கலை வடிவில் ஒரு செய்தி
கலை வடிவில் ஒரு செய்தி மரங்கள் மனிதகுலத்துக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் தினசரி வாழ்க்கையில் உதவுகின்றன, அவற்றை வெட்டி எறிந்து சுற்றுச்சூழலை எப்படி நாம் பாழாக்குகிறோம் என்பதை ஓர் இசை (நாடகமாக!) நடனமாக
கலை வடிவில் ஒரு செய்தி மரங்கள் மனிதகுலத்துக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் தினசரி வாழ்க்கையில் உதவுகின்றன, அவற்றை வெட்டி எறிந்து சுற்றுச்சூழலை எப்படி நாம் பாழாக்குகிறோம் என்பதை ஓர் இசை (நாடகமாக!) நடனமாக வழங்கினர் திருவனந்தபுரம் மிதிலாலயா டான்ஸ் அகடமி குழுவினர்.
வெறும் செய்தியைச் சொன்னால் சுவாரசியமாக இருக்காது என்பதை உணர்ந்து அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சிக்குள் ஒரு சின்னஞ்சிறு கதையை உள்ளடக்கியிருந்தார்கள். (பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தால் அவள் வாழமாட்டாள்; எனவே முதலில் ஒரு மரத்துக்கும் அவளுக்கும் மணம் செய்து வையுங்கள். பின்னர் திருமணம் செய்யலாம் என ஜோதிடர் கூறுகிறார். அப்படியே செய்கின்றனர் பெற்றோர். ஆனால் அந்த மரத்தைப் பின்னர் வெட்டப்போவதாக அறிவிப்பு செய்ததும், அந்தப் பெண்ணால் தாங்க முடிவதில்லை. சுந்தர்லால் பகுகுணாவின் "சிப்கோ' இயக்கம் மாதிரி அந்தப் பெண் மரத்தைக் காப்பதுபோல் நிற்கிறாள்.
ஆனால் மரம் வெட்டிச் சாய்க்கப்படுகிறது.) முதல் தரமான இசை, வளவளவென்று அறுவையாக இழுக்காமல் கச்சிதமான காட்சிகள், மிகை இல்லாத நடனமும், கண்ணை உறுத்தாத ஒளியமைப்புமாக ஒரு முதல் தர நிகழ்ச்சியாக அமைந்திருந்தது "கல்பதரு'. வி.மைதிலியின் மிதிலாலயா கேரள அரசு, மத்திய அரசின் சார்பாக நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்கிறது. மத்திய கலாசாரத் துறையிலிருந்து தேசிய அளவில் ஏழு ஸ்காலர்ஷிப்புகளைப் பெற்றிருக்கிறது. சபா ஆண்டுவிழா நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக இந்த அருமையான நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்து வழங்கிய நாரதகான சபாவுக்குப் பாராட்டுச் சேர வேண்டும்.
நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகளையும் தீமைகளையும் வேறு துறையைச் சார்ந்த யாராவது எடுத்துச் சொன்னால் நாம் என்ன செய்வோம்?
1. ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியே விட்டு விடுவோம்.
2. விஷயம் தெரியாமல் ஏதோ கூறுகிறார் என்று அலட்சியப்படுத்திவிடுவோம்.
3. பாவம், எந்த அரைகுறை மருத்துவரிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டாரோ என்று பரிதாபம் தெரிவிப்போம்.
ஆனால், அப்படி விஷயங்களைப் "புட்டுப்புட்டு வைத்தவர்' சாதாரண மனிதரல்ல. முன்னாள் மணிபால் பல்கலைக்கழகத் துணைவேந்தர். இங்கிலாந்தின் மிடில்ùஸக்ஸ் மருத்துவமனையில் இதய நோய்ப் பிரிவு பேராசிரியர். முதலமைச்சர்கள் உட்பட பல வி.ஐ.பி.களுக்கு மருத்துவ ஆலோசகர். பீகார் மாநில சுகாதார மருத்துவக் குழுவின் தலைவர். "ஜர்னல் ஆஃப் சயன்ஸ் அன்ட் ஹீலிங்' இதழின் முதன்மை ஆசிரியர். மருத்துவ சேவைக்காக இந்த ஆண்டு "பத்மபூஷன்' விருது பெற்றவர் டாக்டர் பி.எம்.ஹெக்டே.
கசப்பு மருந்தைச் சர்க்கரையில் தோய்த்துக் கொடுப்பதுபோல அவர் இதய பைபாஸ் சர்ஜரியையும், பிற தேவையற்ற அறுவைச் சிகிச்சைகளையும் பற்றி சிரிக்கச் சிரிக்கச் உரையாற்றினார். நம் உடலிலேயே சில மாற்றங்கள் இயற்கையாக உண்டாகி, சில கோளாறுகளைத் தானாகவே சரி செய்து கொள்கிறது என்றார்.
மருத்துவர்கள் ஸ்ட்ரைக் செய்த காலத்தில், இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே இருந்ததையும், அவர்கள் முழு மூச்சோடு பணியில் ஈடுபட்டபோது இறப்புகள் விகிதம் ஜிவ்வென்று அதிகரித்ததாகவும் புள்ளிவிவரங்களுடன் அவர் குறிப்பிட்டபோது சிரிப்பலை எழுந்தது.
ஹோமியோபதி மருந்துகளின் தன்மையை சிலாகித்துப் பேசினார். சில சித்த மருத்துவ முறைகளும், நீண்ட நாள் நோய்களிலிருந்து விடுதலை பெற்றுத் தந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். பிராணாயாமம், தியானம் முதலியவை எவ்வாறு மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவுகின்றன என்று விளக்கினார். மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக மருத்துவர்கள் சில மருந்துகளை "பிரிஸ்கிரிப்ஷனி'ல் எழுதிவிடுவதும், அதன் தீவிர விளைவுகள் மக்களை பாதிப்பதையும் எடுத்துச் சொன்னார் டாக்டர் ஹெக்டே.
(அவரை அறிமுகம் செய்து வைத்துப் பேசியவர், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.வி.கிருஷ்ணசாமி.) பிழைக்க வாய்ப்பு இல்லாத நோயாளிகளை எப்படி மெஷின்களில் பிணைத்து, வாட்டி வதைத்த பின், "எங்களால் முடிந்தவரை பார்த்துவிட்டோம்!' என்று "பில்'லோடு ஆசாமியை ஒப்படைப்பதை நாடகம் போல விவரித்தார் டாக்டர் ஹெக்டே.
பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் மனைவிக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்ததையும் "ஹெக்டே சொன்னதைக் கேட்காமல் போனது தவறு!' என்று அவர் வருந்தியதையும் குறிப்பிட்டார் டாக்டர் ஹெக்டே.
மனத்தில் உள்ள வெறுப்புகளை அகற்றினாலே பாதி நோய் பறந்துவிடும் என்றார். பாஸிட்டிவ் நினைப்புகள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என வலியுறுத்தினார்.
சொற்பொழிவை விஎச்எஸ் மையமும்,டேக் மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
"கல்கி'யின் "சிவகாமியின் சபதம்' நாவலை சுமார் 30-க்கு மேற்பட்ட நடிக - நடிகையரின் குரலை வைத்துக்கொண்டே நான்கு எம்பி3 சிடிக்களாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். "பாம்பே'கண்ணன். சரித்திர கதாபாத்திரங்கள் மகேந்திர பல்லவர். பரஞ்சோதி, சிவகாமி, நாகநந்தி, புலிகேசி, ஆயன சிற்பி எல்லோரின் குரல்களையும் இந்த 30 மணி நேரக் குறுந்தகடுகளில் கேட்டு ரசிக்க முடியும்! "போர்க் காட்சிகள்,வெள்ளப் பெருக்கம் எல்லாவற்றுக்கும் தகுந்த பின்னணி ஒலி கொடுத்திருக்கிறோம்!'' என்கிறார் கண்ணன். ஸ்வாதி சாஃப்ட் சொல்யூஷன்ஸ், பாம்பே கண்ணன் வாயிலாக மற்றுமொரு சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்!
டாக்டர் ஸீமா தேவியின் ஓவியங்கள் சிலவும், உடற்குறைவு இருந்தாலும் ஓவியத்தில் அபார திறமை கொண்ட உதயகுமாரின் ஓவியங்கள் சிலவும் பார்வதி ஆர்ட் காலரி (எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை)யில் இம்மாதம் 17-ஆம் முதல் தேதி முதல் ஒரு வாரத்துக்குக் காட்சியில் வைக்கப்படுகின்றன.
ஓவியக் காட்சிக்கு "மேட்டர் அன்ட் ஸ்பிரிட்' என்று தலைப்புக் கொடுத்திருக்கிறார்கள். உண்மைதான். உள்ளொளி இருந்தால்தானே விஷயம் இருக்கும்!