சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: மருத்துவ சுரங்கம்  - லிச்சி மரம்!

நான் தான் லிச்சி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் லிச்சி சினென்சிஸ் என்பதாகும். நான் சபின்னயசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.

பா.இராதாகிருஷ்ணன்


குழந்தைகளே நலமா?

நான் தான் லிச்சி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் லிச்சி சினென்சிஸ் என்பதாகும். நான் சபின்னயசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் சீனாவை தாயகமாகக் கொண்ட வெப்பமண்டல பசுமையான நிழல் தரும் மரமாவேன். தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் நான் அதிகமாகக் காணப்படுகிறேன். நம் நாட்டில், பீகார் மாநிலத்தில் அதிக அளவில் நான் காணப்படறேன். என் பழங்கள் வெண்ணிற சதைப் பகுதியுடன், உங்கள் கண்ணைக் கவரும் ரோஸ் நிறத்தில், ரோஜா மலரின் நறுமணத்தைத் தரும். உங்கள் உடல் நலனைக் காக்கும் அனைத்தும் சக்தியும் எங்கிட்ட இருக்கு, கேளுங்க.

என் பழம் மிகவும் சத்து மிக்கது என்பதால் சீன மக்கள் விரும்பி சாப்பிட்டு பலமுள்ளவங்களாக இருக்காங்க. ஏன்னா, என் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஏராளமான வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறையவே இருக்கு. நீங்க உடல் பருமான இருந்தா கவலைப்படாதீங்க, என் பழத்தை சாப்பிடீங்கன்னா உடல் எடை குறையும். உங்கள் இதயத்தையும், ஈரலையும் நான் காப்பேன். என் பழத்திற்கு மாரடைப்பை தடுக்கும் சக்தியும் இருக்கு. என் பழத்தில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோயையும் என் பழம் தடுக்குமுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. என் பழத்தை ஜுஸ் செய்தும் அருந்தலாம். லிச்சி தோட்டங்களில் தேனீ வளர்ப்பும் செய்யலாம்.

என் பழத்தில் அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், உங்களை ஸ்மார்ட்டாக வைத்துக் கொள்ள நான் பெரிதும் உதவுவேன். எப்படின்னு கேட்கறீங்களா, உங்கள் உடம்பில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும் திறன் என் பழத்திடம் இருக்கு, உங்களுக்கு செரிமான பிரச்னையும், மலச்சிக்கலும் ஏற்படவே ஏற்படாது, அதுமட்டுமா எங்கிட்ட வைட்டமின் சி நிறைய இருக்கு. இது உங்க உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகமாக்கும். அதனால, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்தசோகை உங்களை அண்டவே அண்டாது.

என் விதைகள் குடல் சார்ந்த நோய்களுக்கும், நரம்பு சம்பந்தமான நோய்களுக்கும் அரு மருந்து. என் பூக்களையும், வேர்ப்பட்டையும் அரைத்து கஷாயமாக்கிக் குடித்தால் தொண்டையிலும் , வயிற்றிலும் புண் வரவே வராது. புகைப் பிடிக்கும் பழக்கம், பாக்கு உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு தொண்டைப் புண் ஏற்படும். இவர்கள் என் பழத்தை உண்டால் தொண்டைப் புண் வயிற்றுப் புண் விரைவில் ஆறி விடும். ஆனா, அந்தக் கெட்டப்பழக்கத்தை உடனே விட்டுவிட சொல்லுங்க. அது முக்கியம். உங்களுக்கு பூச்சிக் கடித்தால் வருந்தாதீங்க, அந்த இடத்தில் என் இலையின் சாறை பிழிந்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

குழந்தைகளே, நான் இப்படி சொல்றேனேன்னு பயப்படாதீங்க. சரியாக பழுக்காமல் இருக்கும் என் காயை ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா, அதில் மெத்தலின் சைக்ளோபுரோபைல் கிளைசின் என்ற நச்சுப் பொருள் இருக்கு. இது உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, உங்க உடலில் இயங்கும் கல்லீரல், சர்க்கரை உற்பத்தி செய்வதை தடை செய்யும். இரத்தத்தில் போதிய அளவு சர்க்கரை இல்லாமல் போனால் மயக்கம் ஏற்படும், இரவு உணவைச் சாப்பிடாமல் என் பழத்தை சாப்பிடக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறாங்க. ஆனால், ஆரோக்கியமா இருக்கிற குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இந்த நச்சுப் பொருள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT