எங்கள் காய்கறித் தோட்டங்களில் ரசாயன உரங்களின் உப்புக்காற்று. எங்களைச் சுற்றி ரசாயனக் காற்று. ரசாயன முத்தம். ரசாயன மனிதன்.
கிராமம் காட்டின் அமைதியைய் பிரதிபலிக்கிறது என்றால், மாநகரம் காட்டின் பரபரப்பையும், போராட்டங்களையும் பிரதிபலிக்கிறது.
கிராமங்களைப் போல மாநகரத்திலும் இன்னும் காட்டின் சுவடுகள் எஞ்சியிருக்கின்றன. மாநகரத்தின் கான்கீரிட் வனங்களின் அறைகளில், கண்ணாடித் தொட்டிகளில் இன்னமும் மீன்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. மாநகரத்துக் குழந்தைகள் பால்யத்தைக் கடக்கையில் நாய்குட்டி வளர்ப்பதும், மீன் தொட்டிகளில் மீன்கள் வளர்ப்பதும் வேட்டை சமூகத்தின் காற்று நிழலன்றி வேறு என்ன?
மதுரை மாநகரத்தின் உசிலம்பட்டிக்கு அருகில் இருக்கும் மேட்டுப்பட்டிதான் என் கிராமம். 500 வீடுகள் கொண்ட அந்த ஊரில் அனைத்து குடும்பமும் விவசாயத்தைத்தான் நம்பி இருக்கிறது. காய்கறித் தோட்டங்களில் கத்திரிக்காயும், தக்காளியும், வெண்டைக்காயும் பூத்துக் குலுங்கும் ஓர் அழகான ஊர். மதுரை சுற்று வட்டார பகுதிகள் எங்கள் காய்கறிகளால்தான் பசியாறுகின்றன என்பதில் எங்கள் மார்பு நிமிர்கிறது.
காய்கறி விளைவிப்பதுதான் எங்கள் தலைமுறைகள் கடந்த தொழில். என் தலைமுறைக்கும் அதுதான் தொழில். கிணற்றுத் தண்ணீரை இறைத்து வாய்க்கால்களில் விட்டு மணலை கொத்தி விதை தூவியும், செடி நட்டும் வேலையை ஆரம்பிப்பார்கள்.
நன்றாக விளைந்த காய்களை சந்தைக்கு அனுப்பி விட்டு பூச்சி பிடித்த கத்திரிக்காயையும், நசுங்கிய தக்காளியையும், வதங்கிய வெண்டைக்காயையும் வீட்டுக்கு அள்ளி வந்து மனைவி மக்களுக்குப் பசியாற்றுவார்கள் அந்தப் பாமர மக்கள்.
இன்றும் அதிகாலையில் எழுந்து கடனுக்கு டீ குடித்து விட்டுதான் வயலுக்கே செல்லுகிறார்கள் எங்கள் மேட்டுப்பட்டி காரர்கள்.
தீபாவளிக்கும், பொங்கலுக்கும் மட்டும் எங்கள் வீட்டில் இட்லி சுடப்படும். ஆட்டுக்கல் சத்தம்தான் எங்கள் வீட்டில் இட்லி சுடப்போகிறார்கள் என்பதை பறை அடித்து சொல்லும். எப்போதாவது வராத விருந்தாளிகள் வந்தால் சுடப்படும் இட்லியை தவிர கேப்பை கூழும், பழைய கஞ்சியும்தான் எங்கள் உணவு.
அம்மாச்சி இட்லி சுடும் போது தங்கை தம்பிகளுடன் அடுப்போரத்தில் உட்கார்ந்து இட்லி பானை எப்போது திறக்கப்படும் என்ற ஆவல் இப்போது இல்லாமல் போய் விட்டது.
நான் மூன்றாவது படிக்கும் போது சைக்கிள் விடக் கற்றுக் கொண்டேன். எனக்கு சைக்கிள் விடக் கற்றுக் கொடுத்தவன் ஐந்தாவது படிக்கும் எங்கள் தெருப் பையன். எங்கள் கிராமத்தில் ஒரே ஒரு வாடகை சைக்கிள் கடைதான் இருந்தது. "பெரியார் சைக்கிள் கடை'. ஏழெட்டு பெரிய சைக்கிள், ஒன்றிரண்டு சிறிய சைக்கிள், ஏகப்பட்ட சைக்கிள் பாகங்கள், பஞ்சர் ஒட்ட ஒரு தண்ணீர் தொட்டி. இவையெல்லாம் சேர்ந்த ஒரு சைக்கிள் கடை. எந்த சைக்கிளுக்கும் கேரியர் கிடையாது. ஒவ்வொரு சைக்கிளுக்குப் பின்னாலும் பெரியார் என்று எழுதி ஒன்று, இரண்டு என்று நம்பர் போட்டிருக்கும்.
ஒரு நாள் மதியம் வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு அப்பாவின் சட்டைப் பையிலிருந்து இருபது காசுகளைத் திருடிக் கொண்டு சைக்கிள் பழக ஆரம்பித்தேன்.
ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுத்த சைக்கிளில் நாற்பது நிமிஷத்திற்கு மேலாக அந்த பையனே ஓட்டினான். நான் கேட்கும் போதெல்லாம் ""நான் ஓட்டுவதைக் கவனிச்சுப் பாரு'' என்பான். கடைசி பத்து நிமிடத்தில் என்னை சைக்கிள் மீது அமர வைத்து பிடித்துக் கொண்டான். ""முதல்ல பேலன்ஸ் பண்ணணும்... பயப்படக் கூடாது'' என்றபடி அவன் என் முதுகெலும்பில் கை வைக்க... உடம்பெல்லாம் உதறி ஒரு செங்கல் குவியல் மீது தேய்த்துக் கொண்டே விழுந்தேன்.
கைகளில் சிராய்ப்பு. வலது முட்டியில் அடிபட்டு இரத்தம் கொட்டியது. பார்ப்பதற்கு எளிமையாக இருந்த குட்டி சைக்கிளின் தொழில் நுட்பம் சரிந்து படுத்தபடி என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. நொண்டிக் கொண்டே வீட்டிற்குச் சென்றேன்.
அடுத்த வாரம் என் ஆர்வம் தெரிந்த அப்பாவே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தார். என் இடுப்பைப் பிடித்துக் கொண்டு சைக்கிளின் கூடவே அப்பா ஓடி வர.. சைக்கிள் முன்னேறிக் கொண்டிருந்தது. திடீரென்று பின்னால் திரும்பி பார்க்க... அப்பா இல்லை. நான் மட்டுமே சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
பயமும், பரவசமும் ஒன்று சேர கீழே விழுந்தேன். இப்போது அடிபடவில்லை. சைக்கிளின் மர்மங்கள் பிடிபடத் துவங்கி விட்டன. பிறகு, அப்பாவின் பெரிய சைக்கிளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால் பெடல், அரை பெடல், குரங்கு பெடல் என பல பெடல்களைக் கடந்து சைக்கிள் சரிதம் முழு பெடலை வெற்றி கொண்டது.
முதன் முதலில் நான் சென்னையில் சைக்கிள் ஓட்டிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. சிக்னல் விளக்குகளின் வழிக்காட்டுதலில் மிரண்டு அண்ணா சாலைக்கு வந்து விட்டேன். சாலையைக் கடக்க வேண்டும். இரு பக்கமும் வாகனங்கள் விரைந்து கொண்டு இருக்கின்றன.
அண்ணா சாலையின் நான்கு வழிப் பாதைகளின் விதி அறியாத காலம் அது. கைகள் உதற சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நடைபாதை ஓரமாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சற்றுத் தூரத்தில் தெரிந்த சுரங்கப் பாதையில் சைக்கிளை தூக்கிக் கொண்டு இறங்கத் தொடங்கினேன்.
மூச்சு வாங்கி கொண்டு சாலையின் மறுபக்கம் அடையும் வரையில் சுரங்கப் பாதையில் இருந்த அனைவரும் என்னை ஆச்சரியமும், கிண்டலும் கலந்த பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தனர். சேற்று வயல் வரப்புகளிலும், கிணற்று மேட்டிலும் உருண்டு வந்த என் சைக்கிள் சக்கரங்கள், மாநகரத்து சரளைக் கற்கள் குத்தி பஞ்சர் ஆகிக் கொண்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.