முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நகர்வலம்: பட்​டுக் குரல் பாடகர்!

ஒரு நிறுவனத்தின் வரலாற்றை சுவாரசியமாக எழுதுவது எளிதான வேலையல்ல. அதிலும் நூற்றாண்டைக் கடந்துவிட்ட டாடா குழுமத்தைப் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து நூலாகப் பதிவு செய்வது சவாலான பணி. டாடா என்ற அந்த மந்திரச் ச

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:07 PM
பகிர்:

ஒரு நிறுவனத்தின் வரலாற்றை சுவாரசியமாக எழுதுவது எளிதான வேலையல்ல. அதிலும் நூற்றாண்டைக் கடந்துவிட்ட டாடா குழுமத்தைப் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து நூலாகப் பதிவு செய்வது சவாலான பணி.

டாடா என்ற அந்த மந்திரச் சொல், நிர்வாக இயல் உலகில் எத்தகைய உயர்ந்த இடத்தைப் பிடித்து, மக்களின் மனத்திலும் அழியாத இடத்தைப் பெற்றிருக்கிறது என்பதை, டாடா குழும வரலாற்றை ( த எவல்யூஷன் ஆஃப் எ கார்ப்பரேட் பிரான்ட்) எழுதியிருக்கும் நூலாசிரியர் மார்கன் விட்ùஸல், தன் நூலை அறிமுகப்படுத்திப் பேசியபோது உணர முடிந்தது. டாடா உருக்காலையின் துணைத் தலைவரும், டாடா இன்டர்நேஷனலின் தலைவருமான தமிழர் பி.முத்துராமன் அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.

அது நூல் வெளியீட்டு விழா என்பதைவிட, முத்துராமனை, சென்னை வாழ் முன்னாள் டாடா நிறுவன அதிகாரிகளும் ஊழியர்களும் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு என்றுதான் கூறவேண்டும். அவர்கள் ஒவ்வொருவரின் நாற்காலி அருகேயும் முத்துராமன் சென்று நலம் விசாரித்த போது, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைவிடப் பரவசமே மேலோங்கித் தெரிந்தது!

நூலை எழுத டாடா நிறுவனத்தினர் எத்தகைய ஒத்துழைப்பைத் தந்தனர் என்றும், அந்த நிறுவனத்தின் "ஆத்மா' நூலின் பக்கங்களில் பிரதிபலிக்க அதுவே காரணம் என்றும் கூறினார் நூலாசிரியர் மார்கன்.

"எல்லாம் சரிதான். அரசியல்வாதிகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள், மிஸ்டர் முத்துராமன்?' என்று கேள்வி-பதில் பகுதியில் ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வியைக் கேட்டுக் கொண்ட முத்துராமன், உடனே "அடுத்த கேள்வி, ப்ளீஸ்!' என்று பதுங்கியவர் போல் காண்பித்துக் கொண்டாலும், "அரசியல் என்று தனியாகப் பிரித்துக் கேட்டாலும், மற்ற பிரச்னைகளை எவ்வாறு கையாளுகிறோமோ அதைப் போலவேதான் அதையும் பார்க்கிறோம்!' என்று சாமர்த்தியமாகப் பதில் கூறினார்.

(கேள்வி கேட்டவர் சிங்கூர் பிரச்னையை மனத்தில் வைத்துக்கொண்டு கேட்டிருக்க வேண்டும்.)

"நூல் மிகுந்த கடுமையான உழைப்புக்கும் ஆராய்ச்சிக்கும் பின்னரே எழுதப்பட்டது. பிற நிறுவனங்களுக்கும் டாடாவின் கதை ஒரு சவாலாக இருக்கும்' என்றார் மார்கன்.

"ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு சரித்திரம் உண்டு. அதைப் பதிவு செய்வது மிக அவசியமான பணி' என்று வலியுறுத்தி வரும், பல நிறுவனங்களின் சரிதத்தை எழுதிய எஸ்.முத்தையா அன்று வராமல் போனது குறையாகப்பட்டது. மார்கனோடு அவர் உரையாடியிருந்தால் நிச்சயம் சுவாரசியமாக இருந்திருக்கும்.

வைக்கம் முகமது பஷீரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது ஆறு நாவல்களிலிருந்து எடுக்கப்பட்ட பாத்திரங்களைக் கொண்டே ஒரு நாடகம் உருவாக்கி இருந்தார் இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணன். "மெட்ரோ ப்ளஸ்' நாடக விழாவில் அவர் இயக்கத்தில் உருவான "மிஸ் மீனா' என்ற நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது.

ஜெர்மன் நாடகமான "த விஸிட்' என்ற மூலக் கதையிலிருந்து தழுவியது என்றாலும், மிஸ் மீனா என்ற இளம் பெண் பிச்சாம்புரம் என்ற சிற்றூரிலிருந்து பட்டணத்துக்கு வந்து ஒரு சினிமா நடிகையாகி, இருபது வருடங்கள் கழித்துத் தன் ஊருக்கு வருவதை அப்பட்டமான இந்தியப் பின்னணியில் உருவாக்கியிருந்தார் ராஜீவ் கிருஷ்ணன். காரணம், ராஷ்மி ரூத் தேவதாசன் அமைத்துக் கொடுத்த திரைக்கதை.

நடுநடுவே தமிழ், கன்னட, இந்தி வசனங்களும் பாத்திரங்களுக்குத் தகுந்தாற்போல் பேசுகையில், ரசிகர்களிடம் வரவேற்பு, கைத்தட்டலாக வெளிப்பட்டது. "அவள் பெயர் மிஸ் மீனா' என்ற பாட்டில் அனுபல்லவி கன்னடத்தில் என்றால் சரணம் இந்தி

வரிகளில்!

""சில நடிக, நடிகையர் கர்னாடகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குத் தமிழும் தெரியும், இந்தியும் தெரியும். அவர்கள்தான் இந்த "ஐடியா'வைச் சொன்னார்கள்..'' என்றார் இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணன் பெருந்தன்மையோடு!

புதுக்கோட்டையில் "ஞானாலயா' நூலகத்தை நடத்திவரும் பி.கிருஷ்ணமூர்த்தி, உலகம் சுற்றிய தமிழன் ஏ.கே. செட்டியாரைப் பற்றிய நினைவுகளை, கூட்டமொன்றில் பகிர்ந்து கொண்டார்.

காந்திஜி பற்றிய குறும்படம் தயாரித்தவர், "குமரிமலர்' இதழ் நடத்தியவர் என்று மட்டுமே ஏ.கே.செட்டியாரைப் பற்றி அறிந்திருந்தவர்களுக்கு, கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு சுவாரசியமாக இருந்தது. ராஜாஜி பக்தரான ஏ.கே.செட்டியார், ராஜாஜியின் உருவப் படத்தைத் திறந்து வைக்க நாமக்கல்லுக்கு வந்தாராம். போக்குவரத்துச் செலவுக்கான தொகையைக் கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டாராம். மிகவும் வற்புறுத்தி, அவர் செய்யும் நல்ல காரியம் எதற்காவது பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி வலியுறுத்திய பிறகே ஏற்றுக் கொண்டாராம்.

ஒரு நாள் "குமரிமலர்' காரியாலயத்துக்கு ராஜாஜி திடீரென்று வந்துவிட்டார். உடன் கல்கியும் இருந்தாராம்.

"நீங்கள் சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே!' என்றார் ஏ.கே.செட்டியார்.

"ஒரு நல்ல கதை எழுதியிருக்கிறேன். அதை "குமரிமலரி'ல் பிரசுரம் செய்ய வேண்டும் என்றார் ராஜாஜி.

"கதை என்றால் "கல்கி'யில் கொடுத்திருக்கலாமே?' என்றாராம் கல்கி.

"அதுதான் நல்ல கதை என்றேனே!' என்றாராம் ராஜாஜி பளிச்சென்று.

"ஆனந்த விகடன்' பொன் விழாவின்போது, அதைத் தோற்றுவித்த பூதலூர் வைத்தியநாதய்யரின் உருவப் படத்துக்காக அவர்கள் தேடியபோது, அதைத் தேடிக் கொடுத்தவர் ஏ.கே.செட்டியார்தான் என்று பேசிய கிருஷ்ணமூர்த்தியின் நினைவாற்றலும் பேச்சுத் திறமையும் பிரமிக்க வைக்கின்றன.

கர்நாடக இசைக்கு ஒரு புதிய வரவு, ராமகிருஷ்ண மூர்த்தி. அமெரிக்காவில், கலிபோர்னியாவில் வசிக்கும் பத்மா குட்டி என்பவரிடம் ஏழு வயதில் இசை கற்றுக் கொள்ளத் தொடங்கி, தில்லி பி.சுந்தரராஜனிடமும் சென்னை சி.ஆர். வைத்தியநாதனிடமும் தன் இசைப் பயிற்சியை மேற்கொண்ட ராமகிருஷ்ண மூர்த்தி, தற்போது செங்கல்பட்டு ரங்கநாதனிடம் பயின்று வருகிறாராம்.

சார்ஸýர் அமைப்பின் சார்பில் அவர் இசை நிகழ்ச்சி வழங்கியபோது, இன்றைய பிரபல பாடகர்களை அரங்கத்தில் காணமுடிந்தது. பல இடங்களில் கே.வி.என்.னை நினைவுப் படுத்தினார் ராமகிருஷ்ண மூர்த்தி. குரலில் அப்படி ஒரு பட்டுத் துணி மென்மை. முத்துசாமி தீட்சிதரின் "ஹிரண்மயீம்', புரந்தரதாசரின் "ஜகதோத்தாரண' தருமபுரி சுப்பராயரின் "மருபாரியும்' இதமாக இதயத்தை வருடின. மூத்த இசைக் கலைஞர்களுக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் எஸ்.வரதராஜன் (வயலின்)கே.வி.பிரசாத் (மிருதங்கம்), ராமகிருஷ்ணனுக்கு வாசித்தது, அவர் அடைந்துவிட்ட தகுதியைக் காண்பித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →