நகர்வலம்: சும்மா சும்மா வருகுமோ சுகம்?
செம்மங்குடி சீனிவாசய்யர் பொன்விழா அறக்கட்டளைக் குழுவினர் வருடம்தோறும் அவர் நினைவைப் போற்றும் வகையில் ஐந்து நாள் இசைக் கச்சேரிகள் வைப்பதோடு, மூத்த இசைக் கலைஞர் ஒருவரைப் பாராட்டி கெüரவிப்பதும் வழக்கம்.
செம்மங்குடி சீனிவாசய்யர் பொன்விழா அறக்கட்டளைக் குழுவினர் வருடம்தோறும் அவர் நினைவைப் போற்றும் வகையில் ஐந்து நாள் இசைக் கச்சேரிகள் வைப்பதோடு, மூத்த இசைக் கலைஞர் ஒருவரைப் பாராட்டி கெüரவிப்பதும் வழக்கம்.
இந்த ஆண்டு நாதசுர வித்துவான் செம்பொனார்கோயில் எஸ்.ஆர்.டி. வைத்தியநாதன் அவர்களை அறக்கட்டளை கெüரவித்துப் பாராட்டியது. "அறக்கட்டளை ஒரு நாதசுர வித்துவானை கெüரவிப்பது இதுவே முதல் தடவை' என்றார் செம்மங்குடியின் முக்கிய சீடர் வி.சுப்பிரமணியம்.
செம்மங்குடி தம் காலத்தில் வாழ்ந்த பெரிய நாதசுர மேதைகளைப் பற்றி அடிக்கடி நினைவுகூர்ந்து பலரிடமும் சொல்லியதுண்டு. மணிக் கணக்காக ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு ஆலாபனை செய்யும் கற்பனை வளம் அவர்களுக்கு இருந்ததைப் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். எங்கே பெரிய நாதசுரக் கச்சேரிகள் நடந்தாலும் அங்கே முன் வரிசையில் உட்கார்ந்து ரசித்துக் கேட்டவர் செம்மங்குடி.
எனவே அவர் நினைவு நாளில் ஒரு நாதசுர மேதைக்கு அறக்கட்டளை கெüரவம் செய்வது மிகப் பொருத்தமானது.
பெரியவர் எஸ்.ஆர்.டி. வைத்தியநாதன் நாதசுரம் மட்டுமல்லாமல் வாய்ப்பாட்டிலும் கெட்டிக்காரர். (அவரிடம் அடிக்கடி அபூர்வ கீர்த்தனைகளைக் கற்று வரும் சஞ்சய் சுப்பிரமணியனும் முன் வரிசையில் அமர்ந்துகொண்டிருந்தார்.) தமக்கு வழங்கப்பட்ட கெüரவத்துக்கு நன்றி தெரிவித்ததோடு, "ஒரு பாட்டுப் பாடலாமா?' என்று குழந்தை மாதிரி கேட்டார் எஸ்.ஆர்.டி.
கனம் கிருஷ்ணய்யரின் "சும்மா சும்மா வருகுமோ சுகம்?'
என்ற அடாணா ராகப் பாடலை அவர் பாடியபோது சுகமாகவே இருந்தது அவர் குரல்.
அறக்கட்டளையைச் சேர்ந்த கார்த்திக் நாராயணன், "இந்த மாதிரி சுகம் எல்லாம் சும்மா சும்மா வராது' என்று அவரைப் பாராட்டியது பொருத்தமாகவே இருந்தது.
எஸ்.ஆர்.டி வைத்தியநாதன் அவர்களைப் பாராட்டிப் பேசும் வாய்ப்பை இசைத்துறை வல்லுனரும், பல இசைக் கலைஞர்கள், நாதசுர மேதைகள், நடனக் கலைஞர்கள் பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதி வரும் பி.எம்.சுந்தரத்திடம் ஒப்படைத்தது மிகச் சரியானதாகத் தோன்றியது. அழகான தமிழில் அவர் நாதசுரக் கலைஞர்கள் பற்றியும், ரக்தி மேளம் பற்றியும் சுருக்கமாகப் பேசினார்.
தினசரி ஓர் இளம் இசைக் கலைஞரைக் கச்சேரி செய்ய அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
ராதா பார்த்தசாரதியின் கச்சேரியும், பிரசன்னா வெங்கட்ராமனின் நிகழ்ச்சியும் குறிப்பிடத்தக்கவை. பிரசன்னா வெங்கட்ராமனுக்கு ஏராளமான இளைய தலைமுறை ரசிகர்கள் "நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்' என்ற ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டால், இந்த இளைஞரின் பெயர் நிச்சயம் அதில் இடம்பெறும்.
மறைந்த இசைமேதை டி.கே.பட்டம்மாளின் முதல் நினைவு நாளை பிரம்மா கான சபா, இரண்டு சொற்பொழிவுகள் + ஓர் இசை நிகழ்ச்சி என்று ஏற்பாடு செய்திருந்தது. சென்னைத் தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் அ.நடராஜன், பட்டம்மாளுக்கு ஒரு முறை தேசிய விருது கிடைத்தபோது, அந்த விருதுக் குழுவில் இருந்ததையும், அதை அறிந்த பட்டம்மாள் அவர் வீடு தேடி வந்து நன்றி தெரிவித்ததையும் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்.
க்ளீவ்லாந்து சுந்தரம், தாம் முதல் முதலாக பட்டம்மாளை அமெரிக்காவுக்குக் கச்சேரிகள் செய்ய அழைத்துப்போனபோது ஏற்பட்ட அனுபவங்களைப் பெருமையோடு கூறினார்.
நித்யஸ்ரீ மகாதேவன், அவர் தாயார் லலிதா சிவகுமார், நித்யஸ்ரீயின் சகோதரி மகள் லாவண்யா சுந்தரராமன் ஆகியோர் வழங்கிய இசை நிகழ்ச்சிக்கு எம்.ஏ.கிருஷ்ணசாமி வயலின், ஜே.வைத்தியநாதன் மிருதங்கம், கார்த்திக் கடம்
வாசித்தார்கள்.
நிகழ்ச்சியில் குறைபாடு என்று சுட்டிக்காட்டுவதாக இருந்தால், பட்டம்மாள் பற்றிய குறும்படம்தான். கொஞ்சம் மெனக்கெட்டு, கவனமாக உருவாக்கியிருக்கக் கூடாதோ?
ஆங்கில எழுத்தாளர் ரீமா மெüட்கில் எழுதிய "பர்ஃபெக்ட் எய்ட்' நாவலை சென்னை புத்தகச் சங்கம் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியில், பார்வதி நாயர் என்ற ஓவியர் பங்குகொண்டு, நாவலின் சில பகுதிகளை வாசித்தார்.
நாவல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் உருவானது. எல்லைகளை மறக்க வேண்டும் என்றார் ரீமா. எல்லைகள் என்று அவர் ஒட்டுமொத்தமாகச் சொன்னது வெறும் பூகோள எல்லைகளை மட்டுமல்ல. கலாசார, மொழி, எல்லைகளையும்தான். அது நிஜ வாழ்க்கையில் எந்த அளவுக்கு சாத்தியம்? அல்லது சாத்தியம் இல்லை?
வழக்கமாகக் கேட்கப்படும் கேள்வியான, "எத்தனை வருடங்கள் பிடித்தன நாவலை எழுத?' என்ற கேள்வியை எழுப்பினார் ஒருவர்.
"என் பதில் பல எழுத்தாளர்களை மனம் தளரச் செய்துவிடும் என்றாலும், "பத்து வருடங்கள்' என்று உண்மையைச் சொன்னார் ரீமா.
இசை - நடனக் கலை அமைப்பான லலிதா கலா வேதிகா , இந்த ஆண்டு, அதன் நிறுவனர் நினைவாக, இசைக் கலைஞர் திருச்சூர் வி.ராமச்சந்திரனுக்கும், நடனக் கலைஞர் மாளவிகா சருக்கைக்கும் இம்மாதம் 14, 15 தேதிகளில் தங்கப் பதக்கம் வழங்கிக் கெüரவிக்கிறது. ஜலதரங்கக் கலைஞர் ஆனையாம்பட்டி கணேசனுக்கும், நடன ஆசிரியர் பாகவதலு சீதாராம சர்மாவுக்கும் பொற்கிழிகளும் வழங்குகிறார்கள்.
ஆர்க்காடு நவாப் முகமது அப்துல் அலி 14 ஆம் தேதியும் நீதியரசர் பி.ஜ்யோகிமணி 15 ஆம் தேதியும் தலைமை வகிக்கிறார்கள்.
இடம்: மயிலை ஆர்.கே.சாமி அரங்கம்.
சாருகேசி