மணி மணியாக இரு "மணி'கள்"
வழக்கமான இசை நிகழ்ச்சிகளில், சிறிய மாறுதல்களைச் செய்து, புதுமைப் போர்வை போர்த்தி அவற்றை வழங்குவதில் கிருஷ்ண கான சபா முன்னாள் செயலர் யக்ஞராமன் ஆர்வம் காண்பிப்பார். மகன் பிரபுவும் அப்பாவின் அடிச்சுவட்டை
வ ழக்கமான இசை நிகழ்ச்சிகளில், சிறிய மாறுதல்களைச் செய்து, புதுமைப் போர்வை போர்த்தி அவற்றை வழங்குவதில் கிருஷ்ண கான சபா முன்னாள் செயலர் யக்ஞராமன் ஆர்வம் காண்பிப்பார். மகன் பிரபுவும் அப்பாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர் போலும்.
"டிரம்ஸ்' சிவமணியையும், மிருதங்கக் கலைஞர் காரைக்குடி மணியையும் ஒரே மேடையில் ஏற்றினார் பிரபு, கடந்த வாரம் தொடங்கிய "யக்ஞராமன் நினைவு விழாவில்.
சிவமணி சாதாரண "டிரம்ஸ்' வாசிப்பவர்தானே என்ற நினைப்பெல்லாம் அன்று தவிடு பொடியாயிற்று. முதல் 40 நிமிடங்களுக்கு சிவமணி வாசித்த தனி, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத லய அற்புதம். இரண்டு கால்களிலும் சலங்கை. வெறும் கையால் தாளமிட்டுக் கொண்டு அவர் மேடையில் வந்தபோதே, ஸ்டீரியோவில், அவர் ஏதோ வாசிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றியது. (ஒலியமைப்பு மும்பை சுனில்)
இரண்டு கால்களிலும் மாற்றி மாற்றித் தாளம் போடும்போது எழும் சலங்கை ஒலியோடு, குச்சியைப் பிடித்த கரங்களால் அவர் வாசிக்கும் அத்தனை தட்டுகளிலும் எழும் ஒலியும் இணைந்து கேட்கையில், பிரமிப்பு ஏற்படுகிறது. தாளத்தில் எத்தனை சொற்கட்டுகளைக் கேட்க முடியுமோ அத்தனையையும் அவர் கைகள் சளைக்காமல் அள்ளித் தருகின்றன. அதிலும் எத்தனை எத்தனை வகை ஒலிகள், ஓசைகள்! குச்சிகளைக் காற்றில் விட்டுத் திரும்பப் பிடித்து மறுபடி அதே லயத்தில் வந்து சேர்ந்துகொள்ளும் லாகவம் அவர் எத்தனை பயிற்சி செய்திருப்பாரோ என்று வியக்க வைக்கிறது. (செம்மொழிக்காக கோவையில் அன்றுதான் வாசித்துவிட்டு, மாலையில் நேராக அரங்கத்துக்கு வந்துவிட்டாராம்!)
காற்றில் இலை அசையும் ஓசையையும், தண்ணீர் சலசலத்து ஓடும் ஒலியையும் சிவமணி வெகு அனாயாசமாக எழுப்புகிறார். கம்ப்யூட்டரின் துல்லியத்தோடு கரங்கள் இயங்குகின்றன. சங்கிலி போன்ற ஒரு சின்னக் கருவியில் அவர் எழுப்பும் லயம் மிகுந்த ஒலியைக் கேட்கையில், காற்றைக்கூட கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது! கஞ்சிராவைவிடச் சிறிய வாத்தியத்தில், இடது கையால் அவர் வாசிக்கும்போதுகூட எந்தப் பிசகும் எழுவதில்லை. வாசிப்பில் எத்தனை வேகம் இருக்கிறதோ அத்தனை துல்லியம் ஓசையில் இருப்பது அவர் சாதனை. நாற்பது நிமிடங்களில், அவர் கற்பனைக்கும் எட்டாத ஓசை - ஒலிகளைக் கரங்களில் வரவழைத்துக் காதில் பொழிந்தபோது எப்படிப்பட்ட அற்புதக் கலைஞர் இவர் என்று
எண்ணத் தோன்றியது.
சிவமணி இப்படி வாசித்து ஓய்ந்த பின், காரைக்குடி மணி பாவம், தன் மிருதங்கத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாரோ என்று உண்மையாகவே கவலை உண்டாயிற்று. ஆனால் அப்படி கவலைப்பட்டிருக்கவே வேண்டாம் என்று நினைக்கிற மாதிரி, இரண்டு பக்கமே உள்ள மிருதங்கத்தை வைத்துக்கொண்டு இணையாக நின்று வாசித்து தூள் கிளப்பிவிட்டார் காரைக்குடி மணி. அவருடன் பெங்களூர் அம்ருத் கஞ்சிரா வாசித்ததும், இருவரின் தாள - லயத்துக்கு ஏற்ப சிவமணி "டிரம்ஸில் அவர்களோடு ஆர்ப்பாட்டம் இன்றி இணைந்து கொண்டதும், இசை நிகழ்ச்சி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என எண்ண வைத்தது. "டிரம்ஸ்' சிவமணியைப் போன்ற கலைஞர்கள் வெகு அற்புதமாகவே தோன்றுவார்கள். உடம்பு முழுக்க லயம் ஓடும் இம்மாதிரி கலைஞருக்கு மாநில அளவில் மரியாதைகள் செய்யப்பட்டாலும், தேசிய அளவிலும் அவர் கெüரவிக்கப்படும் நாள் ஒன்று வரவேண்டும்!
இதே விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியும் சுவாரசியமாகவே இருந்தது. இளம் பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதியும், இளம் வட இந்தியப் பாடகர் சஞ்சீவ் அபயங்கரும் சேர்ந்து வழங்கிய இசை நிகழ்ச்சி. கர்நாடக - இந்துஸ்தானி ரகங்களில் பொதுவான இரண்டு ராகங்களைக் கொண்டு புனையப்பட்ட நிகழ்ச்சி. ஸ்ரீராம் பார்த்தசாரதி "கல்யாணி' ராகத்தைப் பாட அதற்கு இணையான "யமன்' ராகத்தை சஞ்சீவ் கையாண்டார். ஆனால் ஒருவர் ஆலாபனை செய்துவிட்டு அடுத்தவரை பாடச் சொல்லாமல், ஆலாபனையைப் பகிர்ந்து கொண்டது நிறைவைத் தரவில்லை. அதேபோல திட்டமிடலிலும் குறை தெரிந்தது. ஆலாபனை - நிரவல் - சுவரம் பாடுதல் மூன்றிலுமே சமமான பங்கு எடுத்த மாதிரி தெரியவில்லை. அடுத்து, கர்நாடக இசையில் ஹிந்தோள ராகத்தை ஸ்ரீராம் எடுத்துக்கொள்ள, சஞ்சீவ் அதற்கு இணையான மால்கெüன்ஸ் ராகத்தைக் கையாண்டார்.
சஞ்சீவ் அபயங்கர் சாதாரணக் கலைஞரல்ல. குரல் வளத்தில் ரசிகரைக் கட்டிப் போட்டுவிடும் திறமைசாலி. வயலின் வாசித்த சுந்தரேஸ்வரனுக்குக் கிடைத்த வாய்ப்பு, ஹார்மோனியம் வாசித்த ரவீந்திர கட்டோட்டிக்குக் கிடைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. மிருதங்கக் கலைஞர் மன்னார்குடி ஈசுவரனும், தபலா கலைஞர் விஷ்வநாத் நாகோடும் ஒருவரை ஒருவர் ரசித்து வாசித்தார்கள்.
பொதுவாகவே இம்மாதிரி ஜுகல்பந்தி நிகழ்ச்சிகளில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கையில்தான் வெற்றி கிடைக்கும். நேரத்தைச் சமமாகப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அதிருப்தியையும் தவிர்க்க இயலும்.
நிறைவு நாளான ஞாயிறன்று, இசை மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு, யக்ஞராமன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. இளைய தலைமுறை கலைஞர்கள் சிக்கில் குருசரணுக்கும் ஷீஜித் கிருஷ்ணாவுக்கும் யக்ஞராமன் நினைவு சிறப்பு விருதுகள் அளிக்கப்படவிருக்கின்றன.
நாடகக் கலைஞர் - நாடகாசிரியர் குடந்தை மாலியின் ஐம்பதாண்டு காலப் பணியைப் பாராட்டி திரிசக்தி குழுமம் பொன்விழா கொண்டாடுகிறது. இடம்: மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கம். நாள்: ஞாயிறு 4-ஆம் தேதி மாலை 6 மணி.
இதுவரை 33 மேடை நாடகங்களை, சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றிய பெருமை "மாலி'க்கு உண்டு. (இவரது குழு தில்லி சென்றிருந்தபோது, அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து உரையாடி, தேநீர் விருந்தளித்தார்.)
விழாவில் கே.பாலசந்தர் தலைமை வகிக்க, நீதியரசர் வள்ளிநாயகம், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ் ஆகியோர் பாராட்டுரை வழங்குகிறார்கள்.
"மாலிக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!