முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

புதுமைப் பெண்கள்!

தன் வீடு, தன் குடும்பம் என்ற எல்லையைத் தாண்டி, சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்கும் பெண்கள் பெருகிக் கொண்டிருப்பதற்கு இன்னொரு சான்று சிவகாசி வேலாயுதம் ரஸ்தா எக்ஸ்னோரா. விருதுந

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:56 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 8:35 PM

தன் வீடு, தன் குடும்பம் என்ற எல்லையைத் தாண்டி, சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் இயங்கும் பெண்கள் பெருகிக் கொண்டிருப்பதற்கு இன்னொரு சான்று சிவகாசி வேலாயுதம் ரஸ்தா எக்ஸ்னோரா.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அப்படியோர் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமுடைய எட்டு பெண்கள் இணைந்து,இந்த அமைப்பை 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கினர்.

இந்த அமைப்பின் நோக்கம் சிவகாசியைப் பசுமை நகராகவும், தூய்மை நகராகவும் மாற்ற வேண்டும் என்பதே. இதன் தலைவராக பிரேமா பால்ராஜ், செயலாளராக லதா அபிரூபனும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக ரஞ்சினி, எழில் முரளீதரன், காமினி கிரிதரன், சரிதா கிங்ஸ்லி, பீனா ராஜாசிங், ஸ்ரீதேவி ஆகியோர் உள்ளனர்.

Advertisement

இவர்கள் சிவகாசி நேஷனல் காலனி, வேலாயுதம் சாலை, அய்யப்பன் காலனி,ரயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை  நட்டுப் பராமரித்து வருகிறார்கள்.

மரக்கன்றுகளை நடுவதோடு விட்டுவிடாமல், அவற்றுக்குப் பாதுகாப்பாக வேலி அமைத்து, சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறார்கள்.

வேலாயுதம் சாலையின் நடுவே ரூ. 1.25 லட்சம் செலவில் பூச்செடிகளை நட்டுப் பராமரித்து வருகிறார்கள். இதுகுறித்து, அந்த அமைப்பின் செயலாளர் லதா அபிரூபனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

""நாங்கள் நான்குவிதமாக எங்களது செயல்பாடுகளை வடிவமைத்துள்ளோம். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, சிவகாசி பகுதியில் உள்ள 10 பள்ளிகள்,7 பாலிடெக்னிக்குகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் எக்ஸ்னோரா அமைப்புகளைத் தொடங்கி உள்ளோம்.

பசுமை எக்ஸ்னோரா பிரிவு மூலம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறோம். தூய்மை எக்ஸ்னோரா பிரிவு மூலம், சாலையின் இருபுறமும் சேரும் மணலை அகற்றுவது உள்ளிட்ட பணிகளைச் செய்கிறோம். ஹோம் எக்ஸ்னோரா என்ற பிரிவில், வீடுகளில் சேரும் குப்பைகளை மக்க வைத்து உரமாக மாற்றி செடிகளுக்கு இட வேண்டும் எனக் கூறி வருகிறோம். இதனால், வீட்டுக் குப்பைகளை வெளியே வீச வேண்டியதில்லை. வீட்டில் சேரும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளைச் சேர்த்து வைத்து விற்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதில், சிறப்பாகச் செயல்படும் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளித்து

வருகிறோம்.

மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பதில், பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மரக்கன்றுகளைச் சுற்றி கம்பிவேலி அமைத்தால் திருடிச் சென்றுவிடுகிறார்கள். மரச் சக்கைகளை அமைத்தால் அடுப்பெரிக்கப் பிடுங்கிச் செல்கின்றனர். மரக்கன்றுகளைக் கால்நடைகள் மேய்ந்துவிடாமல் கண்காணிக்க வேண்டும்.

எனினும், முயற்சியைத் தளரவிடாமல் மரக்கன்றுகள் நடும் பணி தொடர்கிறது. சில இடங்களில், அவை செழித்து வளர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் மனநிறைவைத் தருகிறது.

ஆயிரம் ஆண்டுகளானாலும் மண்ணில் மக்கிப் போகாத தன்மையுடைய அபாயகரமான பொருள் ப்ளாஸ்டிக்.

ஆகவே,தற்போது பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் செய்து வருகிறோம்.  பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பொதுமக்களுக்கு விளக்கி வருகிறோம். இயற்கை உரமான மண்புழு உரத்தை, நான் தனிப்பட்ட முறையில் தயாரித்து விவசாயிகளுக்கு அளித்து வருகிறேன். 45 நாள்களுக்கு ஒருமுறை 9 டன் உரம் தயாரிக்கப்படுகிறது '' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.