முகப்பு
சிறுவர்மணி

இது எப்படி இருக்கு?

ஒரு பெரும் துணி வியாபாரி.  சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

Updated On : 20 மார்ச், 2021 at 6:00 AM
பகிர்:

ஒரு பெரும் துணி வியாபாரி.  சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே வகுப்பில் அந்த வியாபாரியின் எதிர் இருக்கையில் ஒரு திருடனும் பயணம் செய்து கொண்டிருந்தான்...

இரவு படுப்பதற்கு முன்பு வியாபாரி தன்னிடமுள்ள பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த திருடன் அந்தப் பணத்தை எப்படியாவது கொள்ளை அடித்துவிட வேண்டும் எனத் திட்டம் போட்டான். 

முதல் நாள் இரவு வியாபாரி தூங்கிய பிறகு திருடன் மெதுவாக வியாபாரியின் பெட்டி, படுக்கை எல்லாவற்றையும் சோதனை போட ஆரம்பித்தான். ஆனால், எவ்வளவு தேடியும் அவன் கையில் பணம் சிக்கவில்லை. மறுநாள் காலை, திருடன் முகம் கழுவிவிட்டு வந்தபோது அந்த வியாபாரி தன் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார். அதைக் கண்ட  திருடன் வியப்பில் விழி பிதுங்கிப் போனான். இருப்பினும் வண்டி கொல்கத்தா செல்வதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. இன்றிரவு எப்படியும் இவரிடம் பணத்தை எடுத்துவிடலாம் என்று முடிவு செய்தான். இரவும் வந்தது. வியாபாரி உறங்குவதை உறுதி செய்துகொண்ட பிறகு, திருடன் மீண்டும் தேட ஆரம்பித்தான்.  அன்றும் அவனுக்குப் பணம் கிடைக்காது ஏமாந்து போனான்.

Advertisement

மறுநாள் காலையில் திருடன் கழிவறை சென்று வந்தபோது, அந்த வியாபாரி தன் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தார். அதைக் கண்டதும் திருடனுக்குக் கோபம் வந்தது. அதே கோபத்தோடு அந்த வியாபாரியைப் பார்த்து, ""நீங்கள் இந்தப் பணத்தை எங்கே வைத்திருந்தீர்கள்?.... நான் எவ்வளவு தேடியும் அகப்படவில்லையே!'' என்று கேட்டான்.

வியாபாரி அமைதியாக, ""என் பணத்தை நீ கொள்ளை அடிக்க முயல்வாய் என்று தெரிந்துதான் பணத்தை உன்  தலையணையின் அடியில் வைத்து விட்டேன். உன் பொருளை நீ சோதிக்க மாட்டாய் என்று எனக்கு நன்றாகத் தெரியும்!'' என்று பதில் சொன்னார். 

திருடன் வெட்கப்பட்டுத் தலை குனிந்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.