கோலத்திலிருந்து ஆரத்தி தட்டு வரை...
நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணங்களையும் இப்போது நடைபெறுகிற திருமணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய புது மாற்றங்கள் வந்திருப்பது தெரிய வரும். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஆரத்தி எடுப்பது ந
நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணங்களையும் இப்போது நடைபெறுகிற திருமணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய புது மாற்றங்கள் வந்திருப்பது தெரிய வரும். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஆரத்தி எடுப்பது நீண்டகாலமாக இருந்து வரும் ஒன்று.
ஆனால் ஆரத்தி எடுக்கும் தட்டுகளில் பல வண்ணத்தின் விதவிதமான வேலைப்பாடுகளைச் செய்து கண்ணைக் கவரும்விதங்களில் உருவாக்குவது சமீபகாலத்தில் அதிகரித்து வருகிறது. கண்ணைக் கவரும் கலைவேலைப்பாடு மிக்க ஆரத்தி தட்டுகளைச் செய்து வருகிறார் சென்னை சூளைப் பகுதியைச் சேர்ந்த யசோதா. கலை வேலைப்பாடுள்ள 70 க்கும் மேற்பட்ட ஆரத்தி தட்டுகளை வைத்திருக்கும் அவர், திருமண நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அவற்றை வாடகைக்குத் தருகிறார்.
இந்தக் கலையை எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்? எவ்வளவு நாட்களாகச் செய்கிறீர்கள்? இப்படி தட்டுகளில் கலை வேலைப்பாடுகளைச் செய்யும் எண்ணம் ஏன் வந்தது? என்று கேள்வி மேல் கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போனாம்.
புன்னகை முகம் மாறாமல் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...
""நான் முதலில் திருமண விழாக்களுக்காக இதைச் செய்ய ஆரம்பிக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள செங்காலம்மன் கோயிலில் நவராத்திரியின் போது தட்டில் தினம் ஒரு கோலம் போட்டுக் கொண்டு போனேன். இப்படி 9 நாள் தருவேன். அந்தக் கோலத்தில் ஜிகினா எல்லாம் போட்டுக் கொடுத்தேன்.
அதைப் பார்த்த கோயில் பூசாரி, ""இது மிக நன்றாக இருக்கிறது. திருமண விழாக்களுக்கு ஏன் இதை நீங்கள் கொடுக்கக் கூடாது?'' என்று கேட்டார். அப்படித்தான் இந்த ஆரத்தி தட்டுகள் செய்யும் எண்ணம் முதன் முதலில் தோன்றியது.
இருந்தாலும் மிக நுட்பமாக எப்படிச் செய்வது என்று தெரியவில்லை.
அப்போது இந்தப் பகுதியில் நடக்கும் ஐயப்ப பூஜையில் ஐயப்பனுக்கு அலங்காரம் செய்திருப்பதைப் பார்த்தேன். ஐயப்பனுக்கு சந்தனம் தடவி அதன் மேல் ஜிகினா போட்டு அலங்காரம் செய்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் தட்டுகளில் அலங்காரம் செய்வதற்கான அடிப்படை கிடைத்தது.
நான் சிறுவயதில் எல்லாம் நன்றாகக் கோலம் போட்டது கிடையாது. திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு வந்ததும் மாமியார்தான் கோலம் போடக் கற்றுக் கொடுத்தார். அவர்களிடம் கற்றதை வைத்துத்தான் தட்டில் கோலம் போட்டேன். இந்தப் பகுதி கவுன்சிலர் சார்பில் கோலப் போட்டி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பரிசு பெற்றேன். இதற்கு மேல் இந்த கலை நுட்ப வேலைகளுக்கு பெரிய பயிற்சி எல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் எனது ஆரத்தித் தட்டுகளில் காணப்படும் கலை அழகைப் பார்க்கிறவர்கள் யாரும் இதை நம்பமாட்டார்கள்.
ஆரத்தி தட்டுகளில் மயில், கடவுள் படங்கள், பூக்கள் என பலவிதமான டிசைன்கள் செய்திருக்கிறேன். தட்டில் பசையைத் தடவி அதன் மேல் இந்த கலை நுட்ப வேலைகளைச் செய்வேன். மணிகள், ஜிகினா, முத்து,நகைகள் எல்லாம் வைத்து இந்த அலங்கார வேலைகள் நடக்கும்.
இதில் கொஞ்சம் பெரிய தட்டில் மணப்பெண், மணமகன் பெயர்களையும், விரும்பினால் அவர்களுடைய புகைப்படங்களையும் ஒட்டித் தருவேன்.
இந்த ஆரத்தி தட்டுகளை திருமணத்திற்கு முதல் நாள் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்குக் கொண்டு செல்வேன். வேலைப்பாடு மிகுந்த இந்த அலங்காரத் தட்டில் பெரிய அகல்களை வைத்து ஆரத்தி எடுப்பார்கள். ஆரத்தி எடுத்து முடிந்ததும் எல்லாரும் பார்த்து ரசிக்கும்வகையில் எல்லாத் தட்டுகளையும் பார்வைக்கு வைப்பேன். வெறும் தட்டுகளை மட்டும் வைக்காமல் அழகழகான பொம்மைகளையும் வைப்பதால், திருமணத்திற்கு வரும் குழந்தைகள் உள்பட எல்லாரும் மிகவும் சந்தோஷமாகப் பார்ப்பார்கள்.
வீட்டில் இந்த ஆரத்தித் தட்டுகளைச் செய்ய எல்லாரும் ஒத்துழைப்புக் கொடுக்கிறார்கள். எனது மருமகள்கள் வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்துக் கொள்வதால் நான் முழுமூச்சாக இதில் ஈடுபட முடிகிறது.
என்னைப் போலவே எனது மகள் உமா சேகரும் இப்படிப்பட்ட கலைநுட்பமான வேலைகள் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார். நான் ஆரத்தித் தட்டுகளில் கலையழகு மிளிரும் அலங்கார வேலைகளைச் செய்கிறேன்.
எனது மகளோ கண்ணைக் கவரும் ஃபேஷன் ஜுவல்லரிகள் செய்து வருகிறார்'' என்றார்.