முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கல்விக் கண் திறக்கும் உள்ளாட்சிப் பெண்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி அரசுப் பள்ளியில் படிக்கிறார் ஆர்.பூங்கொடி. 6-ஆம் வகுப்புக்குப் பிறகு இவர் பள்ளி செல்லவில்லை.   ""அம்மா, அப்பா கூலி வேலைக்குப் போறாங்க. குடும்பத்துல ரொம்ப

Updated On : 20 செப்டம்பர் 2012, 1:18 pm IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி அரசுப் பள்ளியில் படிக்கிறார் ஆர்.பூங்கொடி. 6-ஆம் வகுப்புக்குப் பிறகு இவர் பள்ளி செல்லவில்லை.

  ""அம்மா, அப்பா கூலி வேலைக்குப் போறாங்க. குடும்பத்துல ரொம்ப கஷ்டங்க. ஃபீஸ் கட்ட, புத்தகம் வாங்கப் பணமில்ல; ஸ்கூலுக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அப்பத்தான் கமலாம்மா வந்து எங்க அம்மாவப் பார்த்துப் பேசினாங்க. என்னை மறுபடியும் ஸ்கூலுக்கு அனுப்பச் சொன்னாங்க. ஃபீஸ் கட்டி, புத்தகம் வாங்கித் தந்தாங்க. இப்ப நான் எட்டாவது படிக்கிறேன்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.

  6-ஆம் வகுப்பு படிக்கும் டி.கணேஷின் கதை வேறு.

  ""படிக்க வைக்க வசதியில்லை. வீட்லயிருந்து தம்பி, தங்கைகளைப் பார்த்துக்கோனுட்டாங்க. 5-ஆம் வகுப்பு வரைதான் படிச்சேன். கமலாம்மாதான் பணம் கட்டி என்னை மறுபடியும் ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க. நல்லாப் படிச்சு டாக்டர், போலீஸ்னு பெரிய வேலைக்குப் போவேன்...'' என்கிறான் கண்களில் நம்பிக்கை மின்ன.

  ஆயக்குடி அரசுப் பள்ளியில் படிக்கும் விக்னேஷ்குமார், ரவிக்குமார், எஸ்.மகேஸ்வரி, பிரவீன் போன்றோரும் வறுமையால் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள்தான். இன்று இவர்கள் மீண்டும் பள்ளி செல்ல மூல காரணமாய் இருக்கிறார் பழனி ஒன்றியத்துக்குட்பட்ட ஆயக்குடி பேரூராட்சியின் 4-வது வார்டு உறுப்பினர் கே.கமலம்.

  ஏழைக் குழந்தைகள் கல்வியறிவு பெற கமலம் எடுத்து வரும் தளராத முயற்சி, அவர்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஒளியேற்றியிருக்கிறது.

  இத்தனைக்கும் கமலம் ஒன்றும் பெரிய படிப்பு படித்தவரல்ல. ஆனால், படிப்பறிவால் கிடைக்கும் தைரியமும், பொருளாதார பலமும் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்.

  ""இந்த ஊர்ல விவசாயக் கூலிங்கதான் அதிகம். மழை பெய்தாத்தான் வேலை. இல்லைனா வேற வேலைக்குத்தான் போகணும். வறுமை காரணமாகக் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாம கஷ்டப்படறாங்க. ஆயக்குடி, டவுன் பஞ்சாயத்துங்கறதால எங்களுக்கு எந்தச் சலுகையும் கிடையாது. அரசுப் பள்ளியில படிச்சாலும் ஃபீஸ் கட்டணும். அதனாலயே படிப்ப பாதியிலயே நிறுத்திடறாங்க.

  இந்தக் காலத்துல குழந்தைக படிக்காம இருக்கலாமா? என்ன பண்றதுன்னு யோசிச்சேன். நேரா அவங்களோட பெற்றோரைப் பார்த்துப் பேசினேன். "படிப்புக்கு ஆகற செலவை நான் பார்த்துக்கறேன்; குழந்தைகளோட வாழ்க்கையை வீணாக்கிடாதீங்க. தொடர்ந்து அவங்கள ஸ்கூலுக்கு அனுப்புங்க'ன்னு எடுத்துச் சொல்லி, மறுபடியும் இந்தக் குழந்தைங்க படிக்க ஏற்பாடு செய்தேன்...'' என்னும் கமலம், அதற்காக வீடு வீடாகச் சென்று உண்டியல் ஏந்தி பணம் திரட்டவும் தயங்குவதில்லை.

  அரசின் நலத் திட்ட உதவிகள் மக்களுக்குக் கிடைக்க, அதிகாரிகள் வரை சென்று போராடவும் கமலம் தயங்குவதில்லை.

 ""எதுவும் அவ்வளவு சுலபத்துல எங்களுக்குக் கிடைக்கறதில்லை. போராடிப் போராடித்தான் வாங்க வேண்டியிருக்கு. நல்லது பண்ணுவோம்னு நம்பித்தானே ஜனங்க நம்மளத் தேர்ந்தெடுத்திருக்காங்க. அவங்களுக்கு உதவாட்டி எப்படி...?'' என்கிறார்.

  கமலத்தைப் போலவே கிராம மக்களின் கல்விக்காகப் பாடுபட்டு வருகிறார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளிமலைப்பட்டினம் ஊராட்சித் தலைவி சுகன்யா.

  இந்த ஊராட்சி, விராலியூர், வெள்ளிமலைப்பட்டினம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு விவசாயக் கூலிகள் அதிகம்.

  ""குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைவிட வேலைக்கு அனுப்பினா பணம் கிடைக்கும்னு நினைக்கிற மக்கள்கிட்ட, கல்வியின் அவசியத்தை விளக்கறது அவ்வளவு சுலபமில்லை. படிப்படியா அவங்ககிட்ட பேசி மாற்றத்தை ஏற்படுத்தினேன். இப்போது எங்கள் கிராமத்தில் படிக்காத குழந்தைகளே இல்லை. அடிப்படைக் கல்வியை எல்லோருக்கும் கட்டாயமாக்கியிருக்கிறோம்'' என்கிறார் சுகன்யா.

  மத்திய அரசின் வளர் கல்வித் திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக இரண்டு தலித் பெண்களை நியமித்திருக்கிறார். இதனால் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத தலித் பெண்கள்கூட, கையெழுத்துப் போடும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். எத்தனை கஷ்டம் வந்தாலும்சரி, எங்க குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புவோமுங்க. அவங்களாவது நல்லாப் படிச்சு உசந்த நிலைக்குப் போகணும்...'' என்கிறார் விராலியூரைச் சேர்ந்த பேபி.

  கிராமங்களைப் பொறுத்தவரை, படிப்பை பாதியில் நிறுத்திவிடும் குழந்தைகளே அதிகம். அப்படிப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி, படிப்பைத் தொடர உதவுகிறார் பழனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலசமுத்திரம் பேரூராட்சியின் 12-வது வார்டு உறுப்பினர் தனபாக்கியம்.

  இங்குள்ளோரில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகள். கயிறு திரிக்கும் தொழில், செங்கல் சூளையில் வேலைக்குச் செல்கின்றனர். குழந்தைகளையும் பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

  ""வயசுக்கு வந்த பெண்ணை அதிகம் படிக்க வைச்சா யார் கூடயாவது ஓடிப் போயிடுவா..'ங்கற எண்ணத்துல, பெண் குழந்தைகளோட படிப்பை பாதியிலயே நிறுத்திடறாங்க. அவங்களோட எண்ணத்தை மாற்றி, பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கிறோம். இதனால கிடைக்கிற பலன்கள் நிறைய...'' என்கிறார் தனபாக்கியம்.

  இவருடன் மகளிர் சுயஉதவிக் குழு பொறுப்பாளர்களான கல்பனா, ஈஸ்வரி போன்றோரும் கிராமத்துப் பெண்களிடம் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். பாலியல் சந்தேகங்கள், உடல்நலப் பிரச்னைகள், இலவச மருத்துவ முகாம்கள் குறித்தெல்லாம் எடுத்துரைக்கின்றனர்.

  சொந்த ஊரில் படிக்க வசதியில்லாத காரணத்தால், படிப்பைப் பாதியில் நிறுத்தும் குழந்தைகளின் உயர் கல்விக்கு உத்தரவாதமளித்துள்ளார் பெரியம்மாபட்டி ஊராட்சித் தலைவி முருகேஸ்வரி பாண்டியன்.

  சுமார் 8000 பேர் வசிக்கும் இவரது ஊராட்சி, 16 கிராமங்களை உள்ளடக்கியது. இதில் பெருமாள்புரம், சின்னக்காந்திபுரம் கிராமங்களில் ஆரம்பப் பள்ளி மட்டுமே இருந்ததால், நடுநிலைப் பள்ளிக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள நெய்க்காரப்பட்டிக்கோ அல்லது பழனிக்கோதான் சென்று படிக்க வேண்டியிருந்தது. பஸ் வசதியும் கிடையாது. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளி செல்ல முடியாமல் குழந்தைகள் சிரமப்பட்டனர்.

  ""குழந்தைங்க தவறாம பள்ளிக்குப் போகணும்கறதுக்காக, ஆரம்பப் பள்ளியை ரூ.11 லட்சத்துல நடுநிலைப் பள்ளியா மாற்றியிருக்கறோம். எங்க கிராமத்துல குழந்தைத் தொழிலாளர்களோ, படிப்பை பாதியில நிறுத்தினவங்களோ கிடையாது'' என்கிறார் முருகேஸ்வரி. கேட்க பெருமையாக இருக்கிறது.

  இவர் தலைவியாக வந்தபிறகுதான் சின்னகாந்திபுரம் பச்சையாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. பாலப் பிரச்னைக்காக சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார் இவர்.

  ""ஒரு மழை பெய்தாக்கூட இந்தப் பகுதியில போக்குவரத்து ஸ்தம்பிச்சிடும். இந்தப் பாலம் இல்லாததால் படிக்கற குழந்தைகளும், விவசாயிகளும் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. இப்ப எல்லாப் பிரச்னையும் தீர்ந்திடுச்சுங்க...'' என்கிறார் வெற்றிப் புன்னகையுடன்.

  கல்விக் கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடந்து சலித்தபிறகு, படிக்கும் எண்ணத்தையே கைவிடுவோர் பலர். அப்படிப்பட்டவர்களை கை தூக்கி விடுகிறார் அவிநாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவியும், தனியார் பொறியியல் கல்லூரி விரிவுரையாளருமான சாந்தி பாபு.

  ""நல்லாப் படிக்கற பிள்ளைகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கப் பரிந்துரைக்கிறேன். விசைத்தறித் தொழிலாளர்கள் நிறைஞ்ச இந்தப் பகுதி மக்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கணும்; படிப்புக்குப் பணம் ஒரு தடையா இருக்கக்கூடாதுங்கறது என் எண்ணம்...'' என்கிறார்.

  கல்விக்காக உரத்துக் குரல் கொடுக்கும் உள்ளாட்சிப் பெண் தலைவிகளின் எண்ண ஓட்டம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. "பயிற்றி பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்த வேண்டும்' என்ற மகாகவி பாரதியின் லட்சிய வரிகளுடன் அது ஒத்துப் போகிறது.

ஜி.மீனாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.