நெஞ்சம் இருக்கு துணிவாக!
பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில் காலை, மாலை வேளைகளில் சைக்கிளில் பால் கேனுடன் செல்லும் அந்தப் பெண்ணைப் பார்த்தால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆண்கள் மட்டும் ஈடுபட்டுள்ள பால் விற்பனைத் தொழிலில் இப்பெண
பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில் காலை, மாலை வேளைகளில் சைக்கிளில் பால் கேனுடன் செல்லும் அந்தப் பெண்ணைப் பார்த்தால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆண்கள் மட்டும் ஈடுபட்டுள்ள பால் விற்பனைத் தொழிலில் இப்பெண்ணும் சாதனை படைத்துள்ளது பலருக்கும் தெரியாது.
பொள்ளாச்சி கோட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் கே.ஆறுமுகம். தனியார் மில்லில் வேலை செய்து வந்த ஆறுமுகத்தின் கையில் அடிபட்டதால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வேலையிழந்தார். அதனால் குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு மனைவி வெள்ளையம்மாளின் தலையில் விழுந்தது. 5-ம் வகுப்பு வரையே படித்த வெள்ளையம்மாளின் வீட்டில் மாடு இருந்ததால் பால் வியாபாரம் செய்யத் தீர்மானித்தார். ஒரு மகனும் மகளும் படித்துக் கொண்டிருந்தனர். அதனால் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு வெள்ளையம்மாள் பால் ஊற்றினார். கலப்படம் இல்லாத பால் ஊற்றுவதால் வெள்ளையம்மாளுக்கு பெண் வாடிக்கையாளர்கள் பெருகினர்.
அதனால் சிறிது சிறிதாக வியாபாரம் அதிகரித்தது. ஒவ்வோர் இடத்துக்கும் நடந்தே சென்று பால் ஊற்றி வந்தார் வெள்ளையம்மாள். விற்பனை அளவு தொடர்ந்து அதிகரித்ததால் நடந்து செல்வதில் இருந்து மாறி சைக்கிளில் சென்று வெள்ளையம்மாள் கடந்த 15 ஆண்டுகளாகப் பால் ஊற்றி வருகிறார். இது தொடர்பாக வெள்ளையம்மாள் கூறியது:
கடந்த 30 ஆண்டுகளாகப் பால் ஊற்றி வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக சைக்கிளில் சென்று பால் ஊற்றுகிறேன். இப்போது தினமும் சுமார் 50 லிட்டருக்கும் மேல் விற்பனையாகிறது. துவக்கத்தில் சொந்தமாகப் பசு இருந்தது. இப்போது பிறருடைய மாடுகளில் பால் கறந்து ஊற்றுகிறேன்.
துவக்கத்தில் சிறிது சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது பழகி விட்டது. என்னால் முடிந்த அளவுக்கு இத்தொழிலைச் செய்வேன். இதில் கிடைத்த வருமானத்தில்தான் மகள் திருமணத்தை நடத்தினேன். இப்போது மகனும் இதே வியாபாரத்தில் ஈடுபட்டது மகிழ்ச்சியளிக்கிறது. என்னதான் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் வாடிக்கையாளருக்கு ஏமாற்றம் தரக்கூடாது என்பதற்காகவே பால் ஊற்றி வருகிறேன்'' என்கிறார்.
தினமும் சுமார் 20 கி.மீ. சுற்றளவுக்குச் சென்று பால் ஊற்றும் வெள்ளையம்மாளுக்கு 55 வயதானாலும் உடலில் களைப்பில்லை. மனதிலும்.