நகர்வலம்: ஐஸ்க்ரீம் ஸ்கூப் அடவு!
மாதம் ஒரு சொற்பொழிவு என்பது சென்னை நகரைப் பொறுத்தவரையில் பல அமைப்புகளில் ஒரு விதியாகவே அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதம் முதல் சனிக்கிழமை, தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் வினோபா அரங்கில், புஷாவலி நடராஜ
மாதம் ஒரு சொற்பொழிவு என்பது சென்னை நகரைப் பொறுத்தவரையில் பல அமைப்புகளில் ஒரு விதியாகவே அனுசரிக்கப்படுகிறது.
இந்த மாதம் முதல் சனிக்கிழமை, தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் வினோபா அரங்கில், புஷாவலி நடராஜனும் பேராசிரியர் சுவாமிநாதனும் ஒரு சொற்பொழிவு நடத்தினர். அஜந்தா ஓவியங்களில் காணப்படும் துகில்களைப் பற்றித்தான் உரை.
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று தமிழ்ப் பாரம்பரியப் பராமரிப்புக் குழு சார்பாக, பேராசிரியர் சுவாமிநாதன், இம்மாதிரி சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார் (பல வங்காள மொழி படைப்புகளைத் தமிழுக்குத் தந்த கல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர்தான் பேராசிரியர் சுவாமிநாதன்!)
அப்பாராவ் காலரியில் சென்ற மாதம் முதல் ஒரு புது முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் ஷரண். புகழ்பெற்ற கலைஞர்களை வரவழைத்து சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் துறை பற்றிப் பேச வாய்ப்பு அளிக்கிறார், 20-25 பேர் மட்டுமே அழைப்பாளர்கள்.
சென்ற மாதம் ஓவியர் அஞ்சலி இலா மேனன் ஓவியங்கள் குறித்த சொற்பொழிவில் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இம்மாதம் உரையாற்றியவர் நடனக் கலைஞர் அலர்மேல்வள்ளி.
தன் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் புதுமை என்ற பெயரில் எந்த சமரசமும் செய்துகொள்ள விரும்பாத நடனக் கலைஞர் இவர். சங்கக் கவிதைகளை அதன் நளினமான அழகோடும் தொன்மையோடும் மேடையேற்றியவர். பரதநாட்டியத்தில் கற்பனை வளம் என்ற தலைப்பில் இவர் உரை அமைந்திருந்தது.
சில அடவுகளை இப்போதைய இளம் தலைமுறை மாணவிகளுக்குக் கற்பிக்கும் முறையில், எப்படி புதிய புதிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்று கூறிவிட்டு, ஓர் அடவை, "எப்படி ஐஸ்க்ரீம் ஸ்கூப்பை எடுத்துத் தருபவர் தம் வலக் கரத்தைப் பயன்படுத்துகிறாரோ... அப்படி இலேசாக கையை வளைத்துக் கொண்டு செய்யுங்கள்..' என்று தம் மாணவியரிடம் கூறியதை உதாரணமாககச் சொன்னபோது அரங்கில் சிரிப்பலை எழுந்தது! (இதை "ஐஸ்க்ரீம் ஸ்கூப் அடவு' என்று தாம் பெயரிட்டிருப்பதாக வேடிக்கையாகச் சொன்னார்.)
பாடல்களைப் பாடும்போது எப்படி நடனக் கலைஞரின் கற்பனை தூண்டப்படுகிறது என்பதையும் எடுத்துக் கூறினார் வள்ளி.
சங்கக் கவிதைகளை மேடைக்குக் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் தம் தாய்தான் என்று பெருமையோடு தெரிவித்தார். பின்னர் பேராசிரியர் ஏ.கே.ராமானுஜன் அவர்களின் ஆங்கில மொழிபெயர்பைப் படிக்கப் படிக்க, அவற்றின் சுவையும், பாடல்களில் பொதிந்திருந்த நிகழ்ச்சிகளும் செய்திகளும் தம்மை மிகவும் கவர்ந்து ஈர்த்ததாகக் குறிப்பிட்டார்.
பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் நமக்குத் தெரிந்த ஒருவர், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. சாகித்ய அகாதமி விருது மட்டுமல்லாமல், சங்கீத நாடக அகதமி விருதையும் பெற்ற ஒரே எழுத்தாளர் என்று இந்திரா பார்த்தசாரதியைச் சொல்லலாம்.
இன்னொருவர், ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்னும் மருத்துவர். இவர் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி என்ற ஜ.ரா.சுந்தரேசனின் மூத்த சகோதரர். சித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாட்டோடு உழைத்து úஸôரியாஸிஸ் எனப்படும் சொறி சிரங்குக்கு இவர் கண்டுபிடித்த எண்ணெய், பல நோயாளிகளை மகிழ்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.
டாக்டர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பாராட்ட "அக்கறை' அமைப்பு செய்திருந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகரும், கிரேஸி மோகனும் கலந்து கொண்டபோது கலகலப்புக்குக் குறைவு ஏது? சிரிசிரியென்று ஒரே "சிரியாஸிஸ்'தான்!
இம்மாதிரி கூட்டங்களை நெறிப்படுத்துவதில் ராணி மைந்தனுக்கு அனுபவம் அதிகம். டாக்டர் ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தியின் மகன்களும், மகளும், மருமள்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்க வாய்ப்புக் கொடுத்தார்.
நெருக்கமாகப் பழகக்கூடியவர்கள் குடும்ப உறுப்பினர்களே. அவர்கள் சொல்வது அப்பட்டமான உண்மையாக இருக்கும்.அவருடைய ஊக்குவிக்கும் பண்பு, இடைவிடாத ஆராய்ச்சி, இப்படிப்பட்டவர்களுக்கே உள்ள ஞாபகமறதி என்று மகன்கள் சில உண்மைச் சம்பவங்களைக் குறிப்பிட்டார்கள். ஆரம்ப நாட்களில் கிராமப் பகுதியில் ஸ்கூட்டரில் பயணம் செய்து, மெழுகுவர்த்தி ஒளியில் பிரசவம் பார்த்தது உட்பட பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவரின் அனுபவங்களைச் சொன்னார்கள்.
அண்ணனைப் பாராட்ட தம்பி (ஜ.ரா.சு.,) ஏற்பாடு செய்த கூட்டத்தைக் குறிப்பிட்டு தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று சிலேடையாகக் கூறினார் நகைச்சுவை எழுத்தாளர் "கடுகு'. டாக்டர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு நாள் நோபல் பரிசு கிடைத்தால் வியப்படைய வேண்டாம் என்று பலர் வாழ்த்தினர்.