எழுத்தறிவிக்கும் இறை!
அன்னைத் தமிழை, அறிவியலை,ஆங்கி லத்தை, கணிதத்தை,மன்னர் ஆண்ட வரலாற்றை,
அன்னைத் தமிழை, அறிவியலை,
ஆங்கி லத்தை, கணிதத்தை,
மன்னர் ஆண்ட வரலாற்றை,
மற்றும் புவியின் இயல்புகளை
இன்னும் பலவாம் பாடத்தை
எளிமையாகக் கற்பித்து
நின்னை உயர்த்தும் ஆசானை
நித்தம் போற்றல் உன் கடமை!
எண்ணும் எழுத்தும் ஈத்துவக்கும்
இறைவன் இங்கு அவரன்றோ?
பண்பும் அன்பும் போதித்துப்
பலரை வாழ்வில் உயர்த்திடுவார்!
ஒழுக்கம் நிறைந்த சமுதாயம்
உலகில் என்றும் நிலைத்திருக்க
அழுத்தமான அறிவுரையால்
ஆசான் வழியைக் காட்டிடுவார்!
கண்ணின் மணிபோல் மாணவரைக்
காக்கும் கருணைக் கடவுளவர்!
மண்ணில் ஆசான் மாண்புதனை
மனதில் வைத்துப் போற்றிடுவீர்!