நகர்வலம் : மொழிபெயர்ப்பு விருதுகள்!
ஸ்ரீ கிருஷ்ணகான சபாவில் "சங்கீத சூடாமணி' விருதைப் பெற்றுக்கொண்டார் லால்குடி விஜயலட்சுமி. எதிரே தகப்பனார் லால்குடி ஜெயராமனும், தாயார் ராஜம்மாவும் மகிச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க, ராமகிருஷ்ண மடத்து
ஸ்ரீ கிருஷ்ணகான சபாவில் "சங்கீத சூடாமணி' விருதைப் பெற்றுக்கொண்டார் லால்குடி விஜயலட்சுமி. எதிரே தகப்பனார் லால்குடி ஜெயராமனும், தாயார் ராஜம்மாவும் மகிச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க, ராமகிருஷ்ண மடத்து சன்னியாசி கெüதமானந்தா விருதை வழங்கியபோது விஜியின் அடக்கமும், ஆனந்தமும் அவருடைய ஏற்புரையில் ஒரு சேர வெளிப்பட்டன.
விஜயலட்சுமிக்கு, அப்பாவைப் போலவே நிறைய பக்கவாத்தியம் வாசித்த அனுபவம் நிறைய இருப்பதால் பல பேருடைய பாணிகளை அறிந்து வைத்திருக்கிறார். இயல்பான கற்பனை வளம் அவருக்குக் கை கொடுக்கிறது. அப்புறம் என்ன? அப்ளாஸ்களாக வாங்கிப் போட்டுக் கொண்டு, அடக்கமாக ஒரு கும்பிடு போட்டு விடுகிறார் ரசிகர்களுக்கு.
அப்பாவைப்போலவே விவரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார் விஜயலட்சுமி. பதினைந்து வருட இடைவெளிக்குப் பிறகு தகப்பனார் லால்குடி எழுதி, இசையமைத்த "ஜெயஜெயதேவி' இசை நாட்டிய நாடகத்தை மீண்டும் மேடையேற்றியபோது, ஒரு கட்டுரைக்காக தகவல்கள் தேவையாக இருந்தன. விஜயலட்சுமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர் ஒரு நிகழ்ச்சிக்காக கேரள நகரம் ஒன்றில் இருந்தார். ஆனால் தம் வசம் இருந்த அத்தனை தகவல்களையும் கூறிய பிறகும் அவருக்குத் திருப்தியாகவில்லை போலும்.
ஒவ்வொரு பாடலின் ராகம்-தானம் முதலிய விவரங்களை இரவு ரயில் ஏறுமுன், போன் செய்து தெரிவித்தார். அதுவும் போதாதோ என்று தோன்றியிருக்க வேண்டும். மறுநாள் காலை வீடு போய்ச் சேர்ந்ததும், நாட்டிய நாடகம் தொடர்பாக விட்டுப்போன மேலும் சில விவரங்களையும் கொடுத்தார். கட்டுரை முழுமையாக அமைய வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த அக்கறை உண்மையில் வியக்க வைத்தது. அப்பா மாதிரியே, அவர் வாசித்த நன்றியுரையிலும் எவரையும் விட்டுவிடாமல் விவரமாகத் தயாரித்திருந்தார் விஜயலட்சுமி. அவருடைய வாசிப்பைப் புகழ்ந்து பாடகி அருணா சாய்ராம் பேசியதில் மிகையே இல்லை. அதே மேடையில், பழம்பெரும் இசைக் கலைஞர் தஞ்சாவூர் சங்கரய்யருக்கு "ஆசாத்ய சூடாமணி' விருது வழங்கினார்கள். அவர் திருநெல்வேலியில் இருந்ததால் அவருடைய மருமான் அதைப் பெற்றுக்கொண்டார். எளிமையான தமிழில், உருக்கமான பாடல்கள் பலவற்றை எழுதி மெட்டமைத்துப் பாடிப் பரப்பியவர் சங்கரய்யர். பல இசைக் கலைஞர்கள் இவர் உருவாக்கிய சாகித்தியங்களை இன்றைக்கு மேடையில் பாடி வருகிறார்கள். (அவருடைய கச்சேரிகள் சுவாரிசியமாக இருக்கும். தாம் கொஞ்சமாக ராகம் பாடிவிட்டு, வயலின்காரரை நிறைய வாசிக்கச் சொல்லிக் கோட்டுக் கொள்வார். அங்கங்கே ரசித்துப் பாராட்டுவார்!) பக்கவாதம் அவரைத் தாக்கிய பிறகு, கடைசியாக அவருக்குச் சிகிச்சை அளித்தவர் பாடகரும் மருத்துவருமான டாக்டர் சுந்தர். "கை எப்போ சரியாகும்? எனக்கு வீணை வாசிக்கணும்போல இருக்கு!' என்றாராம். தஞ்சாவூர் சங்கரய்யருக்கு வயது, உடல்நலக் குறைவு எதுவுமே ஒரு தடையில்லை இசை ஒன்றுதான் முக்கியம். இவரைப் போன்ற கலைஞர்கள் அபூர்வமாகவே தோன்றுகிறார்கள். அவர்களின் பெருமையும் ஒரு சிலருக்கே தெரிகிறது. தஞ்சாவூர் சங்கரய்யருக்கு விருது வழங்கி தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டு கிருஷ்ண கான சபா!
சென்ற வாரம் டி.எம்.கிருஷ்ணா -பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணி நடத்தும் "சுவானுபவா' நிகழ்ச்சிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் நேரில் சென்று இசை-நடனத்தில் மாணவ-மாணவியராக ஈடுபட்டிருக்கும் இளைய தலைமுறையினர், இப்படி நூற்றுக்கணக்கில் வந்து, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கவனமாகக் கலந்துகொண்டு, கேள்வி-பதில் பகுதியில் கேள்விகள் கேட்டுத் தெளிந்து, அடுத்த நிகழ்ச்சிக்கு ஆவலாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்தபோதுதான் அவர்களுடைய உண்மையான ஆர்வம் தெரிந்தது!
கேள்வி-பதில் பகுதியில் சரியான விடை சொல்பவருக்குப் பரிசு. (ஆனால் குரு காரைக்குடி மணி மட்டும் தம் கேள்விகளுக்குப் பதில் சொன்னவர்களுக்கு, தாமே பரிசுகள் வழங்கினார்.)
புதுதில்லியிலிருந்து வந்திருந்த ஸ்வப்னசுந்தரியின் விலாசினி நாட்டியம்; பிற்பகல் இடைவேளை ஒரு மணியைத் தாண்டிய பிறகும் யாரும் எழுந்திருப்பதாக இல்லை. (அவரும் விடுவதாக இல்லை) ஒரு மணி நேரம் வர்ணத்துக்கு ஆடிய பிறகு, உட்கார்ந்தபடியே அபினயம் செய்து அசத்தினார்.
மூன்று வெவ்வேறு இடங்களில் "சுவானுபவா' நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இளைஞர் இசைச் சங்கமான "யூத் அசோசியேஷன் ஃபார் கிளாசிகல் மியூசிக்'கின் உறுப்பினர்கள் அத்தனை பேரும் தொண்டர்களாக ஓடியாடிப் பணிகள் செய்ததைப் பார்த்தபோது, குரு-சிஷ்ய தொடர்பு வேறு வடிவத்தில் தொடர்வதுபோல் இருந்தது. (வேட்டி துவைத்துப் போட்டு, கால்களைப் பிடித்துவிடுவது அந்தக் காலப் பணியாக இருக்கலாம். இன்று, கேள்வி கேட்பவர்க்கு ஓடோடிச் சென்று மைக் கொடுப்பதும், மேடையில் மளமளவென்று மாற்ற செய்வதும் சிஷயர்களின் பணி!)
"நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது' வழங்கு விழாவில் கேரள முன்னாள் டிஜிபி கிருஷ்ணமூர்த்தி, விருதுபெற்றவர்களில் ஒருவர்.
இன்னொரு கிருஷ்ணமூர்த்தி கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி. வங்க இலக்கியத்தைத் தமிழில் கொண்டு வந்தவர் இவர். பாவண்ணன், நாகூர் ரூமி இருவரும் தமிழ்ப் பத்திரிகைகள் வாயிலாக நமக்கு அறிமுகமானவர்கள்.
டாக்டர் எம்.பூபதி, கி.இலக்குவன், கோமதி நாராயணன், சுவாதி எச்.பத்மநாபன், டாக்டர் ஜெயலலிதா, ஜெயந்திசங்கர், மதுமிதா என்று தேடித்தேடி கண்டுபிடித்து அறிமுகம் செய்த "திசை எட்டும்' ஆசிரியர் குறிஞ்சிவேலனைப் பாராட்டு வேளையில் விருத்துக்கான நிதியை வழங்கிய நல்லி அவர்கள், மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிப் பேசியபோது அவற்றின் அவசியம் குறித்து அழுத்தமாகத் தம் கருத்தைப் பதிவு செய்ததையும் பாராட்ட வேண்டும்.