ஞாயிறு கொண்டாட்டம்

தமிழ் சினிமாதான் நம்பர் 1

1920-ல் துவங்கி காந்தி சுடப்பட்ட தினத்தோடு முடியும் "காஞ்சிவரம்' சினிமா, என் ஒன்பது வருஷ கனவு. பங்கெடுத்த அத்தனை பட விழாக்களிலும் காஞ்சிவரத்துக்கு கிடைத்த வரவேற்பு, கௌரவம் இதுவரை நான் செய்த படங்களுக்க

ஜி. அசோக்

1920-ல் துவங்கி காந்தி சுடப்பட்ட தினத்தோடு முடியும் "காஞ்சிவரம்' சினிமா, என் ஒன்பது வருஷ கனவு. பங்கெடுத்த அத்தனை பட விழாக்களிலும் காஞ்சிவரத்துக்கு கிடைத்த வரவேற்பு, கௌரவம் இதுவரை நான் செய்த படங்களுக்குக் கிடைக்கவில்லை. இப்போது அதற்கு மணி மகுடமாக தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. கண்ணீர் துளிர்த்து நின்ற தருணங்களை மறக்க முடியாது என தேசிய விருது தந்த மகிழ்ச்சியில் பேசுகிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.

"காஞ்சிவரம்' எப்படி நடந்தது இது?

சினிமாவில் எனக்கான ஓர் அங்கீகாரத்தை பெற வேண்டும் என இயங்கத் தொடங்கியதில் இருந்தே இதன் கரு எனக்குள்ளே உருவாகியிருந்தது. ஆனால், மும்பை பர்சத் பிக்சர்ஸ் கம்பெனியின் மூலம்தான் பலிக்கணும்னு இருந்திருக்கு. காஞ்சிபுரம் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினால் கூடைக் கூடையாய் அவ்வளவு செய்திகள். ஆயிரம் கோயில்கள் அங்கே இருந்திருக்கு. இப்ப அதற்கான         தடயங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. காஞ்சிபுரத்தின் அசல் மொழி எனக்குத் தெரியாது. ஆனால், அதன் ஆன்மா புரியும். கார்ட்டூனிஸ்ட் மதன் அதற்கு பெரிதும் உதவினார். 1920-ல் இருந்த காஞ்சிபுரத்தைக் கண் முன்னால் உலவ விட்டார் சாபுசிரில். உலகம் புரிந்து கொள்ளாத பிரகாஷ்ராஜின் அபூர்வமான மறுபக்கம் பிரமிப்பாகப் பதிவாகியிருந்தது. இதை ஆர்ட் பிலிம் என்று சொல்லி விட முடியாது. அர்த்தமுள்ள சினிமாங்கிற வார்த்தைதான் சரி.

தற்போதைய சினிமா ட்ரெண்டில் "காஞ்சிவரம்' தனிமைப்பட்டு நிற்கிறதா?

வசூலை அள்ளித் தந்து இந்தப் படம் ஆரவாரமாக ஓட வேண்டாம். ஆனால், எல்லோரும் ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டும் என நினைத்திருந்தேன். சினிமா தெரிந்தவர்கள் மட்டுமே இதைப் பார்த்துப் பாராட்டினார்கள். ஹீரோ, வொர்ஷிப், பயம், டென்ஷன் என எதுவும் இல்லாமல் எனக்கான களத்தில் நான் இயங்கினேன். இப்போது இதற்கு கிடைத்திருக்கிற மரியாதை என்னை முன்பைவிட ஆர்வமாக இயங்க வைத்திருக்கிறது. புதிதாக எதையாவது தேடு என்று உள்ளூர டாண் என மணி அடிக்க ஆரம்பிச்சிருக்கிறது. இரண்டு வருஷத்துக்கு ஒரு முறையாவது இதுமாதிரி முயற்சிகளில் இறங்க வேண்டும் என நேர்மையான துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது. நான் சினிமாவின் ரசிகனாகத்தான் இருந்து வருகிறேன். ரஜினியின் படத்தை அந்த அலைவரிசையோடு என்னால் ரசிக்க முடியும். ஜாக்கிசான் படத்தைப் பார்த்தால் அதன் காரண காரியங்களுக்கு என்னை விட்டுத் தர முடியும். காஞ்சிவரத்தை பார்த்து விட்டு ஷ்யாம் பெனகல் "டால்ஸ்டாய் கதைகளைப் படிச்ச அனுபவம் தந்ததுன்னு' அபூர்வமான வரிகளை அனுப்பி இருந்தது பெரிய சந்தோஷம். அடூர் கோபாலகிருஷ்ணன் "நீங்க செய்தது நல்ல சினிமான்னு"  உச்சி முகர்ந்தார். "கலை ஓர் அனுபவம்; அதை நீங்க நல்லா அனுபவச்சிருக்கீங்க' என பிரிட்டிஷ் டைரக்டர் லீண்ட்ஷே சொன்னார். தமிழ் சினிமாவில் அழகான ஒர் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிற களம் இப்போது கிடைத்திருக்கிறது. "காஞ்சிவரம்' படத்தோட வெற்றி அந்த மாதிரி இடத்துக்கு நம்மையும் கொண்டு போகும்.

ஆனாலும், நீங்க இந்தி சினிமாவில் செய்யறது காமெடி படங்கள்தானே?

அந்தப் படங்களை அவ்வளவு சீரியஸôகப் பார்க்காதீர்கள். அசல் வாழ்க்கையில் நம்மை ஆயிரம் பிரச்னைகள் நித்தமும் திணறடிச்சு முழ்கடிக்குது. அந்தப் பிரச்னைகளில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவதுதான் உண்மையான சினிமான்னு நினைக்கிறவன் நான். குழந்தைகள் மாதிரி ஒவ்வொரு மனிதனையும் சிரிக்க வைக்கிறது பெரிதில்லையா? நான் ஒண்ணும் பெரிய டைரக்டர்னு என்னை சொல்லிக்கலையே? என் காஞ்சிவரத்தைதான் பெருமையா சொல்லிக்கிறேன். என் பெருமையை அரசாங்கமும் பெருமைப்படுத்திருக்கு.

மலையாள சினிமா எப்படியிருக்கு?

மலையாளத்தில் இப்ப மோசமான படங்கள்தான் எடுக்கிறார்கள். "காதல்', "வெயில்', "சுப்பிரமணியபுரம்', "பருத்தி வீரன்' மாதிரியான படங்களை அங்கே இருக்கிற புது இயக்குநர்களால் தர முடியவில்லை. கலாசாரங்களைப் பதிவு செய்ய யாரும் தயாராக இல்லை. சில மோசமான தமிழ்ப் படங்களைக் காப்பியடித்து, அதைவிட மோசமாக எடுக்கிறார்கள். இப்போ இந்தியாவிலே தமிழ் சினிமாதான் நம்பர் ஓன் சினிமா. பட்ஜெட்டில் வேண்டு மானல் இந்தி சினிமா மிஞ்சலாம். நான் சந்திக்கிற ஒவ்வொரு படைப்பாளியும் தமிழ் சினிமாவைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள். ஒரு காலத்தில் நல்ல சினிமா எடுத்தோம் என மலையாளக்காரர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். இதை வேதனையோடு நான் சொல்லுவதாக நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி.

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சினிமாக்கள் சரியாக கொண்டு சேர்க்கப்படுகிறதா?

ஆஸ்கர் விருதுக்கு படங்களைத் தேர்வு செய்வதில் பெரிய பேரங்கள் நடக்கின்றன. இதுவரை சத்யஜித் ரேயின் எந்தப் படத்தையும் இவர்கள் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பியதில்லை. ஆனால், அவர்களாகவே ரேயின் சாதனைகளைப் புரிந்து கொண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கொடுத்தார்கள். அடூரின் ஒரு படத்தையும் இவர்கள் அனுப்பியதில்லை. கமர்ஷியல் படங்களை மட்டும்அனுப்பத் துடிக்                கிறார்கள். அந்த மாதிரியான படங்கள் முதல் ரவுண்டிலேயே வெளியேறி விடுகின்றன. இந்த தவறுகளைக் கண்டித்து இன்னும் பலமாக நான்கு குரல்கள் பெருகி எழுந்தால் நல்லது. அந்த குரலும் கேட்கிற  இடத்துக்குக் கேட்க இன்னும் சத்தம் பலமாக வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT