ஞாயிறு கொண்டாட்டம்

எமக்குத் தொழில் பேச்சு!

எமக்குத் தொழில் கவிதை' என்பார் பாரதி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் பெண் பேச்சாளர் பாரதி கூறுகிறார் "எமக்குத் தொழில் பேச்சு' என்று. பேச்சுக்கலையில் இப்போது பிரபலம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம்தான். அ

சா. ஜெயப்பிரகாஷ்

மக்குத் தொழில் கவிதை' என்பார் பாரதி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் பெண் பேச்சாளர் பாரதி கூறுகிறார் "எமக்குத் தொழில் பேச்சு' என்று.

பேச்சுக்கலையில் இப்போது பிரபலம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம்தான். அதிலும் குறிப்பாக, அந்தக் குழுவில் ஒரு பெண் இருப்பது அவசியமான ஒன்று என்பது மாறி, முற்றிலும் பெண் பேச்சாளர்களைக் கொண்டே ஒரு நிகழ்ச்சியை வடிவமைப்பது இப்போதைய புதிய பாணி. அப்படித்தான் நிகழ்ச்சி நடத்துகிறார் இந்தப் பாரதி. 30 வயது நிரம்பிய இவர் எம்சிஏ (கணினியியலில் முதுநிலைப் பட்டம்!) முடித்துள்ளார். தந்தை சந்திரசேகரன்தான் இவருக்கு குரு. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான சந்திரசேகரன், இப்போது தனியார் கல்லூரி ஒன்றின் முதல்வர். தாய் ஜெயலட்சுமி, தங்கை ஸ்ரீவித்யா. கணவர் பாபு.

பேச்சை பிரதான தொழிலாக்கிக் கொண்டு, கூடவே வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பாரதியை சந்தித்தோம். இனி அவருடனான உரையாடல்:

பாரதி என்ற பெயர்?

1981-ல் பாரதி நூற்றாண்டில் பிறந்ததால் இலக்கிய ஆர்வலரான எனது தந்தை எனக்கு வைத்த பெயர் பாரதி.

கணினித் துறைக்குப் படித்துவிட்டு எப்படி பேச்சுத் துறைக்கு மாறினீர்கள்?

சிறுவயதிலேயே அப்பா, அவரது நண்பர்களுடன் பேசும் இலக்கியக் கூட்டங்களுக்கு என்னை அழைத்துச் செல்வார். மேடைக்குக் கீழிருந்து அவர்களைக் கிண்டலடித்து வந்த என்னை மேடைக்கு வந்து பேசிப்பார் என்று அழைத்தார்கள். அப்படியாக வந்தேன். ஆர்வத்தால் கணினி படித்தேன். அதையே தொழிலாக்கிக் கொள்ள விருப்பமில்லை. இயந்திர வாழ்க்கை பிடிக்கவில்லை. ஆர்வத்தால் பேச்சுத்துறைக்கு வந்தேன். இதிலே ஒவ்வொரு நாளும் ஒரு "த்ரில்' இருக்கிறது.

பதினொன்றாம் வகுப்பு பயின்றபோது பேசத் தொடங்கியது இப்போது எமக்குத் தொழில் பேச்சாகிவிட்டது.

வானொலியில் நிகழ்ச்சிகளைத் தொகுப்பது?

மேடையிலும் பேசுகிறேன். வானொலியிலும் பேசுகிறேன். அதுதான் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை. அவ்வளவுதான், பெரிய வருமானத்துக்காக வானொலிக்குப் போகவில்லை.

கணவரின் ஒத்துழைப்பு...?

அத்தை மகனைத்தான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். இதுவரை எனது பேச்சில் அவர் குறை கூறியதில்லை. தனியாக வெளியூர்களுக்குச் சென்று வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கும் வரை தைரியமாகப் போய்விட்டு வா எனக் கூறிவிட்டார்.

சாதனை என்று...?

ஏறத்தாழ தமிழ்நாட்டிலுள்ள எல்லா கம்பன் கழகங்களிலும் பேசிவிட்டேன். இலக்கிய மேடைகளிலும் ஏறிவிட்டேன். பிரபல தொலைக்காட்சிகளிலும் பங்கேற்றுவிட்டேன். ஏராளமான விருதுகளை வாங்கியிருக்கிறேன். மாதத்துக்கு சராசரியாக 10 கூட்டம் என, சுமார் ஆயிரம் கூட்டங்களில் இதுவரை பேசியிருக்கிறேன்.

மும்பைத் தமிழ்ச் சங்கம், பாலக்காடு தமிழ்ச் சங்கம் இவற்றையும் தாண்டி சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக தனியாக ஒரு குழுவை அமைத்துக் கொண்டு- நடுவராகவும்- நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.  என்றபோதும், கடந்த ஆண்டு புதுக்கோட்டை கம்பன் கழகத்தில் நான் பேசிவிட்டு வீடு திரும்பியபோது, எனது தந்தை எனக்கு 1,000 கொடுத்து பாராட்டியதைப் பெரிய விருதாக, சாதனையாகக் கருதுகிறேன்.



என்னென்ன தலைப்புகளைத் தேர்வு செய்கிறீர்கள்?

பெரும்பாலும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான தலைப்புகளில்தான் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கிராமங்களில், திருவிழாக்களுக்கு அழைத்தால் கொஞ்சம் ஜனரஞ்சகமாக திரைத் துறை தலைப்புகளை வைத்துக் கொள்கிறோம். கல்வி நிறுவனங்களில் சுய முன்னேற்றம், தன்னம்பிக்கைதான் தலைப்பு.

பேச்சு என்பது வெறும் பொழுதுபோக்கா? உங்கள் வயதையொத்த, பின்னால் வரும் இளைய பேச்சாளர்களுக்கு உங்களின் தகவல் என்ன?  

மேடைப்பேச்சு தொடக்கத்தில் அறிமுகத்துக்கு வேண்டுமானால், பொழுதுபோக்கை பிரதானப்படுத்திய நகைச்சுவை அம்சங்களுடன் இருக்கலாம். ஆனால், அந்தத் துறையில் தொடர்ந்து நின்று நிலைத்திருக்க வேண்டுமானால் "விஷயம்' முக்கியம். முழு முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் கஷ்டம் தெரியாது. வழக்குரைஞர்களும் மருத்துவர்களும் கூறுவதைப் போல, பேச்சுத் தொழிலும் "பிராக்டீஸ்'தான். ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்க வேண்டும். மாணவனாக, மாணவியாக எப்போதும் இருக்க வேண்டும்.

பேச்சால் சமூக மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியுமா?

தொடக்கத்தில் விளையாட்டாகத்தான் பேச ஆரம்பித்தேன். ஆனால், போகப்போகத்தான் அதிலுள்ள பொறுப்பும் அக்கறையும் கூடியது. வயதில், அனுபவத்தில் மூத்தவர்களும் மரியாதை கொடுக்கும்போது, பாமர மக்கள் எங்களின் சொற்களை வேதவாக்காக நினைக்கும்போது நெகிழ்கிறது. பாட்டுத் திறத்தால் இந்த வையத்தைப் பாலிக்க வந்த...

எனப் பாரதி குறிப்பிட்டதைப் போல, "பேச்சுத்திறத்தால் இந்த வையத்தை பாலித்திடலாம்' என்ற நம்பிக்கை

இருக்கிறது.

-"மனதில் உறுதி வேண்டும்...' என்ற பாடல்தான் பாரதி பாபுவின் கைபேசி "காலர் டியூன்'. அவரைப் பார்த்தாலே அது தெரிந்தது!

-சா. ஜெயப்பிரகாஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT