நகர்வலம்: காலில் சலங்கை கொஞ்ச...
சென்னை புத்தகச் சங்கத்தின் சார்பில் தம் புதிய நாவல் ("இஃப் ஐ குட் டெல் யு') பற்றிப் பேச வந்திருந்தார் இளைஞர் செüம்யா பட்டாசார்யா. "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில நாளிதழின் மும்பைப் பதிப்புக்கு ஆசிரியர்.
சென்னை புத்தகச் சங்கத்தின் சார்பில் தம் புதிய நாவல் ("இஃப் ஐ குட் டெல் யு') பற்றிப் பேச வந்திருந்தார் இளைஞர் செüம்யா பட்டாசார்யா. "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில நாளிதழின் மும்பைப் பதிப்புக்கு ஆசிரியர்.
நாவல் முழுக்க, முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை, தந்தை மகளுக்கு எழுதிய கடிதத்தின் வடிவில் அமைந்திருக்கிறது. ஒரு சிறுகதையை இந்தப் பாணியில் எழுதிவிடலாம். ஆனால் ஒரு முழு நாவலையுமே அப்படிப் படைப்பது சற்றுக் கடினமான பணிதான். (பல வருடங்களுக்கு முன்பு, த.நா.குமாரசாமி ஒரு முழு டெலிபோன் உரையாடலை ஒரு சிறுகதையாக உருவாக்கியிருந்தார். அந்த உத்தி அப்போது கதையைப் படிக்கையில் புதுமையாக இருந்தது!)
அவருடன் நாவலைப் பற்றி உரையாடியவர் திஷானி தோஷி. புகழ் பெற்ற பெண் கவிஞர். இளைய தலைமுறையைச் சேர்ந்தவர். ஒரு நாவலை ஆசிரியரும் இலக்கியவாதி ஒருவரும் விவாதிப்பது சுவாரசியமான நிகழ்ச்சியாக இருந்தது. அது, வாசிப்பு அனுபவத்தைவிட இன்னும் சுவையாக இருக்கிறது. திஷானி நாவலை ஆழ்ந்து படித்துவிட்டு வந்திருந்ததால், அவர் முன் வைத்த கேள்விகள், பாத்திரங்கள் - நிகழ்ச்சிகள் இவற்றைச் சுற்றியே இருந்தன. செüம்யா பட்டாசார்யாவும் தன் பதில்களை, அலட்டிக் கொள்ளாமல் அளந்து சொன்னார். இந்த உத்தியை தமிழ்ப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளில்கூடக் கையாளலாமே எனத்
தோன்றுகிறது.
கிருஷ்ண கான சபாவில், யக்ஞராமன் நினைவு விழாவின்போது நடந்த மூன்று நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை:
ஒன்று, பாரதரத்னா பண்டிட் ரவிசங்கரின் சீடர் சுபேந்திர ராவின் சிதார் இசை. அவருடன் அவர் துணைவி சாஸ்கியா ராவ் செல்லோ இசை. (செல்லோ வயலினைப் போல இருந்தாலும் உருவில் பெரியது.) அதை ஏதோ தம்பூரா மாதிரி அநாயாசமாக வாசித்தார் சாஸ்கியா. டச்சு நாட்டுக்காரரான சாஸ்கியா இந்திய இசையைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.
கணவர் சுபேந்திர ராவ் பூர்ய தனாஸ்ரீ என்ற இந்துஸ்தானி ராகத்தை வாசிக்க, சாஸ்கியா அதற்குக் கிட்டத்தட்ட இணையான நம் பந்துவராளி ராகத்தைச் செல்லோவில் வழங்கினார். அந்தக் கருவியில் வரும் நாதம், அடிக்குரலில் பாடுவதுபோல் இருக்கிறது. ஆனால் அதை மெலிதாகவும் ஒலிக்கச் செய்ய, கூடுதலான தந்திகளை இணைத்திருக்கிறார். நம் கர்நாடக இசையில் ஆரம்ப பாடமான "ரார வேணு கோபாலா"வை அவர் வாசித்தபோது, இயல்பாக இருந்தது. க்ரீஸ் நாட்டு கிராம இசை ஒன்றையும் இந்தத் தம்பதி வழங்கினர். அதன் எளிமையும் இனிமையும் நெஞ்சைத் தொட்டன. (தபலா கலைஞர்: துர்ஜெய் பவ்மிக்.)
இரண்டு: பெங்களூர் நடனக் கலைஞர்கள் நிருபமாவும், ராஜேந்திராவும் வழங்கிய கதக் நடன நிகழ்ச்சியும் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக அமைந்திருந்தது. நிகழ்ச்சிக்குப் பிரதீப் ராவ் அவர்களின் பின்னணி இசை, நடனத்துக்குக் கூடுதல் பலமாக அமைந்திருந்தது.
குழு நடனத்தின்போது அத்தனை கலைஞர்களிடமும் தென்பட்ட ஒழுங்கும், பாந்தமான உடையும், ஒப்பனையும், வீசும் ஒளியும் பிரமிப்பூட்டின. சலங்கைகள் உண்மையில் கொஞ்சின! ராஜேந்திராவும் நிருபமாவும் வழங்கிய ராம்சரித மானஸ், ராஸலீலா, மீரா பஜன் மூன்றுமே கற்பனை வளமும் நயமும் மிகுந்தவையாக இருந்தன.
பாடுகிறவரும், பக்க வாத்தியக் கலைஞர்களும் மேடையில் ஒருபுறம் இருக்க, நடனம் ஆடுவதுதான் உயர்வானது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள், பதிவு செய்யப்பட்ட இசைகூட தரமான ஒலிபரப்பு மூலம் நிகழ்ச்சியை ஓகோ என்று உயர்த்திவிட முடியும் என்பதை இந்நிகழ்ச்சி நிரூபித்தது.
மூன்று:வயலின் குடும்பத்து வாத்தியங்கள் நான்கையும் சேர்த்து வாசிக்கும்போது, கேட்க எப்படி இருக்கும்?
ஒன்று செல்லோ. இன்னொன்று வயோலோ. மூன்றாவது வயலின். நான்காவதும் வயலின். இந்த நான்கையும் வாசிக்கும் கலைஞர்களையும் அந்த வாத்தியங்கள் எழுப்பும் ஒலியையும் குறித்து, முதலில் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் இளம் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்.
குன்னக்குடி வைத்தியநாதனின் புதல்வர் சேகர் - செல்லோ. பி.ஜே.சந்திரன் - வயோலோ. ஹேமந்த்ராஜ் - இரண்டாம் வயலின். வி.எஸ்.நரசிம்மன் - முதன்மை வயலின்.
குழுவின் தலைவர் வி.எஸ்.நரசிம்மன் வாசித்தவை அத்தனையும் நாம் கேட்டு ரசித்த கர்நாடக இசைப் பாடல்கள்தாம். ஆனால் அவர் வாசித்தபோது பின்னணி போல மற்ற மூன்று கலைஞர்களும் தத்தம் வாத்தியத்தில் அவர் வாசிப்பதைத் தொடரும்போது, லய வாத்தியமான மிருதங்கமோ, கஞ்சிராவோ இல்லாத குறையே தெரியவில்லை!
நரசிம்மனின் வாசிப்பில் அப்படி ஒரு துல்லியம். துளியும் பிசிறு இல்லாத வாசிப்பு.மதுரை மணி பிரபலப்படுத்திய "இங்கிலிஷ் நோட்'டைச் சிறிதாக மாற்றி வாசித்தபோது அதன் கவர்ச்சி செவிகளைக் குளிர வைத்தது. லால்குடியின் தில்லானா நிறைவு அம்சமாக அமைந்தது. நிகழ்ச்சி முடிந்து, எழுந்து நின்று அத்தனை பேரும் எழுப்பிய கரவொலி, கேட்க வந்த ரசிகர்களை அசர வைத்ததற்கு அடையாளமாக இருந்தது.
மூத்த கர்நாடக இசைக் கலைஞர் பி.எஸ்.நாராயணசாமி முதல் வரிசையில் அமர்ந்து நரசிம்மனின் வயலின் இசையைக் கூர்ந்து ரசித்து இறுதியில் கைதட்டிப் பாராட்டியது, புதுமையை வரவேற்கும் அவர் பண்புக்கு அடையாளமாக இருந்தது.