கிளிகளுக்கு இருப்பது போன்று இம்மீன் இனத்திற்கும் வாய்பகுதி இருப்பதால் இதனை கிளி மீன் என்கிறார்கள். சிறியதாக இருக்கும் போது ஒரு நிறத்திலும் பெரிதானவுடன் வேறு நிறத்திலும் மாறிக் கொள்ளும் தன்மையுடையது. பெரும்பாலான மீன்கள் நீலம்,பச்சை நிறங்களில்தான் காணப்படும். இம்மீனின் உணவுவகைகள்,சிறப்புகள் குறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் பல்லுயிர் பெருக்க திட்ட அலுவலர் அ.முருகன் கூறியதாவது..
உலகம் முழுவதும் 90 வகைகள் இருந்தாலும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில்13வகையான கிளிமீன்களே காணப்படுகின்றன.இதில் ஸ்கேரஸ் கோபான் என்ற வகை மீன்தான் மிக அதிகமாக மன்னார் வளைகுடா கடல்பகுதியில் வசித்து வருகின்றது.
கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் பாறைகள் அதிகம் உள்ள பகுதிகளில் இவைகள் வசித்தாலும் அவற்றில் வளரும் பாசிகளைத் தின்று உயிர் வாழ்கின்றன.பாறைகளில் உள்ள கடல்பாசிகளை சுரண்டி தின்னும் வகையில் இம்மீன்களுக்குப் பற்கள் மிகவும் கூர்மையானதாக இருக்கின்றன.
பாசிகளைச் சுரண்டி தின்று பவளப்பாறைகளைப் பளபளப்பாக வைத்துக் கொண்டு அவற்றை தூசிகள் படியாமலும் பாதுகாக்கின்றன. இதனால் பவளப்பாறைகளில் உயிர்வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் அதிகமாக வளர இம்மீன்கள் பெரிதும் துணைபுரிகின்றன.
கிளி மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் இவற்றில் சிறிய மீன்கள் வண்ண மீன் வளர்ப்புக்கும் பெரிய மீன்கள் உணவுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மீன் 30கிலோ வரை எடையுள்ளதாகவும் இருக்கும். சுமார் 50செ.மீ வரை வளரும் இந்த மீனைஇந்தியாவில் நல்ல முறையில் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
இம்மீனின் இறைச்சியை ஜப்பான் நாட்டில் மிக அதிக விலை கொடுத்தும் வாங்க தயாராக இருக்கின்றனர் .ஏனெனில் இம்மீனின் இறைச்சி மிகவும் சுவையானதாக இருக்கிறதாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, மண்டபம் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இம்மீன்களை மீனவர்கள் கடலில் கூடுகளை வைத்துத்தான் அதிகமாக பிடிக்கின்றனர். தூண்டில், இழுவலை போன்றவற்றிலும் இம்மீன்கள் மாட்டிக் கொள்கின்றன.
பவளப்பாறைகள் மற்றும் பாறைகளில் வளரும் பாசிகள்,கடற்புற்கள் போன்றவற்றை மட்டும் தின்று வாழும் இம்மீன்கள் சுத்த சைவம்.அசைவம் சாப்பிடுவதில்லை.
கடலில் பெண் மீன்கள் முட்டைகளை சங்கிலித் தொடர் போல் தண்ணீருக்கு மேல் பீய்ச்சியடிக்கும் அதே நேரத்தில் ஆண் மீன்கள் அவற்றின் விந்துவையும் அதே நேரத்தில் பீய்ச்சியவுடன் இம்மீனின் முட்டைகள் குஞ்சுகளாக மாறுகின்றன. இம்மீன்களின் முட்டைகள் சில கடல் அலைகளால் கரைக்கு ஒதுக்கப்பட்டு சேதமடைவதாலும் இவைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவே உள்ளது.
இம்மீன்களின் வாயிலிருந்து வெளியில் வரும் உமிழ்நீரை தூங்கும் போது உமிழ்ந்து தனக்கு அருகில் தன்னைச் சுற்றி இருக்குமாறு வைத்துக் கொண்டு தூங்குகிறது.
தூங்கும் நேரத்தில் இம்மீன்களின் அருகில் ஏதேனும் உயிரினங்கள் வந்தாலோ அல்லது தாக்க முற்பட்டாலோ அதனைச் சுற்றி இருக்கும் உமிழ்நீர் இதற்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விடுவதால் உடனடியாக சுதாரித்துக் கொண்டு எழுந்து விடுகிறது.
இம்மீன்களில் பெரும்பாலானவை பிறக்கும் போது பெண்ணாக பிறந்தாலும் பருவம் அடையும் போது ஆணாக மாறிவிடுகிறதாம் இந்த அழகிய ஜீவன்.
சி.வ.சு.ஜெகஜோதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.