காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிற காலம் இது. விளையாட்டுத்துறையிலும் இதே வேகம் தொற்றிக் கொண்டதற்கு உதாரணம்தான் ஸ்கேட்டிங் கிரிக்கெட்.
தொடங்கப்பட்ட காலம் மிகக் குறுகியதாக இருந்தாலும் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தனி முத்திரைப் பதித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய 10 நாடுகள் சேர்ந்து ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
உலகளவில் பிரபலமாகிவிட்ட இந்த ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் இந்தியாவிலும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், குஜராத், ராஜஸ்தான், தில்லி, மகாராஷ்டிரம்,பஞ்சாப், மத்தியபிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு எப்படி கிரிக்கெட் விளையாட முடியும் என்று பலரும் கேட்கலாம். ஆனால், தங்களால் அப்போட்டியிலும் சாதிக்க முடியும் என்பதை அண்மையில் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
குறிப்பாக, தமிழக அணி ஒட்டுமொத்தமாக 21 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தையும் பெற்று தனித்துவம் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியது.
இப்போட்டியில் தமிழக அணி சார்பில் வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பயிற்சியாளராக இருந்து, அவர்களை அழைத்துச் சென்ற திருச்சி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் சங்கத்தின் செயலர் மனோகரனிடம் நாம் பேசியதிலிருந்து...
ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டி பற்றி?
ஆசிய கண்டத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டியுடன், மேலை நாடுகளில் பிரபலமாக உள்ள ஸ்கேட்டிங் போட்டியையும் சேர்த்து விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டி.
கிரிக்கெட் போட்டிக்குப் பயன்படுத்தும் அளவுக்கு ஆடுகளம் இதற்குத் தேவைப்படாது. 100 அடி நீளமும், 50 அடி அகலமும் இருந்தால் போதும். தற்போதைக்கு 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஸ்கேட்டிங் கிரிக்கெட் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது கிரிக்கெட் போட்டியில் பின்பற்றப்படும் எல்.பி.டபிள்யூ. ரன் அவுட், விக்கெட் கீப்பர் போன்ற எல்லா விதிமுறைகளும் இந்த ரோலர் ஸ்கேட்டிங் போட்டியிலும் பின்பற்றப்படுகின்றன. கிரிக்கெட் அணியில் 11 வீரர்கள் என்றால் ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட்டில் 7 பேர் மட்டும் இருப்பர். ஒரு வீரர் மாற்று வீரராக இருப்பார்.
அணிகளும், வீரர்கள் தேர்வும் எப்படி?
11,14,17 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் வீரர், வீராங்கனைகளுக்குத் தனித்தனியாகவும், கலப்பு அணியாகவும் கொண்டு தற்போது இந்த ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டியை ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் கூட்டமைப்பு நடத்தி வருகிறது.
மாநில அளவில் குறைந்தது 20 நாள்கள் குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தேர்வு செய்து வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் போட்டிக்காகத் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு தேர்வானவர்களுக்கு அகில இந்தியப் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
வீரர்களின் ஆர்வம் எப்படி இருக்கிறது?
பொதுவாக ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க சிறுவர்கள், சிறுமிகள் மத்தியில் ஆர்வம் இருக்கிறது. இவ்வாறு ஆர்வத்துடன் ஸ்கேட்டிங்கில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு அதோடு கிரிக்கெட்டையும் இணைத்து விளையாடுவதில் எவ்வித பிரச்னையும் இல்லை. எல்லோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
நாங்கள் அளித்த சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற வீரர்களிலிருந்து தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
11,14,17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மொத்தம் 6 அணிகளும் (ஆண்கள் 3, பெண்கள் 3), இருபாலரும் கொண்ட அணி 3 என மொத்தம் 9 அணிகள் தமிழகத்திலிருந்து பங்கேற்று விளையாடின. இப்போட்டியில் 5 அணிகள் முதலிடம் பெற்று தங்கப் பதக்கங்களையும், 3 அணிகள் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கங்களையும் கைப்பற்றின. இதுபோல 21 புள்ளிகளைப் பெற்றதன் அடிப்படையில் ஒட்டுமொத்த "சாம்பியன்ஷிப்' பட்டத்தையும் தமிழகம் வென்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
-கு. வைத்திலிங்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.