைமையாசிரியர்: கிரி, ஹரிணி, இந்த மாதிரித் தேர்வு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? இதைப்பற்றி நீங்கள் என்ன கூற நினைக்கிறீர்கள்? இவை உங்களுக்கு உண்மையாகவே உபயோகமாக இருக்குமென்று நம்புகிறீர்களா?
ஹரிணி: இந்த மாதிரித் தேர்வை நாங்கள் உண்மையாகவே வரவேற்கிறோம் ஐயா.
கிரி: இதனால், நாங்கள் கணினி மூலம் படித்தவற்றை மறக்காமல் இருக்க முடிகிறது.
ஹரிணி: கடந்த ஒரு வருடமாக நாங்கள் எந்த ஒரு தேர்வையும் எழுத முடியவில்லை என்ற வருத்தம் எங்களிடம் இருக்கின்றது. இப்படியே காலங்கள் கடந்தால், வேகமாக எழுதுவது என்பதே மாணவர்களுக்கு மறந்துவிடும்.
கிரி: ஆமாம் என் சகோதரி சொல்லுவது மிகவும் சரி! நாங்கள் வேகமாக எழுதுவதை மறந்து விட்டால், வரும் காலங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்படி எங்களால் முக்கியமானத் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்?
கிரி மற்றும் ஹரிணி: (ஒன்றாக) நாங்கள் இந்த மாதிரித் தேர்வை உண்மையாகவே வரவேற்கிறோம் சார்!.
தலைமையாசிரியர்: நீங்கள் இருவரும் மனமுவந்து இந்த மாதிரித் தேர்வை எழுத முன் வந்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி குழந்தைகளா.
காட்சி 5
(தலைமையாசிரியர் தங்களது பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் மாதிரித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கிறார். பெற்றோர்களே வீட்டில் ஆசிரியர்களாக இருந்து தங்கள் பிள்ளைகள், இந்த மாதிரித் தேர்வை சரியான முறையில் எழுத உதவி புரிய வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனுப்புகிறார். பள்ளியில் தயார் செய்யப்பட்ட கேள்வித்தாள்களை மின்னஞ்சல் மூலமாக தேவைப்படுவோர்களுக்குத் தனியாகவும், தட்டச்சு செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் தேவைப்படுவோர்களுக்குத் தனியாகவும் அனுப்புகிறார். மேலும் இந்தத் தேர்வுக்கான விடைத்தாள்களை மாணவர்களே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். மதிப்பெண் வழங்காமல் மாணவர்கள் எழுதும் சிறப்பு தேர்வு இது என்று மாணவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறார். அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த மாதிரித் தேர்வை தங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வந்த ராகவனை மிகவும் பாராட்ட ஆரம்பித்தனர்.
இந்த யோசனையின் மூலமாக தங்களுடைய தந்தைக்குக் கிடைத்த பாராட்டுகளை நினைத்து கிரியும் ஹரிணியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.)
திரை.