""நம்பிக்கையோடு காத்திருக்கிறேன், என் நம்பிக்கை வீண் போகாது''- நா தழுதழுக்க இந்த வார்த்தைகளை சொன்னவரின் பெயர் எம்.குல்முகமது சேட். வயது 71.
இவரது நம்பிக்கை என்ன தெரியுமா? சுனாமியின்போது இவரது இரண்டாவது மகனின் குடும்பம் ஆழிப் பேரலையில் மாயமாய் மறைந்தபோது, அதிலிருந்து உயிர் தப்பிய ஒரு குழந்தை இன்னமும் அவரது கைகளை வந்தடையவில்லை. அந்த குழந்தைக்காகவே இவர் தனது குடும்பத்தினரோடு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
இந்த சோகத்தின் பின்னணியை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்...
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சுனாமி என்ற வார்த்தையை முதன்முதலாக தமிழகம் அதிர்ச்சியோடு உணர்ந்த தினம். இந்த தினத்தில் உதகையை சேர்ந்த ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகள் இன்னமும் பேசப்படுபவையாக உள்ளன. உதகையை சேர்ந்த சபியுல்லா என்பவர் தனது மனைவி பர்வீன், மகன்கள் தன்வீர்(8), தல்ஹா(3), பிலால்(1) மற்றும் உறவுக்கார சிறுவன் நஜிபு ஆகியோருடன் 26ம்தேதி காலை சென்னை முட்டுக்காடு அருகே உள்ள சில்வர் பீச்சுக்கு வந்திருந்தார். பிலாலை தூக்கிக்கொண்டு சபியுல்லாவும் அவரது மனைவி பர்வீனும் கடற்கரையில் இருந்தனர்.
மூத்தவன் தன்வீர், உறவுக்கார சிறுவன் நஜிபுடன் சிறிது நேரம் கழித்து வருவதாக தெரிவித்துள்ளான். மற்றொரு குழந்தையான தல்ஹா தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கடற்கரையில் நிறுத்தியிருந்த அவர்களது காரிலேயே அவனை தூங்க வைத்திருந்தனர்.
அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. கடலை சுருட்டி வாரிக்கொண்டு வந்த ஆழிப்பேரலை கடற்கரையில் நின்றிருந்த சபியுல்லா, பர்வீன் மற்றும் பிலால் ஆகியோரை தனக்குள் உள்வாங்கிக்கொண்டது. கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தல்ஹாவுடன் அடித்து செல்லப்பட்டது.
இந்த சம்பவம் கடலூர் எஸ்.பி.பன்னீர் செல்வத்தின் குடியிருப்பு அருகேயே நிகழ்ந்ததால் உடனடியாக காரின் கண்ணாடியை உடைத்து அதில் தூங்கிக் கொண்டிருந்த தல்ஹாவை மீட்டு அருகிலிருந்தவர்களிடம் கொடுத்துள்ளார்.
குழந்தை காப்பாற்றப்பட்ட விபரம் சபியுல்லாவின் தந்தை குல்முகமது சேட்டுக்கும், அவரது மூத்த மகனான உமர் பாரூக்கிற்கும் பின்னர்தான் தெரிய வந்துள்ளது. அதேபோல, தான் காப்பாற்றிய குழந்தை உரிய குடும்பத்தினர் வசம் போய் சேராததும் அதன்பின்னரே கடலூர் எஸ்பியான பன்னீர் செல்வத்துக்கும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைகள் பல நடந்தும் பலனேதும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் நடந்து 5 ஆண்டுகளாகின்றன. ஆனால், அல்லாஹ் தனது தம்பியை எப்படியும் திருப்பி தருவார் என்ற கனவோடு தன்வீர் தனது டைரியின் கண்ணீர் பக்கங்களில் "ஓ காட், பிளீஸ்.. சென்ட் தல்ஹா பேக் டு அஸ்" என எழுதி வைத்திருக்கிறான்.
நம்பிக்கை விதையை நெஞ்சில் ஊன்றி,காத்திருக்கும் குல்முகமது சேட்டின் குடும்பத்திற்கு நம்மால் ஆன உதவி, சுனாமியில் சிக்கி மீட்கப்பட்ட அந்தக் குழந்தை யாரிடமாவது இருந்தால் அதைக் குறித்த தகவலை தருவதுதான். இது தினமணி வாசகர்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோளும்கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.