முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நவாப் ராஜமாணிக்கம் முதல் மேஜர் சுந்தர்ராஜன் வரை....

தமிழ்த் திரைப்படங்கள் வருவதற்கு முன்பும் வந்தபின்பும் நீண்ட காலமாக மக்களின் மனதில் அழுத்தமான இடம்பிடித்திருந்தவை தமிழ்நாடகங்கள். ஆனால் இன்று தமிழ் மேடை நாடகம் ஒரு நலிவுற்ற கலையாக மாறிவி

Updated On : 26 டிசம்பர், 2023 at 6:24 AM
பகிர்:

தமிழ்த் திரைப்படங்கள் வருவதற்கு முன்பும் வந்தபின்பும் நீண்ட காலமாக மக்களின் மனதில் அழுத்தமான இடம்பிடித்திருந்தவை தமிழ்நாடகங்கள். ஆனால் இன்று தமிழ் மேடை நாடகம் ஒரு நலிவுற்ற கலையாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடக வளர்ச்சிக்காக உழைத்த முன்னோடிக் கலைஞர்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை இருக்கப் போகிறது?

 ""அப்படியெல்லாம் அவர்களை மறந்துவிட முடியாது; மறக்கக் கூடாது'' என்கிறார் நடிகர் ராம்கி. 1964 முதல் தமிழ் நாடகங்களில் நடித்துவரும் ராம்கி, இதுவரை 3 ஆயிரம் நாடகங்களில் நடித்திருக்கிறார். 50 தொலைக்காட்சித் தொடர்களிலும், 10 திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். "ஆனந்தம்' தொடரில் நடித்து "ஆனந்தம்' ராம்கியானார். தற்போது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் "சோ'வின் "எங்கே பிராமணன்?' தொடரில் வேம்பு ஐயர் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 10 தமிழ் நாடக முன்னோடிகளைப் பற்றிய ஆவணப் படங்களை அவர் தனது சகோதரர் முத்ரா பாஸ்கருடன் இணைந்து தயாரித்திருக்கிறார். "நவாப் ராஜமாணிக்கம் முதல் நவீனம் வரை' என்ற பெயரில் தயாராகியிருக்கும் அந்த ஆவணப் பட அனுபவங்களை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

 ""நான் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பழம்பெரும் நடிகர்கள் டி.கே.ராமச்சந்திரன், டி.ஆர்.ராமச்சந்திரன், சுருளிராஜன், டணால் தங்கவேலு, சுந்தரிபாய், குமாரி சச்சு, குட்டி பத்மினி, ஸ்ரீபிரியா உட்பட பல கலைஞர்களுடன் சேர்ந்து நடித்துள்ளேன்.

 முதலில் எல்லாம் நாடகத்திற்கு மக்களிடம் நல்ல மதிப்பு இருந்தது. வரவேற்பு இருந்தது. அதற்கேற்ப அந்தக் காலத்து நாடகங்கள் சீரியஸôக இருந்தன. சிந்தனையைத் தூண்டும்விதமாக இருந்தன. சென்டிமென்ட்டும் இருந்தது. நாடகம் பார்த்துவிட்டு வரும் ஒரு ரசிகன் சிந்தித்துக் கொண்டே வருவான். அல்லது கண்ணீர் சிந்திக் கொண்டே வருவான். ஆனால் இப்போது வருகிற நாடகங்களில் நல்ல கதையம்சம் இல்லை. நகைச்சுவை மட்டும் உள்ளது. மாரல் சப்ஜெக்ட் இல்லை. எனவே நாடகங்களுக்கு முதலில் இருந்த மாதிரி நல்ல வரவேற்பு இப்போது இல்லை.

 முதலில் தமிழ்நாடு முழுக்க 120 சபாக்கள் இருந்தன. இப்போது 10 - 15 சபாக்களே உள்ளன. முதலில் பொள்ளாச்சி தமிழ்ச்சங்கத்தினர் பொள்ளாச்சியில் ஒரு நாளுக்கு 2 - 3 நாடகங்கள் போடுவார்கள். ஆனால் இப்போது இல்லை.

 தமிழ் நாடகம் அழிந்துவிடுமோ என்ற இப்படிப்பட்ட சூழலில் முதல்கட்டமாக தமிழ் நாடகத்திற்கு உழைத்த நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ்.சகோதரர்கள், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஆர்.எஸ்.மனோகர், ஒய்.ஜி.பார்த்தசாரதி, டி.எஸ்.சேஷாத்திரி, பூர்ணம் விசுவநாதன், கோமல் ஸ்வாமிநாதன். வி.கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோரைப் பற்றிய ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறேன்.

 பொதுவாக ஆவணப்படங்கள் என்றால் பார்ப்பதற்கு ரொம்ப பொறுமை தேவைப்படும். ஆனால் நாங்கள் தயாரித்திருக்கும் இந்த ஆவணப்படங்கள், சினிமாவைப் போல அடுத்த காட்சி என்ன என்று பார்க்கும்விதமாக ஆவலைத் தூண்டும்விதமாக இருக்கின்றன. அதேசமயம், ஆவணப்படங்களைப் போலத் தகவல்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன.

 ஆவணப்படம் தயாரிக்க என்று வந்தபோது, நாடகத்தின் பழம்பெரும் கலைஞர்களைப் பற்றி எதுவுமே தெரியாதநிலைதான் எனக்கு இருந்தது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல இருந்தது.

 மிகப் பெரிய கலைஞர்களான இவர்கள், நாடகத்தில் நடித்ததோடு தங்கள் பணி முடிந்துவிட்டதாகக் கருதினார்கள். நாடகக் காட்சிகளைப் புகைப்படம் பிடித்துக் கூட வைக்கவில்லை. தங்களைப் பற்றிய குறிப்புகள் எதையும் அதிகமாக விட்டுச் செல்லவில்லை. வி.கோபாலகிருஷ்ணனின் புகைப்படம் கூட கிடைக்கவில்லை.

 எனவே பழைய நாடகக் கலைஞர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நூலகம் நூலகமாக ஏறி இறங்கி புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்து நிறையத் தெரிந்து கொண்டேன்.

 அதற்குப் பின்பு, இந்தக் கலைஞர்களின் சொந்தக்காரர்கள், நண்பர்கள், அவர்களுடன் நடித்தவர்கள் என ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொண்டு அவர்களை நேரில் சந்தித்து தகவல்களைத் திரட்டிக் கொண்டேன். தகவல்கள் திரட்டியபோது அதைப் படப்பதிவும் செய்து கொண்டேன். இப்படித்தான் ஆவணப்படங்களை உருவாக்கும் பணி நடந்தது.

 இந்த ஆவணப் படங்களைப் பார்த்த பூர்ணம் விஸ்வநாதனின் மனைவி, ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவி ஆகியோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். "எங்கள் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் செய்யாததை, அவர்களுக்குச் செய்யத் தோன்றாததை, நீங்கள் செய்துவிட்டீர்கள்' என்று மனமாரப் பாராட்டினார்கள்.

 இந்த ஆவணப் படங்களைத் தயாரிக்கும்போது எங்களுக்குக் கிடைத்த பல தகவல்கள் மிகச் சுவாரஸ்யமானவை. அவற்றை ஆவணப்படங்களில் தந்திருக்கிறோம்.

 மறைந்த இந்த மாபெரும் கலைஞர்களின் குடும்ப வாழ்க்கை எப்படியிருந்தது? நாடக வாழ்க்கை எப்படியிருந்தது? பிறரிடம் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? அவர்கள் கனவு கண்ட லட்சியங்கள் எவை? அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? அவர்களை மக்கள் எப்படிக் கெüரவித்தார்கள்? என்ன பட்டங்களைக் கொடுத்து அவர்களை மக்கள் போற்றினார்கள்? என்பது போன்ற விவரங்களைத் திரட்டித் தந்திருக்கிறோம்.

 இந்த ஆவணப் படங்கள் இந்தியா முழுக்க, உலகம் முழுக்க கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அதன்மூலமாக நமது பழம் பெரும் கலைஞர்களைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ளும். மேலும் இந்த ஆவணப்படங்களைப் பார்த்துவிட்டு வேறு யாராவது இதைப் போல ஆவணப்படங்களை எடுக்க முன் வருவார்கள்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →