முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கம்ப்யூட்டர் சுரங்கம்... செம்மொழி அரங்கம்!

ஒரு பெரிய திருவிழா நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன்... அது வெற்றி பெற ஆயிரக்கணக்கானோரின் பங்களிப்பு அவசியம். கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் அப்படித்தான்... அதிலுள்ள நு

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:21 PM
பகிர்:

ரு பெரிய திருவிழா நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன்... அது வெற்றி பெற ஆயிரக்கணக்கானோரின் பங்களிப்பு அவசியம். கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் அப்படித்தான்... அதிலுள்ள நுழைவு வாயிலையும், உள் அரங்கமொன்றையும் தனது கம்ப்யூட்டரில்  வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்

ஆர்.அன்பரசி.

சென்னை சாலிகிராமத்தில் "எக்ஸ்வொய்இஸட் ஆக்ஸிஸ்' என்ற பெயரில் 3 டி அனிமேஷன் பயிற்சி

வகுப்புகளை எடுத்து வரும் அவரிடம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்க வடிவமைப்பைக் கணினியில் செய்து கொடுத்த அனுபவத்தைப் பற்றிக் கேட்டோம்...

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான அரங்க வடிவமைப்பைக் கணினியில் வடிவமைத்துத் தரும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

நான் 96- லிருந்தே இன்ட்டீரியர் டிசைன் துறைக்குத் தேவையான வடிவமைப்புகளைக் கணினியில் வடிவமைத்துத் தந்து கொண்டிருக்கிறேன். "சன் சுட்டி' டிவி சேனல்களுக்கான சில செட்களை நாங்கள்தான் கணினியில் வடிவமைத்துக் கொடுத்தோம். அதுபோல மருத்துவமனைகளின் உள் அமைப்பு, வெளி அமைப்பு போன்றவற்றிற்கெல்லாம் கணினியில் வடிவமைப்புச் செய்து தந்திருக்கிறோம்.

உலகச் செம்மொழி மாநாட்டுக்காகத் "தஞ்சை சிவா அன்ட் கோ' என்ற அரங்கம் அமைக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த தஞ்சை சிவா எங்களை அணுகினார். அவருக்காக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான அரங்க வடிவமைப்பை அவருடைய ஆலோசனையின்படி, திட்டமிடலின்படி கணினியில் செய்து தந்தோம்.

பிரதமர் போன்ற சிறப்பு விருந்தினர்கள் நுழையும் நுழைவு வாயில் மற்றும் உள் அரங்கம் ஒன்றையும் நாங்கள் கணினியில் வடிவமைத்துத் தந்தோம். அதைப் பெற்றுக் கொண்ட தஞ்சை சிவா, முதலமைச்சர், துணை முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி போன்றோரிடம் எல்லாம் அதைக் காட்டி, தேவையான திருத்தங்களைக் கேட்டு, எங்களிடம் சொன்னார்.

நாங்கள் அவர் சொல்லிய திருத்தங்களைச் செய்து மேலும் வடிவமைப்பை அழகுபடுத்தி அவரிடம் கொடுத்தோம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காகக் கணினியில் 3 டி அனிமேஷனில் நாங்கள் இந்த வடிவமைப்பைச் செய்து  தந்தது எங்களுக்குப் பெருமையாக உள்ளது.

என்னென்ன திருத்தங்களைச் செய்து கொடுத்தீர்கள்?

நுழைவு வாயில் அரங்க அமைப்பில் எந்த இடத்தில் செடி வைக்கலாம் என்பதில் மாறுதல் இருந்தது. அது போல கொடி வைப்பது, லோகோ வைப்பது, குறள் இடம் பெறும் இடம் ஆகியவற்றிலும் திருத்தங்கள் இருந்தன. இந்தத் திருத்தங்களைச் செட் அமைப்பதற்கு முன்பே செய்துவிட வேண்டும். செட் அமைத்துவிட்டால் அதை மாற்ற முடியாது. எனவே முதலிலேயே திருத்தங்களைக் கொடுத்துவிடுவார்கள்.

நீங்கள் என்னதான் கணினியில் வடிவமைத்துக் கொடுத்தாலும், அதை அடிப்படையாக வைத்து நடைமுறையில் செட் போடும் போது பிரச்னைகள் வருமே?

உண்மைதான். தஞ்சை சிவா மிகவும் சின்சியரான மனிதர். அவர் கணினியில் வடிவமைப்பு முடியும் வரை எங்கள் பக்கத்தில் இருந்து பல ஆலோசனைகள் சொல்லி வடிவமைப்பைச் செய்து கொண்டு போனார்.

 நாங்கள் நுழைவு வாயிலின் முகப்பில் மூங்கில் மிகவும் வளைந்திருப்பது போல வடிவமைத்திருந்தோம். ஆனால் அந்த அளவுக்கெல்லாம் மூங்கிலை வளைக்க முடியாது என்று அவர் சொன்ன பின்பு சிறிது மாற்றியமைத்தோம்.

அதுபோல உள் அரங்க அமைப்பில் மேடையில் இருந்து எவ்வளவு தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மேடையில் மைக் எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர் சொன்னார். இது 3 டி அனிமேஷனில் செய்யும் வடிவமைப்பு என்பதால், ஒரு பொருளின் உயரம், அகலம், ஆழம் எனப் பல பரிமாணங்களையும் தர முடியும்.

இந்த 3 டி அனிமேஷனில் இப்படி உள், வெளி அலங்காரங்களைத்தான் வடிவமைப்புச் செய்ய முடியுமா?

உள், வெளி அரங்க அமைப்பு மட்டுமில்லை. நிறைய வேலைகளுக்கு இந்த 3டி அனிமேஷன் பயன்படுகிறது. உதாரணமாக ஒரு புதிய இயந்திரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனுடைய ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை 3 டி அனிமேஷன் மூலம் செய்து காட்ட முடியும்.

மருத்துவத் துறையில் இதய நோய்க்கான மருத்துவம், அறுவைச் சிகிச்சை, ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு போன்ற பல விஷயங்களை 3டி அனிமேஷன் மூலம் செய்து காட்ட முடியும். புதிதாக ஒரு கட்டடம் கட்டப் போகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் வெளி அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? உள்ளே ஹால் எந்த அளவுக்கு இருக்க வேண்டும்? அறைகள் எப்படி இருக்க வேண்டும்? என்பன போன்ற பலவற்றை அவற்றின் அளவு உட்பட 3 டி அனிமேஷனில் வடிவமைக்க முடியும். இதைத் தவிர, காட்சி ஊடகத்திற்குத் தேவையான பல எஃபெக்ட்களையும் 3டி அனிமேஷனில் வடிவமைக்க முடியும்.

முழு கட்டுரையைப் படிக்க →