சென்னையில் பாகிஸ்தான் நாவலாசிரியர்!
அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த இளம் பாகிஸ்தானிய நாவலாசிரியர் அலி சேத்தி, சென்ற வாரம் சென்னை வந்தபோது, நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல புத்தகக் கடையில், தம் முதல் நாவல் "த விஷ் மேக்கர்' என்ற
அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த இளம் பாகிஸ்தானிய நாவலாசிரியர் அலி சேத்தி, சென்ற வாரம் சென்னை வந்தபோது, நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல புத்தகக் கடையில், தம் முதல் நாவல் "த விஷ் மேக்கர்' என்ற நூலை அறிமுகம் செய்து பேசினார். லாகூரைச் சேர்ந்த அலி சேத்தி, பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு நேரெதிர். பேச்சில் அத்தனை சிநேகம். அப்படியொரு நயம்.
தம் நாவலில் இருந்து இரண்டாம் அத்தியாயத்தைப் படித்தார். இந்திய டீவி பார்க்கும் அம்மா, எப்படி ஒவ்வொரு தடவை தடங்கல் ஏற்படும்போதும் சலித்துக் கொண்டு, மேலே ஆன்டெனாவைச் சரியான கோணத்தில் வைக்கச் சொல்கிறார் என்ற வர்ணனை மெலிதான நகைச்சுவையோடு இருந்தது. அண்ணன்- தங்கை இருவருக்குள்ளும் நடக்கும் சின்னச் சண்டையின் கதாநாயகன் யார் தெரியுமா? அமிதாப் பச்சன். "நீண்ட மூஞ்சியும், சகிக்க முடியாத கிராப்புமாக என்ன கண்டுவிட்டாய் அமிதாப்பிடம்? அப்படி ரசிக்கிறாய்!' என்று அண்ணன் சீண்ட, அவன் காதருகே வந்து, "அமிதாப்பின்' குரல்(வாய்ஸ்) என்கிறாள் தங்கை.
""என் தாய்மொழி உருது. ஆனாலும் முன்பு போல ஏன் உங்கள் நாட்டிலிருந்து பத்திரிகைகளும், புத்தகங்களும் இங்கே வருவதில்லை?'' என்றார் அலி சேத்தி.
ஒருபுறம் ப்ரீதம் சக்ரவர்த்தியும், இன்னொருபுறம் மீனா கந்தசாமியுமாக புத்தகத்தை அலசிவிட்டு அவருடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
""நான் பள்ளியில் படிக்கிறபோது, இந்தியா- பாகிஸ்தான் சண்டை ஓய்ந்து சமாதானம் நிலவவேண்டும் என்றால் நாம் எல்லாம் பாகிஸ்தானிப் பையன்களைத் திருமணம் செய்து கொண்டால்தான் நடக்கும் போலிருக்கிறது என்று பேசிக் கொள்வோம்!'' என்று மீனா கந்தசாமி கூறியபோது, மெல்லிய சிரிப்பலை எழுந்தது. (இளம் அலி சேத்தியும் ரசித்துச் சிரித்தார்)
""பிரிவினைக்கு முன்னால் இருந்தது போலவே நாம் மறுபடி ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விஷ் (கோரிக்கை). அது நடக்கும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?'' என்று கேட்டார் கணபதி ராமகிருஷ்ணன்.
""நாம் அதற்குப் பிறகு வெகு தூரம் கடந்து வந்துவிட்டோம். பங்களாதேஷ் வேறு உருவாகிவிட்டது!'' என்றார் அலி சேத்தி, யதார்த்தமாக.
அலி சேத்தியின் அம்மா, அப்பா இருவருமே பத்திரிகையாளர்களாம். அதனால் நல்ல ஆங்கிலக் கல்வி அடிப்படையிலேயே அவருக்குக் கிடைக்கவே, அமெரிக்கா சென்று மேலே படிக்க வாய்ப்புக் கிடைத்தது என்றார். அப்படி அமெரிக்காவிலேயே அதிக வருடங்கள் இருந்ததாலோ என்னவோ, அவருடைய பேச்சில் காழ்ப்புணர்ச்சி ஏதும் வெளிப்படவில்லை. பெங்களூர், தில்லி எல்லாம் போய்விட்டு வந்திருக்கிறார். தில்லியில் குஷ்வந்த் சிங்கைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததைக் குறிப்பிட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் நட்புறவு அரசியல் நிலையில் மோசமாக இருந்தாலும், இப்படிப்பட்ட தனிமனித உறவுகள் அளவிலாவது சிநேக உணர்வுடன் இருப்பது ஆறுதல் தருகிறது. ("புத்தக விற்பனைக்காக வந்தவர் இந்தியர் மனம் நோகும்படி பேசமாட்டார். பாகிஸ்தான் போய் எப்படிப் பேசுவாரோ?' என்றார் பக்கத்திலிருந்த நண்பர்.) ஆனால் "த விஷ் மேக்கர்' நாவலில், இந்தியாவைக் குறை கூறும் பகுதிகள் ஏதும் இல்லாததால், அலி சேத்தி போன்ற இளைய தலைமுறை நாவலாசிரியர்களை வரவேற்க வேண்டும்.
ஆதரவற்ற பெண்களுக்கான அமைப்பு "பான்யன்'. இதன் நிகழ்ச்சி ஒன்றில், அதன் ஆதரவாளரான முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் எம்.ஏ.வெள்ளோடி, தமது 80 ஆண்டுக் கால வாழ்க்கையைச் சுருக்கமாக விவரிக்கும் "அரெüண்ட் த வேர்ல்ட் இன் 80 இயர்ஸ்' என்ற சுயசரிதையை தம் நெருங்கிய நண்பர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அரவிந்த் வெள்ளோடி சிறந்த கலை ரசிகர். கர்நாடக இசையையும் பரதநாட்டியத்தையும் வெகுவாக ரசிப்பவர். அவர் மனைவி கமலா நன்றாக வீணை வாசிப்பார். நல்ல நடன நிகழ்ச்சி எங்கே நடந்தாலும், சமீப காலம் வரை சபாக்களுக்கு வந்து கண்டு ரசித்தார்.
முழுக்க முழுக்கத் தம் சொந்த அனுபவங்களை இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் நடந்த பின்னணியில் எழுதியிருப்பதால் சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தைத் தந்திருக்கிறார் வெள்ளோடி.
ஈழவ சமுதாயத்தில் தோன்றி மறுமலர்ச்சி ஏற்படுத்திய நாராயண குருவின் தாக்கம் முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் கூடச் சிந்திக்க வைத்ததாம். வைக்கம் சத்தியாகிரகத்தின்போது, காந்திஜி பிராமணர் உட்பட பலரையும் சந்தித்து, சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வை நீக்கவே இந்த ஆலயப் பிரவேசம் என்று நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தினாராம். மகாராஜா சித்திரைத் திருநாளின் "கோயில் நுழைவு அறிக்கை' அவர் எவ்வளவு அகன்ற மனம் படைத்திருந்தார் என்று காண்பிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
ஆர்ய வைத்திய சாலை காரணமாகப் புகழ் பெற்ற கோட்டக்கல்லில் பிறந்தவர் வெள்ளோடி. 30-களில், மதம் சமுதாயத்தில் ஒரு முக்கிய இடம் வகித்தது. கோட்டக் கல்லில் அப்போது கிறிஸ்தவர்கள் யாரும் இருக்கவில்லை. முஸ்லீம்கள் சில பகுதிகளில் பெரும்பான்மையாக இருந்தனர். அரசியல் கூட்டங்களின்போது இரு சமுதாயத்தினரும் சந்தித்துக் கொண்டாலும், இந்துக்கள் கோயிலைச் சுற்றி அமைந்த வீடுகளில் வசித்து வந்ததால், இந்தப் பகுதிகளில் முஸ்லீம்கள் வருவது கிடையாது. ஆனால் அப்படியே யாராவது வந்துவிட்டாலும் அதைப் பெரிதுபடுத்துவது கிடையாதாம்.
பாதுகாப்பு அமைச்சராகப் பின்னர் பதவி வகித்த கிருஷ்ண மேனனை முதல் முதலாக லண்டனில் 1945-ல் சந்திக்கிறார் வெள்ளோடி. அவருடைய ஒற்றை அறையில் எப்போதும் இந்திய மாணவர்களின் கூட்டமாக இருக்குமாம்.
ஒரு சமயம் ஐக்கிய நாடுகள் சபையில் கிருஷ்ண மேனன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவருடைய பேச்சில் மேற்கு சிரியா பற்றிக் குறிப்பிட வேண்டியிருந்தது. ஆனால் மேனன் பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருந்தார். வெளியுறவுத் துறை அதிகாரியான வெள்ளோடி ஒரு துண்டுச் சீட்டை மேனனுக்குக் கொடுக்கிறார் "மேற்கு சிரியா' என்று. மேனனுக்கு ஒரே கோபம். ஆனாலும் அவர் பாட்டுக்குச் சொற்பொழிவைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார். மறுபடி குறுக்கிடுகிறார் வெள்ளோடி. மேனனுக்கு கோபம் வந்து, "பேசும்போது குறுக்கிடாதே!' என்று கண்டிக்கிறார். எல்லாம் முடிந்து, பின்னர் மாலையில் சந்திக்கும்போது சமாதானமாகி, "சாரி' சொல்கிறார் மேனன்!
பாகிஸ்தான் முதலில் இந்தியா மீது காஷ்மீரில் படை எடுத்தபோது, இந்தியப் படைகள் எல்லைக்கு மிக அருகே இருந்தன. அப்போது பிரதமர் நேரு மட்டும் மேலே செல்லும்படி படைகளுக்கு உத்தரவிட்டிருந்தால், இன்றைக்கு பாகிஸ்தான் வசம் காஷ்மீரின் ஒரு பகுதி இருந்திருக்காது என்கிறார். பலரும் கூறியது போல, காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.வுக்கு அப்போது கொண்டு சென்றதும் தவறு என்கிறார்.
நேருஜியுடன் இருந்த தொடர்பு, மொரார்ஜி தேசாய் } சரண் சிங் } வாஜ்பாய் ஆகியவர்களின் கண்ணியமான அணுகுமுறைதான், அவர்கள் சகஜமாகப் பழகிய எளிய முறை என்று படு சுவாரசியமாக இருக்கிறது நூல்.