""50 வருடத்தில் ஒரு தனி மனிதனாக போராடி சினிமாவில் வெற்றி பெற்றிருக்கிறார் கமல். முதல்வர் கலைஞருக்கு அடுத்தபடியாக திரை உலகில் 50 வருடங்களை கடந்தவராக கமல் இருக்கிறார். 50 வருடம் உயிர் வாழ்வதே சாதனையாகி விட்ட இந்த காலத்தில் ஒரு மனிதன் கலைக்காக 50 வருடம் போராடியிருக்கிறார்.
50 வருடம் சினிமாவில் இருப்பது பெரிய விஷயம். ஐந்து படங்களை முடித்து விட்ட எனக்கு சோர்வு ஏற்படுகிறது. கமலால் எப்படி 50 வருடம் உழைக்க முடிகிறது.
"தேவர் மகன்', "மகாநதி' போன்ற திரைப்படங்கள்தான் நான் சினிமாவுக்கு வருவதற்கு காரணம். ஒரு திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேவர் மகனை சான்றாகச் சொல்லலாம். கலையுலகில் சோர்வு ஏற்படும் கலைஞர்களுக்கு கமல் ஒரு டானிக்காக இருக்கிறார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என திரைத்துறையின் அனைத்து பகுதிகளிலும் புகுந்து வந்தவர் கமல்.
கமலுடன் பேசக் கூடிய வாய்ப்பு எனக்கு அண்மையில் கிடைத்தது. அந்த இரண்டு மணி நேரங்களும் சினிமாவை பற்றியே பேசினார். ""இயக்குநராக இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் எப்படி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறீர்கள்'' என கேட்டேன். அதற்கு ""நம்ம சிவாஜி சிங்கம் போன்றவர். ஆனால் அவருக்கு தயிர் சாதத்தை வைத்து சாப்பிட சொல்லி விட்டோம். அந்த நிலை எனக்கு வந்து விடக் கூடாது. அதனால்தான் எனக்கு வேண்டியதை நானே தேடிக் கொள்கிறேன்'' என்றார்.
கமலை பற்றி பிரமிப்பு இந்தியா முழுவதிலும் இருக்கிறது. சிவாஜிக்கு வைக்கப்பட்ட தயிர்சாதத்தை கமலுக்கும் நாம் வைத்து விடக்கூடாது. அண்மையில் திரையுலகில் கமல் ஐம்பது குறித்த விஜய் டி.வி.யின் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படிச் சொன்னார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.