கருவூலம்: கிட் ஆஃப் தி இயர்!
அமெரிக்காவின் கோலோராடோ மாநிலத்தில் "டக்ளஸ் கெளன்டி' யில் உள்ள ஒரு வீட்டில் தன் தாய் பாரதி, மற்றும் தந்தை ராம்ராவுடன் அந்தப் பத்து வயதுச் சிறுமி, தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அமெரிக்காவின் கோலோராடோ மாநிலத்தில் "டக்ளஸ் கெளன்டி' யில் உள்ள ஒரு வீட்டில் தன் தாய் பாரதி, மற்றும் தந்தை ராம்ராவுடன் அந்தப் பத்து வயதுச் சிறுமி, தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது "ஃப்ளின்ட்' நகரத்தில் உள்ள குடிநீரில் ஈயக் கலவைகள் உள்ளதாகவும், அதன் காரணமாக பலர் நோயுற்றிருப்பதாகவும் செய்தி வாசித்தனர். அவளுக்கு அந்தச் செய்தி மிகுந்த துயரத்தைத் தந்தது.
தண்ணீரில் கலந்திருக்கும் ஈயக் கலவைகளை கண்டறியும் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் எண்ணம் அந்தச் சிறுமிக்கு உண்டானது.
அந்தச் சிறுமி அந்த ஆராய்ச்சியில் வெற்றியும் கண்டார்! கார்பன் மோனோட்யூப் சென்ஸார்ஸ் அடங்கிய அந்தக் கருவிக்கு "டெதிஸ்' என்று பெயரிட்டாள். அந்தக் கருவியை கை பேசியில் ப்ளூடூத்துடன் இணைத்தாள். அதன் மூலம் குடிநீர்க் குழாயில் வரும் நீரை படம் பிடிக்க அந்த திறன்பேசி தண்ணீரில் கலந்துள்ள ஈய அளவைக் காண்பித்தது! இந்தச் செய்தி எங்கும் பரவ, தனக்குத் தெரிந்த பல வீடுகளில் அதை முயற்சித்தாள்.
தன் பரிசோதனை வெற்றி என்பதை உணர்ந்தாள்!
அந்தக் கண்டுபிடிப்புக்காக டைம் பத்திரிகையின் "கிட் ஆஃப் தி இயர்' (8 லிருந்த 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கு கொள்ளும் போட்டி இது) விருது அச்சிறுமிக்குக் கிடைத்தது! சுமார் 5000 குழந்தைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
அந்தச் சிறுமியின் பெயர் "கீதாஞ்சலி ராவ்' என்பதாகும். "ஸ்டெம்' (நபஉங) என்னும் புகழ் பெற்ற பள்ளியின் மாணவி அவர்.
அமெரிக்காவில் "3எம்' என்று ஒரு நிறுவனம் உள்ளது. அந்நிறுவனம், அமெரிக்காவின் மருத்துவம், சுகாதாரம், தொழிலாளர் நலம் முதலிய பல்வேறு துறைகளுக்குத் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. சுமார் 60,00 தயாரிப்புகளைச் செய்து விநியோகமும் செய்கிறது. அந்நிறுவனம் கீதாஞ்சலி ராவையும் ஒரு விஞ்ஞானியாக அங்கீகரித்து 25000 டாலர்களைப் பரிசாகவும் அளித்தது! மேலும் அவருக்கு "30 அண்டர் 30' என்ற விருதையும் அளித்து கெளரவித்தது! சிறுமி கீதாஞ்சலி பல கை தேர்ந்த விஞ்ஞானிகளுடன் ஆராய்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பையும் தந்தது!
கீதாஞ்சலி ராவுக்கு இயற்கையாகவே சமூக அக்கறை இருந்திருக்கிறது. ஒருமுறை, "ஒபியாய்ட்' என்னும் போதைப் பழக்கத்திற்கு உள்ளானோரின் பாதிப்பு பற்றி அறிந்தபோது அவளது மனம் பதைத்தது!
இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் அந்தச் சிறுமியிடம் தோன்றியது. பிறகு அதற்கான செயலில் தீவிரமாக ஈடுபட்டார். வெகுநாள்கள் செய்த ஆராய்ச்சியின் பயனாக உடலில் கலந்திருக்கும் போதைப் பொருளின் அளவைக் கண்டறியும் செயலி ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்தச் செயலிக்கு, "எபியோன்' (உடஐஞசஉ) என்று பெயர். இதன் மூலம் போதைப் பழக்கத்திற்கு உள்ளானோர் தங்கள் உடலில், ரத்தத்தில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்! பாதிப்பு தீவிரமாக இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
""போதைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டோரும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இதனால் தகுந்த விழிப்புணர்வைப் பெறுவர். என்றாலும் போதைக் பழக்கத்திற்கு ஆளாகமல் இருப்பதே நல்லது!....'' என்று கூறுகிறார்.
இந்தக் கண்டுபிடிப்பிற்காக டிசிஸ் நிறுவனம் இவருக்கு "ஹெல்த் பில்லர் ப்ரைஸ்' என்னும் பரிசையும் விருதையும் அளித்து கெளரவித்திருக்கிறது!
சமூக அக்கறையுள்ள இந்தச் சிறுமியை உலகமே பாராட்டுகிறது!
மேலும் "சைபர் புல்லியிங்' என்ற தீங்கு விளைவிக்கும் செயலை சிலர் புரிந்து வருவதைக் கண்டார் கீதாஞ்சலி! இது என்னவென்றால், சமூக வலைதளங்களில் சிலரை பயமுறுத்தும் நோக்கத்தோடு சில வார்த்தைகளையும், வாக்கியங்களையும் பதிவிடுகின்றனர். இதனைக் காண்போர் மன அளவில் பாதிக்கப்பட்டு அச்ச உணர்வை அடைகின்றனர்.
"ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்' என்ற முறையைப் பயன்படுத்தி செல்போனில் தகாத வார்த்தைகள் உள்ள பதிவுகளை எச்சரிக்கும், "கைண்ட்லி' என்ற செயலியையும் கண்டுபிடித்தார். இந்தச் செயலி, தகாத வார்த்தைகள், மற்றும் வாக்கியங்களை அடையாளம் கண்டு எச்சரிக்கும்! எனவே செய்தியைப் பெறுவோர், அந்தச் செய்தியைத் தவிர்க்கவோ, அது குறித்து புகார் அளிக்கவோ செய்யலாம்!
""யாரையும் தண்டிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.... நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்...'' என்று புன்சிரிப்புடன் கூறுகிறார் கீதாஞ்சலி ராவ்!
அமெரிக்க ஜனாதிபதியின் "என்விரோன்மெண்ட் யூத் அவார்டு' இவருக்கு வழங்கப்பட்டது!
உலகளாவிய "டெடக்ஸ்' (பஉஈல) அமைப்பில் இருமுறை சிறந்த சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்.
கீதாஞ்சலிக்கு பியானோ வாசிப்பதும், பாடல்களைப் பாடுவதும், நடனமாடுவதும் பிடித்த பொழுது போக்காம்! கேக் செய்வதிலும் விருப்பம் உள்ளவர்!
விஞ்ஞானத்திலும், கலைகளிலும் திறமையுள்ள இந்தச் சிறுமி, மனதநேயத்திலும், சுற்றுச் சூழலிலும் அக்கறையோடு இருக்கிறார்!
கீதாஞ்சலி ராவை வாழ்த்துவோம்!